நமக்கு அரசாங்கம் உண்மையிலேயே தேவையாயிருக்கிறதா?
அனார்க்கி: எந்த விதமான அரசியல் அதிகாரமும் இல்லாமல், தங்களுக்கு முழு சுயாதீனத்தை உரிமைகொண்டாடும் அரசாங்கம் இல்லாத தனி நபர்களால் ஆன ஒரு சமுதாயத்தை விளைவிக்கிறது.
கிரேக்க தத்துவசாஸ்திரியான அரிஸ்டாட்டில், எல்லாவிதமான மனித அரசாங்கங்களும், தன்னில்தானே நிரந்தரமற்றதாயும் மாற்றியமைப்பதாயும் இருக்கிறது என்று சொன்னார். ஓர் எழுத்தாளன் சொல்வதாக அவர் சாதிக்கும் வண்ணம் சொல்லுகிறார்: “எல்லா அரசாங்கங்களின் நிரந்தரத் தன்மை, காலத்தின் அரிக்கும் தன்மையால் கறைபடுத்தப்படுகிறது.”
இப்படிப்பட்ட நிலைமைகளின் காரணமாக, அரசாங்கம் எதுவுமே தேவையில்லை என்று சிலர் பிரஸ்தாபிப்பதில் ஆச்சரியமில்லை, அல்லது கூடுமானால் சிறிய அரசாங்கமே போதும் என்கிறார்கள். ஆனால் ‘அரசாங்கம் வேண்டாம்’ என்பதை சிபாரிசு செய்வது உண்மையாகவே ‘அனார்க்கி’யை அழைப்பதாகும், ‘ஆளுபவர் இல்லாத’ என்று அர்த்தம்கொள்ளும் கிரேக்க பதத்திலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஃபிரஞ்சு அரசியல் எழுத்தாளராகிய பியர்-ஜோசப் ஃப்ரெளதன் என்பவரால் சரியாக 152 ஆண்டுகளுக்கு முன் 1840-ல் ‘அனார்க்கி’ என்ற இந்தப் பதம் உபயோகப்படுத்தப்பட்டது. என்றபோதிலும் அனார்க்கிஸம் என்ற தத்துவம் ஆங்கிலேய ஜெரார்ட் வின்ஸ்டான்லி என்பவரால் 200 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் விவரிக்கப்பட்டுள்ளபடி, “வின்ஸ்டான்லி வகுத்து கொடுத்தவைகள் பின்னர் அனார்க்கிஸ்டுகளின் அடிப்படை நியமங்களாக ஆயின: அதிகாரம் கறைப்படுகிறது; சொத்து, சுயாதீனத்தோடு ஒத்துப்போகாது; அதிகாரம், சொத்து என்ற இரண்டுமே குற்றச்செயல்களைப் பிறப்பிக்கின்றன; வேலையும் அதன் உற்பத்திப் பொருட்களும் பங்குகொள்ளப்படுகின்ற ஆளுபவர் இல்லாத ஒரு சமுதாயத்தில் மட்டும்தான், மனிதர்கள் தங்கள் மீது கட்டாயப்படுத்தப்படுகிற சட்டங்களின்படி செயல்படுகிறவர்களாக இல்லாமல் தங்களுடைய மனச்சாட்சியின்படி செயல்படுகிற சுயாதீன, சந்தோஷமுள்ள மக்கள் இருக்க முடியும்.”
ஆனால் ஒவ்வொரு தொகுதியும் தாங்கள் செயல்படுவதற்குரிய ஒரு திட்டம் அவசியம் என்று அனுபவம் கற்பிக்கவில்லையா? “பண்டைய காலமுதற்கொண்டு” என்று தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறது, “ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஏதோ ஒருவிதமான அரசாங்கம் ஒரு முக்கிய பாகமாக இருந்து வந்திருக்கிறது.” அது விவரிக்கிறது, “மக்களின் ஒவ்வொரு தொகுதியும்—ஒரு குடும்பத்திலிருந்து ஒரு நாடு வரையாக—தன்னுடைய அங்கத்தினர்களின் வாழ்க்கையை ஆட்கொள்ள நடத்தை விதிகள் இருந்திருக்கின்றன.” தன் அங்கத்தினர்களின் நலனுக்காக அதனுடைய நோக்கங்களை வேறு எந்த முறையில் அது சாதிக்க முடியும்?
ஆகவே பெரும்பாலான ஜனங்கள் சில ஸ்தாபனங்கள் பொதுநலத்துக்காக அதிகாரத்தை செலுத்தவும், தீர்மானங்களை எடுக்கவும் சட்டப்பூர்வமான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உடனடியாக ஏற்றுக்கொள்கின்றனர். வின்ஸ்டான்லி சொன்ன பிரகாரம், சமூகத்துக்காக தீர்மானங்களை எடுக்க ஓர் அரசாங்கம் இல்லை என்றால், தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் தன் சொந்த மனச்சாட்சியின் மனச்சாய்வுகளைப் பின்பற்றும்படியாக விடப்படுவார். அது ஒற்றுமையை வளர்க்குமா? அல்லது ஒவ்வொரு தனி நபரும் தன் சொந்த சிரத்தைகளைத் தொடரும் போக்கை உடையவர்களாய் அநேகமாக மற்றவர்களின் சட்டப்பூர்வமான சம உரிமைகளுக்கு கேட்டை விளைவிக்கும்படியாக இருக்குமல்லவா?
அனார்க்கியை பரிசோதனை செய்துபார்த்ததில், அது மனிதகுலத்தின் நன்மையை மேம்படுத்தச் செய்வதில் தோல்வியே அடைந்துள்ளது. சமூகத்தின் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, தங்களை அழிப்பதாக எண்ணப்படுகிறவைகளை அழிக்கும் 20-ம் நூற்றாண்டு பயங்கரவாதிகளின் முயற்சிகளும் கூட நல்லவைகளைக் காணவில்லை.
சுருக்கமாக சொன்னால், ‘அரசாங்கம் வேண்டாம்’ என்பது குழப்பத்தை வருவிப்பதாகும். ஆகவே கேள்வியானது, ‘அரசாங்கம் வேண்டுமா அல்லது அரசாங்கம் வேண்டாமா’ என்பது அல்ல, அதற்கு மாறாக ‘நல்ல பலன்களுக்காக எப்படிப்பட்ட அரசாங்கம் வேண்டும்’ என்பதே ஆகும்.
மனித அரசாட்சியின் ஆரம்பம்
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஏதேன் தோட்டத்தில் மனிதனுக்காக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது கடவுளுடைய அரசாங்கமே ஆகும். மனிதகுலம் தன் மீது சார்ந்திருக்க வேண்டும், பைபிளில் பின்பு இவ்வாறு சொல்லப்பட்ட நியமத்துக்கு இசைவாக காரியங்களை நடத்துவதில் அவருடைய வழிநடத்துதலின் மீது சார்ந்திருக்க வேண்டும், என்பதை சிருஷ்டிகரானவர் அறிவுறுத்தினார்: “மனுஷனுடைய நடையை நடத்துவது அவனுடைய வசத்தில் இல்லை.” (எரேமியா 10:23, NW) அல்லது ஒரு சீன பழமொழி அழுத்தி சொல்லுகிறபடி: “பரலோகத்தின் உதவியில்லாமல் மனிதன் ஓர் அங்குலமுங்கூட நடக்க முடியாது.”
முதல் மனித ஜோடி அதற்கு எதிராக முடிவெடுத்தனர். ‘பரலோகத்தின் உதவியில்லாமல்’ நடக்க அவர்கள் தெரிந்துகொண்டு அதற்குப் பின் கடவுள் அவர்களுக்கும் கொடுத்த பரதீஸை விட்டு வெளியேறியவர்களாய் நடந்துசெல்ல வற்புறுத்தப்பட்டனர். பிறகு மனிதகுலம் வரை ஆரம்பிக்க, இந்த ஏற்பாட்டிற்குள்ளே சமாதானத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த அரசாங்க சட்டங்களின் அவசியமும் அதிகமாய் தேவைப்பட்டது. கடவுளுடைய அரசாட்சி தள்ளப்பட்ட பின்னர், அவசியமானபடி, மனித அரசாட்சி அவ்வெற்றிடத்தை நிரப்பினது.—ஆதியாகமம் 3:1-5.
எல்லாமே ஒன்றுபோல்—என்றாலும் வித்தியாசமானது
இந்தத் துரதிருஷ்டமான ஆரம்பத்திலிருந்து மனித அரசாங்கங்கள் அநேக வகைகளை எடுத்துக்கொண்டுள்ளன. அவைகள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும் சரி, அதிக சிக்கலாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாமே சில காரியங்களில் ஒத்திருக்கின்றன. அவைகளில் சில பின்வருமாறு:
அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களின் தேவைகளை கவனிக்கின்றன. அவ்விதமாகச் செய்யத் தவறும் அரசாங்கம், ஆளுவதற்கு தகுதியற்றதாகிவிடுகிறது.
அரசாங்கங்கள் நடத்தைக்குரிய விதிகளை அமைக்கின்றன, அதன் குடிமக்கள் அதைக் கைக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில், தண்டனைப் பெறுவதில் விளைவடைகிறது. இந்த விதிமுறை சட்டங்களையும் விதிகளையும் கொண்டதாய், அநேக நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்த பாரம்பரியங்களையும் உடையதாக இருக்கிறது. பெரும்பாலும் குடிமக்கள் இந்த நடத்தைக்குரிய விதிமுறைகளுக்கு, கீழ்ப்படிவதனால் உண்டாகும் பலன்களை அறிந்தோ, ‘செய்ய வேண்டிய காரியம் அதுதான்’ என்பதனாலோ, மற்றவர்களுடைய அழுத்தத்தின் காரணமாகவோ கீழ்ப்படிகிறார்கள், அல்லது வெறுமென அப்படி செய்யாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்பதன் காரணத்தினாலோ, கீழ்ப்படிகிறார்கள்.
அரசாங்கங்கள் சட்டமன்ற, செயல்படுத்தும், நீதிவிசாரணை சேவைகளை ஏதோ ஒருவிதமான அமைப்பு திட்டத்தின் கீழ் செய்கின்றன. சட்டங்கள் இயற்றப்பட்டு, நீதிநியாயம் வழங்கப்பட்டு, திட்டங்களை செயல்படுத்துகின்றன.
வியாபார உலகத்துடன் அரசாங்கங்கள் பலமான பொருளாதார பிணைப்புகளை காத்துவருகின்றன.
அரசாங்கங்கள் ஏதோ ஒரு விதமாக மதத்தோடும் கூட தங்களை இணைத்துக்கொள்கின்றன, சில மற்றவைகளைப் பார்க்கிலும் இன்னும் நெருக்கமாக பிணைத்துக்கொள்கின்றன. தங்களுடைய ஆட்சிக்கு ஏதோ ஒருவிதமான சட்டப்பூர்வ அம்சத்தை உண்டாக்கிக்கொள்ள—“பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற” அவ்விதம் செய்கின்றன, அப்படிச் செய்யவில்லை என்றால் அதற்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்காது.
சந்தேகமில்லாமல் அரசாங்கங்களுங்கூட வேறுபடுகின்றன. அரசியல்வாத ஞானிகள் அவைகளைப் பலவிதங்களில் பிரித்து பகுக்கின்றனர். தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இவ்விதமாக எழுதுகிறது, “உதாரணமாக, ஆட்சி செய்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசாங்கங்களிடையே குறிப்பான வித்தியாசம் இருக்கிறது. அரசாங்கம் ஒரு மனிதனைக் கொண்டு (முடியரசு அல்லது கொடுங்கோலாட்சி) சிலரைக் கொண்ட அரசாங்கம் (உயர்குடிஞர் ஆட்சி அல்லது சிலவராட்சி) அநேகர்கொண்ட அரசாங்கம் (ஜனநாயகம்).”
சில சமயங்களில் அரசாங்கங்கள் தங்களுடைய மூல ஸ்தாபனங்களைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றன. (பார்லிமென்டரி, மந்திரிகளினால் ஆன அரசாங்கம்), தங்களுடைய அரசியல் அதிகாரத்தின் அடிப்படை நியமங்களின் பிரகாரம் (பாரம்பரியம், கவர்ச்சிகரமான ஆட்களைக்கொண்டு) தங்களுடைய பொருளாதார அமைப்பைப் பொறுத்து அல்லது தங்களுடைய ஆட்சியுரிமையின் உபயோகம் அல்லது துர்ப்பிரயோகத்தைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றனர். இந்த என்சைக்ளோபீடியா சொல்லுகிறது: “எதுவுமே பரந்த அளவில் இல்லை என்றாலும் இந்த நியமங்கள் ஒவ்வொன்றின் பகுப்பாய்வுக்கும் சிறிது காரணமிருக்கிறது.”
எவ்விதமாக அவைகளை நாம் பகுத்தபோதிலும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால், மனித அரசாட்சியின் பல்வேறு வகைகளும்—எதுவுமே விடப்படாமல்—இப்பொழுது தராசிலே நிறுக்கப்பட்டுவிடுகின்றன. அது நம் எல்லாருக்குமே வெகுவாக பாதிக்கும் விளைவுகளை உடையதாயிருக்கும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
இன்று வரையாக ஆண்டு வருகிற அரசாங்க அதிகாரிகளைக் குறித்து எழுதுகிறவராய் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.” (ரோமர் 13:1, 7) ஆகவே பைபிளின் வழிகாட்டுதலை முழு மனச்சாட்சியோடு பின்பற்ற விரும்பும் கிறிஸ்தவர்கள், எல்லாவற்றிற்கும் மேலான கடவுளுடைய சட்டங்களை மீறும்படி அழைக்கப்பட்டாலன்றி, அவர்கள் வாழ்ந்துவரும் தேசத்தின் எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறார்கள்.
[பக்கம் 7-ன் படம்]
குழப்பத்தை தவிர்ப்பதற்கு—போக்குவரத்தை கட்டுப்படுத்துவது போல—அரசாங்கமும் அவசியமாக இருக்கிறது