உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwtsty ரோமர் 1:1-16:27
  • ரோமர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ரோமர்
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
ரோமர்

ரோமருக்கு எழுதப்பட்ட கடிதம்

1 ரோமில் இருக்கிற கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் கிறிஸ்து இயேசுவின் அடிமையாகிய பவுல் எழுதுவது:

பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.

2 நீங்கள் எல்லாரும் கடவுளுடைய அன்பைப் பெற்றவர்கள், பரிசுத்தவான்களாவதற்கு அழைப்புப் பெற்றவர்கள். நானும் அப்போஸ்தலனாவதற்கு அழைப்புப் பெற்றவன், கடவுளுடைய நல்ல செய்தியை அறிவிப்பதற்கு நியமிக்கப்பட்டவன்.*+ 3 கடவுள் தன்னுடைய மகனைப் பற்றிய அந்த நல்ல செய்தியைத் தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் பரிசுத்த வேதாகமத்தில் முன்கூட்டியே வாக்குறுதி கொடுத்திருந்தார். 4 அந்த மகன் தாவீதின் சந்ததியில்+ மனிதனாகப் பிறந்தார். 5 உயிரோடு எழுப்பப்பட்டதன் மூலம்+ கடவுளுடைய மகன்+ என்று பரிசுத்த சக்தியின் வல்லமையால் நிரூபிக்கப்பட்டார். அந்த மகன்தான் நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்து. 6 அவருடைய பெயர் புகழப்படும்படி, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் அவர்மேல் விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிய வேண்டும்.+ இதற்காகத்தான் அவர் மூலம் அளவற்ற கருணையையும் அப்போஸ்தலப் பணியையும் நாங்கள் பெற்றோம்.+ 7 மற்ற தேசத்து மக்கள் மத்தியிலிருந்து நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

8 முதலாவதாக, உங்கள் எல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 9 நான் உங்களுக்காக எப்போதும் ஜெபம் செய்கிறேன்.+ கடவுளுடைய மகனைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதன் மூலம் நான் முழு இதயத்தோடு பரிசுத்த சேவை செய்துவருகிற கடவுள்தான் இதற்குச் சாட்சி. 10 கடவுளுக்கு விருப்பமானால் இப்போதாவது நான் உங்களிடம் நல்லபடியாக வந்துசேர வேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கிறேன். 11 உங்களைப் பார்ப்பதற்கும், கடவுள் தரும்* அன்பளிப்பைக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துவதற்கும் ஏங்குகிறேன். 12 சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும்+ என்று ஏங்குகிறேன்.

13 சகோதரர்களே, மற்ற தேசத்தார் மத்தியில் என் ஊழியத்துக்குப் பலன் கிடைத்ததுபோல் உங்கள் மத்தியிலும் பலன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் உங்களிடம் வருவதற்குப் பல தடவை விரும்பினேன். ஆனால், ஒவ்வொரு தடவையும் தடங்கல் ஏற்பட்டது; இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 14 கிரேக்கர்களுக்கும் கிரேக்கர்களாக இல்லாதவர்களுக்கும், ஞானம் உள்ளவர்களுக்கும் ஞானம் இல்லாதவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். 15 அதனால், ரோமில் இருக்கிற உங்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.+ 16 நல்ல செய்தியைச் சொல்வதற்கு நான் வெட்கப்படுவதில்லை.+ ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது. முதலில் யூதர்களையும்+ பின்பு கிரேக்கர்களையும்,+ சொல்லப்போனால், விசுவாசம் வைக்கிற எல்லாரையும்,+ மீட்பதற்கு அவர் செய்திருக்கிற ஏற்பாடாக இருக்கிறது. 17 அந்த நல்ல செய்தியின் மூலம் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார், இதை விசுவாசமுள்ளவர்கள் பார்க்கிறார்கள்,+ இதனால் அவர்களுடைய விசுவாசம் பலப்படுகிறது. ஏனென்றால், “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

18 சில ஆட்கள் உண்மையை அநியாயமாக மூடிமறைக்கிறார்கள், எல்லா விதமான கடவுள்பக்தியற்ற செயல்களையும் அநீதியான செயல்களையும் செய்கிறார்கள்,+ அவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம்+ பரலோகத்திலிருந்து வருகிறது. 19 ஏனென்றால், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவற்றைக் கடவுளே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.+ 20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. 21 கடவுளைப் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை அவர்கள் கொடுக்கவில்லை; அவருக்கு நன்றி சொல்லவுமில்லை. அவர்களுடைய யோசனை அர்த்தமில்லாததாக இருக்கிறது. அவர்களுடைய புத்திகெட்ட உள்ளம் இருண்டுபோயிருக்கிறது.+ 22 அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும் முட்டாள்களாக ஆனார்கள். 23 அழிந்துபோகாத கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக அழிந்துபோகிற மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகியவற்றின் உருவங்களை மகிமைப்படுத்துகிறார்கள்.+

24 அதனால், தங்களுடைய உள்ளத்திலுள்ள ஆசைகளின்படி அசுத்தமான உறவில் ஈடுபட்டுத் தங்களுடைய உடல்களை அவமானப்படுத்துவதற்குக் கடவுள் அவர்களை விட்டுவிட்டார். 25 அப்படிப்பட்டவர்கள் கடவுளைப் பற்றிய உண்மையை நம்பாமல் பொய்யை நம்பினார்கள். படைப்புகளை வணங்கி, அவற்றுக்குப் பூஜை செய்தார்கள், படைத்தவரையோ விட்டுவிட்டார்கள். அவருக்கே என்றென்றும் புகழ் சேருவதாக. ஆமென்.* 26 அதனால்தான், கேவலமான காமப்பசிக்கு+ இணங்கிவிடும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் மத்தியிலுள்ள பெண்கள் இயல்பான முறையில் உறவுகொள்வதை விட்டுவிட்டு இயல்புக்கு மாறான முறையில் உறவுகொண்டார்கள்.+ 27 அதேபோல், ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவுகொள்வதை விட்டுவிட்டு, ஒருவர்மீது ஒருவர் மோகம்கொண்டு காமத்தீயில் பற்றியெரிந்தார்கள். ஆண்கள் ஆண்களோடு ஆபாசமாக நடந்து,+ தங்களுடைய தவறுக்குத் தகுந்த தண்டனையை முழுமையாகப் பெற்றார்கள்.+

28 கடவுளைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லாததால், கெட்ட விஷயங்களை யோசிப்பதற்கும் முறைகேடான செயல்களைச் செய்வதற்கும் கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.+ 29 அவர்கள் எல்லா விதமான அநீதியும்+ கெட்ட குணமும் பேராசையும்+ தீமையும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். பொறாமையும்+ கொலைவெறியும்+ வஞ்சகமும் வன்மமும்+ நிறைந்தவர்களாக இருந்தார்கள். சண்டை சச்சரவு செய்கிறவர்களாகவும்,+ கிசுகிசுக்கிறவர்களாகவும்,* 30 புண்படுத்திப் பேசுகிறவர்களாகவும்,+ கடவுளை வெறுக்கிறவர்களாகவும், திமிர்பிடித்தவர்களாகவும், கர்வமுள்ளவர்களாகவும், ஆணவமுள்ளவர்களாகவும், சதித்திட்டம் தீட்டுகிறவர்களாகவும், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும்,+ 31 அறிவில்லாதவர்களாகவும்,+ வாக்குத் தவறுகிறவர்களாகவும், பந்தபாசம் இல்லாதவர்களாகவும், ஈவிரக்கம் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். 32 இப்படியெல்லாம் செய்துவருகிறவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும்+ என்ற கடவுளுடைய நீதியான தீர்ப்பை நன்றாகத் தெரிந்திருந்தும் அவற்றைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவற்றைச் செய்துவருகிற மற்றவர்களை மனதார ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

2 அதனால் சகோதரர்களே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி,+ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று நியாயந்தீர்த்துவிட்டு, சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. மற்றவர்களை நீங்கள் நியாயந்தீர்க்கும்போது, உங்களுக்கு நீங்களே தண்டனைத் தீர்ப்பு கொடுத்துக்கொள்கிறீர்கள். ஏனென்றால், அந்தச் செயல்களையே நீங்களும் செய்துவருகிறீர்கள்.+ 2 அப்படிப்பட்ட செயல்களைச் செய்துவருகிறவர்களுக்குக் கடவுள் கொடுக்கிற நியாயத்தீர்ப்பு சத்தியத்தின் அடிப்படையில் இருக்கும் என்று நமக்குத் தெரியும்.

3 சகோதரர்களே, அப்படிப்பட்ட செயல்களைச் செய்துவருகிறவர்களை நியாயந்தீர்க்கிற நீங்களே அவற்றைச் செய்யும்போது, கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று எப்படி நினைக்கிறீர்கள்? 4 கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார் என்று தெரியாமல்,+ அவருடைய மகா கருணையையும்+ சகிப்புத்தன்மையையும்+ பொறுமையையும்+ அலட்சியம் செய்கிறீர்களா? 5 நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் மனம் திருந்தாதவர்களாகவும் இருப்பதால், கடவுளுடைய கடும் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறீர்கள். அவர் தன்னுடைய நீதியான தீர்ப்பை வழங்கும் நாளில் அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவார்.+ 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+ 7 சோர்ந்துவிடாமல் நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் மகிமையையும் மதிப்பையும் அழியாமையையும்+ தேடுகிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தருவார். 8 ஆனால், சண்டைக்காரர்கள்மேலும் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாமல் அநீதிக்குக் கீழ்ப்படிகிறவர்கள்மேலும் அவர் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவார்.+ 9 கெட்ட செயல்களைச் செய்கிற ஒவ்வொருவனுக்கும் உபத்திரவத்தையும் மிகுந்த வேதனையையும் கொடுப்பார். முதலில் யூதர்களுக்கும் பின்பு கிரேக்கர்களுக்கும் அப்படிக் கொடுப்பார். 10 ஆனால், நல்ல செயல்களைச் செய்கிற ஒவ்வொருவனுக்கும் மகிமையையும் மதிப்பையும் சமாதானத்தையும் கொடுப்பார். முதலில் யூதர்களுக்கும்+ பின்பு கிரேக்கர்களுக்கும்+ அப்படிக் கொடுப்பார். 11 ஏனென்றால், கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.+

12 உதாரணத்துக்கு, திருச்சட்டம் இல்லாமல் பாவம் செய்த எல்லாரும் திருச்சட்டம் இல்லாமல் அழிந்துபோவார்கள்.+ ஆனால், திருச்சட்டத்தின்கீழ் பாவம் செய்த எல்லாரும் திருச்சட்டத்தால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.+ 13 திருச்சட்டத்தை வெறுமனே கேட்கிறவர்கள் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். திருச்சட்டத்தின்படி நடக்கிறவர்கள்தான் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+ 14 திருச்சட்டம் இல்லாத மற்ற தேசத்து மக்கள் இயல்பாகவே திருச்சட்டத்தின்படி நடக்கும்போதெல்லாம், அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும்,+ தங்களுக்குத் தாங்களே திருச்சட்டமாக இருக்கிறார்கள். 15 திருச்சட்டத்திலுள்ள விஷயங்கள் தங்களுடைய இதயத்தில் எழுதப்பட்டிருப்பதைச் செயலில் காட்டுகிறார்கள். தங்களுடைய மனசாட்சி சொல்கிற சாட்சியை யோசித்துப் பார்த்து, தாங்கள் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள். 16 நான் அறிவிக்கிற நல்ல செய்தியின்படி மனிதர்களுடைய ரகசியமான காரியங்களைக் கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் நியாயந்தீர்க்கப்போகிறார்,+ அப்படி நியாயந்தீர்க்கிற நாளில் இதெல்லாம் நடக்கும்.

17 நீங்கள் உங்களை யூதர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்,+ திருச்சட்டத்தைச் சார்ந்திருக்கிறீர்கள், கடவுளோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள். 18 திருச்சட்டம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதால்* கடவுளுடைய விருப்பம்* என்ன என்பதைத் தெரிந்திருக்கிறீர்கள்,+ மதிப்புமிக்க காரியங்களைப் பகுத்தறிந்துகொள்கிறீர்கள். 19 பார்வை இல்லாதவர்களுக்கு வழிகாட்டியாகவும், இருட்டில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சமாகவும், 20 புத்தி இல்லாதவர்களுக்குப் புத்திசொல்கிறவர்களாகவும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு ஆசிரியர்களாகவும் இருப்பதாக நம்புகிறீர்கள். அதோடு, கடவுளைப் பற்றிய அடிப்படை அறிவையும் உண்மையையும் திருச்சட்டத்திலிருந்து தெரிந்துவைத்திருப்பதாகவும் நம்புகிறீர்கள். 21 அப்படியிருந்தும், மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நீங்களே உங்களுக்குக் கற்பிக்காமல் இருக்கலாமா?+ “திருடாதே”+ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா? 22 “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது”+ என்று சொல்கிற நீங்களே மணத்துணைக்குத் துரோகம் செய்யலாமா? சிலைகளை அருவருக்கிற நீங்களே கோயில்களைக் கொள்ளையடிக்கலாமா? 23 திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்கிற நீங்களே அந்தச் சட்டத்தை மீறி கடவுளை அவமதிக்கலாமா? 24 ஏனென்றால் எழுதப்பட்டுள்ளபடியே, “உங்களால் மற்ற தேசத்து மக்கள் மத்தியில் கடவுளுடைய பெயர் நிந்திக்கப்படுகிறது.”+

25 உண்மையில், நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் மட்டும்தான்+ விருத்தசேதனத்தால்+ பயன் பெறுவீர்கள். திருச்சட்டத்தை மீறினால், விருத்தசேதனம் செய்திருந்தும் விருத்தசேதனம் செய்யாதவர்கள் போலத்தான் இருப்பீர்கள். 26 அதனால், விருத்தசேதனம் செய்யாதவன்+ திருச்சட்டத்திலுள்ள நீதியான விதிமுறைகளைக் கடைப்பிடித்தால், அவன் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் விருத்தசேதனம் செய்தவனாகவே கருதப்படுவான், இல்லையா?+ 27 உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிற ஒருவன் திருச்சட்டத்தை மீறுகிற உங்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்கிறான். ஏனென்றால், எழுதப்பட்ட அந்தச் சட்டத்தை வைத்திருந்தும், விருத்தசேதனம் செய்திருந்தும் நீங்கள் அந்தச் சட்டத்தை மீறுகிறீர்கள். 28 வெளிப்புறத்தில் யூதனாக இருக்கிறவன் யூதன் அல்ல;+ அவனுடைய உடலில் செய்யப்படுகிற விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல.+ 29 ஆனால், உள்ளத்தில் யூதனாக இருக்கிறவன்தான் யூதன்.+ அவனுடைய விருத்தசேதனம் கடவுளுடைய சக்தியால் இதயத்தில் செய்யப்படுகிறது,+ எழுதப்பட்ட சட்டத்தால் செய்யப்படுவதில்லை.+ அப்படிப்பட்டவன் மனிதர்களால் அல்ல, கடவுளால் புகழப்படுகிறான்.+

3 அப்படியானால், யூதனாக இருப்பதால் நன்மை இருக்கிறதா, விருத்தசேதனம் செய்வதால் பயன் இருக்கிறதா? 2 எல்லா விதத்திலும் நிறைய நன்மை இருக்கிறது. முதலாவதாக, யூதர்களிடம்தான் கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகள் ஒப்படைக்கப்பட்டன.+ 3 இருந்தாலும், சில யூதர்கள் விசுவாசம் வைக்கவில்லை! அதனால் என்ன? சிலர் விசுவாசம் வைக்காததால் கடவுள் உண்மையில்லாதவராக ஆகிவிடுவாரா? 4 இல்லவே இல்லை! மனிதர்கள் எல்லாரும் பொய்யர்களாக இருந்தாலும்+ கடவுள் உண்மையானவராக இருப்பார்.+ ஏனென்றால், “நீங்கள் நீதியுள்ளவர் என்பதை உங்களுடைய வார்த்தைகள் நிரூபிக்கும்.+ உங்களுடைய வழக்கில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. 5 ஆனாலும் சிலர், “நாம் அநீதியாக நடந்துகொள்ளும்போது, கடவுள் நீதியானவர் என்பது தெளிவாகத் தெரிகிறது, இல்லையா? அப்படியிருக்கும்போது, அவர் நம்மேல் கடும் கோபத்தைக் காட்டுவது நியாயமாக இருக்குமா?” என்று நினைக்கிறார்கள். 6 கடவுள் நியாயமில்லாதவராக இருக்கவே முடியாது! அப்படி அவர் நியாயமில்லாதவர் என்றால், அவரால் எப்படி இந்த உலகத்தை நியாயந்தீர்க்க முடியும்?+

7 வேறு சிலர், “நான் பொய் பேசும்போது, கடவுள் உண்மையானவர் என்பது தெளிவாகத் தெரிவதோடு அவருக்கு மகிமையும் சேருகிறது, இல்லையா? அப்படியிருக்கும்போது, நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்று கேட்கிறார்கள். 8 அப்படிப் பார்த்தால், “நாம் தீமை செய்யலாம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்லலாமே? நாங்கள் இப்படிச் சொல்வதாகச் சில ஆட்கள் எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள். அவர்கள் சொல்வது பொய். அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைப்பது நியாயம்தான்.+

9 அப்படியானால் என்ன? யூதர்களான நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? இல்லவே இல்லை! யூதர்கள், கிரேக்கர்கள் எல்லாருமே பாவத்தின் பிடியில் இருப்பதாக+ ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். 10 எழுதப்பட்டிருக்கிறபடி, “நீதிமானே இல்லை, ஒருவன்கூட இல்லை.+ 11 விவேகமாக நடக்கிறவன் ஒருவன்கூட இல்லை, கடவுளைத் தேடுகிறவன் ஒருவன்கூட இல்லை. 12 எல்லா மனிதர்களும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள், எல்லாரும் கெட்டுப்போயிருக்கிறார்கள்; கருணை காட்டுகிறவனே இல்லை, ஒருவன்கூட இல்லை.”+ 13 “அவர்களுடைய தொண்டை ஒரு திறந்த கல்லறை, அவர்கள் தங்களுடைய நாவுகளால் ஏமாற்றியிருக்கிறார்கள்.”+ “அவர்களுடைய உதடுகளின் பின்னால் பாம்பின் விஷம் இருக்கிறது.”+ 14 “அவர்கள் வாயைத் திறந்தாலே சாபங்களும் கசப்பான வார்த்தைகளும்தான் வருகின்றன.”+ 15 “அவர்களுடைய கால்கள் இரத்தத்தைச் சிந்த ஓடுகின்றன.”+ 16 “எப்போதும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள். 17 சமாதான வழியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறார்கள்.”+ 18 “அவர்களுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.”+

19 திருச்சட்டம் சொல்கிற எல்லாம் திருச்சட்டத்தின்கீழ் இருக்கிறவர்களுக்குத்தான் என்பது நமக்குத் தெரியும். அதனால், அவர்களில் யாரும் தங்களைக் குற்றமில்லாதவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. உலகமே கடவுளுடைய தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறது.+ 20 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+

21 இப்போதோ, திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காமலேயே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.+ இது திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது.+ 22 இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும், விசுவாசம் வைக்கிற எல்லாருமே நீதிமான்களாக இருக்க முடியும். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ 23 ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்.+ 24 இருந்தாலும், கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இது கடவுளுடைய அளவற்ற கருணையால்+ கிடைக்கும் ஓர் இலவச அன்பளிப்பு.+ 25 கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம்+ மனிதர்கள் தன்னோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாக* கடவுள் கொடுத்தார்.+ முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார். 26 இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும் மனிதனை நீதிமானாக ஏற்றுக்கொள்வதன்+ மூலம் தான் நீதியுள்ளவர்+ என்பதை இந்தக் காலத்தில் நிரூபிப்பதற்காகவும் அவர் அப்படிச் செய்தார்.

27 அதனால், ஒருவன் பெருமையடிக்க முடியுமா? முடியாது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவனால் பெருமையடிக்க முடியும்? செயல்கள் முக்கியம் என்று சொல்கிற சட்டத்தின் அடிப்படையிலா?+ இல்லவே இல்லை, விசுவாசம் முக்கியம் என்று சொல்கிற சட்டத்தின் அடிப்படையில்தான். 28 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் அல்ல, விசுவாசத்தால்தான் ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்ற முடிவுக்கு வருகிறோம்.+ 29 கடவுள் யூதர்களுக்கு மட்டுமா கடவுள்?+ மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தானே கடவுள்?+ ஆம், மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தான் கடவுள்.+ 30 கடவுள் ஒருவர்+ என்பதால், விருத்தசேதனம் செய்தவர்களையும் சரி, விருத்தசேதனம் செய்யாதவர்களையும் சரி, அவர்களுடைய விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார்.+ 31 அப்படியானால், நம்முடைய விசுவாசத்தால் நாம் திருச்சட்டத்தை ஒழிக்கிறோமா? இல்லவே இல்லை! உண்மையில், நாம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.+

4 அப்படியிருக்கும்போது, நம்முடைய மூதாதையான ஆபிரகாமுக்குக் கிடைத்த நன்மையைப் பற்றி என்ன சொல்வோம்? 2 உதாரணத்துக்கு, ஆபிரகாம் தன்னுடைய செயல்களால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், பெருமை பேச அவருக்குக் காரணம் இருந்திருக்கும். ஆனால், கடவுளுக்கு முன்பாகப் பெருமை பேச காரணம் இருந்திருக்காது. 3 வேதவசனம் என்ன சொல்கிறது? “யெகோவாமேல்* ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று சொல்கிறது. 4 வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற சம்பளம் ஓர் அன்பளிப்பாக* கருதப்படுவதில்லை, அவனுடைய உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய கூலியாகவே கருதப்படுகிறது. 5 மறுபட்சத்தில், ஒருவன் தன்னுடைய செயல்கள்மேல் நம்பிக்கை வைக்காமல் பாவிகளை நீதிமான்களாக ஏற்றுக்கொள்கிற கடவுள்மேல் விசுவாசம் வைக்கும்போது, அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்.+ 6 செயல்கள் இல்லாமல் கடவுளால் நீதிமானாகக் கருதப்படுகிற மனிதனுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி தாவீதும் சொல்கிறார்: 7 “யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ* அவர்கள் சந்தோஷமானவர்கள். 8 எந்த மனிதருடைய பாவத்தை யெகோவா* ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அவர் சந்தோஷமானவர்.”+

9 அப்படியானால், இந்தச் சந்தோஷம் விருத்தசேதனம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறதா அல்லது விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் கிடைக்கிறதா?+ “விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று நாம் சொல்கிறோம். 10 அவர் எப்போது நீதிமானாகக் கருதப்பட்டார்? விருத்தசேதனம் செய்திருந்தபோதா விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோதா? விருத்தசேதனம் செய்திருந்தபோது அல்ல, விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோதுதான் நீதிமானாகக் கருதப்பட்டார். 11 அவர் விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோது காட்டிய விசுவாசத்தால் ஓர் அடையாளத்தைப் பெற்றார், அதாவது விருத்தசேதனத்தை நீதியின் முத்திரையாக* பெற்றார்.+ இப்படி, விருத்தசேதனம் செய்யாமலிருந்தும் கடவுள்மேல் விசுவாசம் வைப்பதால் நீதிமான்களாகக் கருதப்படுகிற எல்லாருக்கும் அவர் தகப்பன் ஆனார்.+ 12 நம் தகப்பனாகிய ஆபிரகாம்,+ விருத்தசேதனத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோது தான் காட்டிய விசுவாசத்தின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி நடக்கிறவர்களுக்கும் தகப்பன் ஆனார்.

13 உலகத்தைச் சொந்தமாக்கிக்கொள்வது பற்றிய வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய சந்ததியாருக்கோ திருச்சட்டத்தால் கிடைக்கவில்லை.+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் அவர் நீதிமானாக இருந்ததால்தான் கிடைத்தது.+ 14 திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் மட்டுமே அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்றால், விசுவாசம் வீணானதாக இருக்கும், அந்த வாக்குறுதியும் அழிந்துபோயிருக்கும். 15 உண்மையில், திருச்சட்டம் கடவுளுடைய கடும் கோபத்தைத்தான் கொண்டுவருகிறது.+ அந்தச் சட்டம் இல்லாத காலத்தில் எந்தச் சட்டமீறுதலும் இருக்கவில்லை.+

16 அதனால்தான், அந்த வாக்குறுதி விசுவாசத்தால் கிடைக்கிறது. அதோடு, கடவுளுடைய அளவற்ற கருணையின் அடிப்படையில் கிடைக்கிறது.+ இப்படி, ஆபிரகாமின் வம்சத்தார் எல்லாருக்கும், அதாவது திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல ஆபிரகாமைப் போல் விசுவாசம் வைத்திருக்கிற எல்லாருக்கும்,+ அந்த வாக்குறுதி நிச்சயமானது.+ 17 (“நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக நியமித்திருக்கிறேன்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே, ஆபிரகாம் நம் எல்லாருக்கும் தகப்பன் ஆனார்.)+ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவரும் நடக்கப்போகிறவற்றை நடந்ததுபோல்* சொல்கிறவருமான கடவுள்மேல் ஆபிரகாம் விசுவாசம் வைத்து, அவரிடமிருந்து அந்த வாக்குறுதியைப் பெற்றார். 18 “இப்படித்தான் உன் சந்ததி எண்ணற்றதாக ஆகும்”+ என்று சொல்லப்பட்டது நடக்குமென்று விசுவாசம் வைத்தார். நிறைய தேசங்களுக்கு அவர் தகப்பன் ஆவார் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும் அதில் நம்பிக்கை வைத்தார். 19 அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயதாகிவிட்டதால் அவருடைய உடல் தளர்ந்து செத்ததுபோல் இருந்ததையும்,+ சாராளின் கருப்பை செத்த நிலையில்* இருந்ததையும் அவர் அறிந்திருந்தார்.+ ஆனாலும், விசுவாசத்தில் தளரவில்லை. 20 கடவுளுடைய வாக்குறுதியில் ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்ததால் அவர் சந்தேகப்படவில்லை, மாறாக விசுவாசத்தில் பலமுள்ளவராகி கடவுளை மகிமைப்படுத்தினார். 21 அதோடு, கடவுளால் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்பதை முழுமையாக நம்பினார்.+ 22 அதனால், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”+

23 ஆனாலும், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வார்த்தைகள் அவருக்காக மட்டும் எழுதப்படவில்லை,+ 24 நமக்காகவும் எழுதப்பட்டன. நம் எஜமானாகிய இயேசுவை உயிரோடு எழுப்பிய கடவுள்மேல் நாம் விசுவாசம் வைப்பதால்,+ நாமும் நீதிமான்களாகக் கருதப்படுவோம். 25 நம்முடைய எஜமான் நாம் செய்த குற்றங்களுக்காகச் சாகும்படி அனுப்பப்பட்டார்.+ நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டார்.+

5 விசுவாசத்தால் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால்,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கலாம்.*+ 2 கிறிஸ்துமீதுள்ள விசுவாசத்தால் நாம் இப்போது இந்த அளவற்ற கருணையை அனுபவிக்கிறோம்.+ அதனால், கடவுள் நம்மை மகிமைப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் சந்தோஷப்படலாம்.* 3 அதுமட்டுமல்ல, உபத்திரவங்களிலும் சந்தோஷப்படலாம்.*+ ஏனென்றால், உபத்திரவம் சகிப்புத்தன்மையையும்,+ 4 சகிப்புத்தன்மை கடவுளுடைய அங்கீகாரத்தையும், கடவுளுடைய அங்கீகாரம்+ நம்பிக்கையையும்+ உண்டாக்குகிறது என்பது நமக்குத் தெரியும். 5 அந்த நம்பிக்கை ஏமாற்றம் தராது.+ ஏனென்றால், கடவுள் தன்னுடைய சக்தியை நமக்குத் தந்து தன்னுடைய அன்பை நம் இதயங்களில் பொழிந்திருக்கிறார்.+

6 உண்மையில், நாம் பலவீனர்களாக* இருந்தபோதே+ கடவுள்பக்தி இல்லாத மனிதர்களுக்காகக் குறித்த காலத்தில் கிறிஸ்து தன்னுடைய உயிரைக் கொடுத்தார். 7 நீதிமானுக்காக ஒருவர் உயிரைக் கொடுப்பது அபூர்வம். ஒருவேளை நல்லவனுக்காக யாராவது தன் உயிரைக் கொடுக்கத் துணியலாம். 8 ஆனாலும், நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்.+ 9 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலம் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதால்,+ கடவுளுடைய கடும் கோபத்துக்குத் தப்பி அவர் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா?+ 10 நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவருடைய மகனின் மரணத்தின் மூலம் அவரோடு சமரசம் செய்யப்பட்டோம்+ என்றால், இப்போது சமரசம் செய்யப்பட்டிருக்கிற நாம் அவருடைய மகனின் வாழ்வின் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா? 11 அதுமட்டுமல்ல, நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு நாம் இப்போது சமரசம் செய்யப்பட்டிருப்பதற்காகச்+ சந்தோஷமும் அடைகிறோம், இல்லையா?

12 ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.+ இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.+ 13 திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கு முன்பே இந்த உலகத்தில் பாவம் இருந்தது. ஆனால், திருச்சட்டம் இல்லாத காலத்தில் பாவத்துக்காக யார்மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.+ 14 இருந்தாலும், ஆதாம்முதல் மோசேவரை வாழ்ந்தவர்கள் ஆதாம் செய்ததுபோல் கடவுளுடைய கட்டளையை மீறி பாவம் செய்யாதபோதிலும், மரணம் ஒரு ராஜாவாக அவர்கள்மீது ஆட்சி செய்துவந்தது. அந்த ஆதாம் பிற்பாடு வரவிருந்தவருக்கு ஒப்பாக இருந்தான்.+

15 குற்றத்தால் வந்த விளைவும் இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒரே மனிதனுடைய குற்றத்தால் நிறைய பேருக்கு மரணம் வந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து என்ற ஒரே மனிதன் மூலம் கடவுள் கொடுத்த இலவச அன்பளிப்பாலும் அளவற்ற கருணையாலும்+ நிறைய பேருக்கு ஏராளமான நன்மை கிடைத்தது.*+ 16 ஒரே மனிதனுடைய பாவத்தால்+ வந்த விளைவும் கடவுளுடைய இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒருவனுடைய குற்றத்தால் மனிதர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது.+ ஆனால், பலருடைய குற்றங்களுக்குப் பின்பு கொடுக்கப்பட்ட அன்பளிப்பால் அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.+ 17 ஒருவனுடைய குற்றத்தால் அந்த ஒருவன் மூலம் மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது;+ அப்படியென்றால், அளவற்ற கருணையையும் நீதியாகிய அன்பளிப்பையும்+ ஏராளமாகப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம்+ வாழ்வு பெற்று ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது+ அதிக நிச்சயம், இல்லையா?

18 அதனால், ஒரே மனிதன் குற்றம் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது+ போல, ஒரே மனிதன் நீதியான செயலைச் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.+ அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+ 19 ஒரே மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது+ போல, ஒரே மனிதன் கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.+ 20 இப்படிப்பட்ட நிலையில், குற்றங்களை வெட்டவெளிச்சமாக்குவதற்குத் திருச்சட்டமும் வந்தது.+ ஆனால், பாவங்கள் பெருகப்பெருக அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது. 21 எதற்காக? மரணத்தோடு சேர்ந்து பாவம் ராஜாவாக ஆட்சி செய்ததுபோல்+ நீதியின் மூலம் அளவற்ற கருணை ராஜாவாக ஆட்சி செய்வதற்காகத்தான். அந்த அளவற்ற கருணை நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முடிவில்லாத வாழ்வைத் தருகிறது.+

6 அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? அளவற்ற கருணை அதிகமதிகமாகக் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து பாவம் செய்யலாமா? 2 கூடவே கூடாது! பாவத்தைப் பொறுத்தவரை நாம் இறந்துவிட்டதால்,+ இனி எப்படிப் பாவ வாழ்க்கை நடத்திக்கொண்டே இருக்க முடியும்?+ 3 கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் எடுத்த+ நாம் எல்லாரும் அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுத்தோம்+ என்பது உங்களுக்குத் தெரியாதா? 4 பரலோகத் தகப்பனின் வல்லமையால்* கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டார். அதேபோல், நாமும் புதிய வாழ்வு வாழ்வதற்காக+ அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுத்து அவரோடுகூட அடக்கம் செய்யப்பட்டோம்.+ 5 நாம் அவரைப் போல இறந்து அவரோடு ஒன்றுபட்டால்,+ அவரைப் போல உயிருடன் எழுந்து நிச்சயம் அவரோடு ஒன்றுபடுவோம்.+ 6 நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+ 7 ஏனென்றால், இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.*

8 நாம் கிறிஸ்துவோடு இறந்திருந்தோம் என்றால், அவரோடு வாழ்வதும் நிச்சயம். 9 ஏனென்றால், இப்போது உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்து+ இனி இறப்பதில்லை+ என்று நமக்குத் தெரியும். மரணம் இனிமேல் அவருடைய எஜமானாக இருக்காது. 10 அவர் இறந்தார், பாவத்தைப் போக்குவதற்காக எல்லா காலத்துக்கும் ஒரேமுறை இறந்தார்.+ ஆனால், இப்போது உயிர்வாழ்கிறார், கடவுளுக்காக உயிர்வாழ்கிறார். 11 அதேபோல் நீங்களும் பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாகவும், கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளுக்காக உயிர்வாழ்கிறவர்களாகவும் உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.+

12 அதனால், உங்களுடைய உடலின் ஆசைகளுக்குப் பாவம் உங்களை அடிமைப்படுத்தி, சாவுக்குரிய உங்கள் உடலில் தொடர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்.+ 13 உங்களுடைய உடலை* அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்துக்கு அர்ப்பணிக்காமல், நீதியின் ஆயுதங்களாகக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள். செத்த நிலையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களையே அவருக்கு அர்ப்பணியுங்கள்.+ 14 பாவம் உங்கள் எஜமானாக இருக்க அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல்+ அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறீர்கள்.+

15 அப்படியானால் என்ன சொல்வது? நாம் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல் அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறோம் என்பதற்காகப் பாவம் செய்யலாமா?+ கூடவே கூடாது! 16 யாருக்கு உங்களை அர்ப்பணித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அவருக்குத்தான் நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தால்+ மரணமடைவீர்கள்,+ கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருந்தால்+ நீதிமான்களாவீர்கள். 17 முன்பு நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தாலும், நீங்கள் எந்தப் போதனையிடம்* ஒப்படைக்கப்பட்டீர்களோ அந்தப் போதனைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தீர்கள்; அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 18 நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதால்,+ நீதிக்கு அடிமைகளானீர்கள்.+ 19 உங்களுடைய பலவீனத்தின்* காரணமாக எளிய வார்த்தைகளில் நான் உங்களிடம் பேசுகிறேன். அக்கிரமச் செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை அசுத்தத்துக்கும் அக்கிரமத்துக்கும் அடிமைகளாக முன்பு அர்ப்பணித்தீர்கள். ஆனால், இப்போது பரிசுத்த செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக அர்ப்பணியுங்கள்.+ 20 ஏனென்றால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தபோது நீதிக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை.

21 அப்போது செய்த செயல்களால் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைத்தன? இப்போது அவற்றை நினைத்து வெட்கப்படுகிறீர்கள். அவை மரணத்துக்கு வழிநடத்துகின்றன.+ 22 ஆனாலும், நீங்கள் இப்போது பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுக்கு அடிமைகளாகி இருப்பதால், பரிசுத்த வாழ்க்கையைப் பலனாகப் பெற்றிருக்கிறீர்கள்;+ அது முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிறது.+ 23 பாவத்தின் சம்பளம் மரணம்;+ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம்+ கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.+

7 சகோதரர்களே, திருச்சட்டம் தெரிந்த உங்களிடம் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரைதான் திருச்சட்டம் அவனுடைய எஜமானாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? 2 உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் சட்டப்படி அவனோடு இணைக்கப்பட்டிருப்பாள். கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்படுவாள்.+ 3 அதனால், கணவன் உயிரோடு இருக்கும்போது அவள் வேறொருவனுக்குச் சொந்தமானால், நடத்தைகெட்டவள் என்று அழைக்கப்படுவாள்.+ கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சட்டத்திலிருந்து விடுதலையாவாள். அதனால், அவள் வேறொருவனுக்குச் சொந்தமானாலும் நடத்தைகெட்டவள் அல்ல.+

4 அப்படியே, என் சகோதரர்களே, உயிரோடு எழுப்பப்பட்ட கிறிஸ்துவுக்கு+ நீங்கள் சொந்தமாவதற்காக,+ அவருடைய பலியின்* மூலம் திருச்சட்டத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களானீர்கள். இப்படி, நம் எல்லாராலும் கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய முடிகிறது.+ 5 நாம் உடலின் ஆசைகளின்படி வாழ்ந்தபோது, மரணத்தை உண்டாக்கும் பாவ ஆசைகள் நம்முடைய உடலில்* பொங்கியெழுந்தன.+ அந்த ஆசைகள் எவை என்பதைத் திருச்சட்டம் வெட்டவெளிச்சமாக்கியது. 6 நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த திருச்சட்டத்தைப் பொறுத்தவரை நாம் இறந்திருப்பதால், இப்போது அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம்.+ அதனால், எழுதப்பட்ட பழைய சட்டத்தின் வழியில் நாம் அவருக்கு அடிமைகளாக இல்லாமல்,+ கடவுளுடைய சக்தியின் புதிய வழியில் அவருக்கு அடிமைகளாக இருக்கிறோம்.+

7 அப்படியானால், நாம் என்ன சொல்லலாம்? திருச்சட்டம் பாவமென்று சொல்லலாமா? கூடவே கூடாது! உண்மையில், திருச்சட்டம் இல்லாதிருந்தால் பாவம் என்னவென்று எனக்குத் தெரிந்திருக்காது.+ உதாரணமாக, “பேராசைப்படக் கூடாது” என்று திருச்சட்டம் சொல்லாதிருந்தால், பேராசையைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.+ 8 ஆனால், பாவம் என்னவென்று அந்தச் சட்டம் எனக்கு உணர்த்தியது. அதாவது, எல்லா விதமான பேராசையும் எனக்குள் இருக்கிறது என்பதையும், அவை பாவம் என்பதையும் அது எனக்கு உணர்த்தியது. திருச்சட்டம் இல்லாதபோதோ பாவம் செத்த நிலையில் இருந்தது.+ 9 சொல்லப்போனால், திருச்சட்டம் இல்லாத காலத்தில் நான் உயிரோடிருந்தேன். திருச்சட்டம் வந்தபோதோ பாவம் மறுபடியும் உயிர்பெற்றது, ஆனால் நான் மரணமடைந்தேன்.+ 10 வாழ்வுக்கு வழிநடத்த வேண்டிய திருச்சட்டமே+ மரணத்துக்கு வழிநடத்துவதைப் புரிந்துகொண்டேன். 11 அந்தச் சட்டத்தால் எனக்கு உணர்த்தப்பட்ட பாவம் என்னை ஏமாற்றி, அந்தச் சட்டத்தாலேயே என்னைக் கொன்றுபோட்டது. 12 இருந்தாலும், திருச்சட்டம் பரிசுத்தமானது. அதிலுள்ள கட்டளைகளும் பரிசுத்தமானவை, நீதியானவை, நன்மையானவை.+

13 அப்படியானால், நன்மையான ஒன்று என்னைக் கொன்றுபோட்டதா? இல்லவே இல்லை! பாவம்தான் என்னைக் கொன்றுபோட்டது, பாவம் என்னவென்று காட்டுவதற்காக அந்தப் பாவம்தான் நன்மையான ஒன்றை வைத்து என்னைக் கொன்றுபோட்டது.+ இப்படி, அந்தப் பாவம் எவ்வளவு கொடியது என்பதைத் திருச்சட்டம்தான் எனக்குக் காட்டியது.+ 14 நமக்குத் தெரிந்தபடி, திருச்சட்டம் கடவுளுக்குச் சொந்தமானது. நானோ பாவத்துக்குச் சொந்தமானவன், பாவத்துக்கு அடிமையாக விற்கப்பட்டவன்.+ 15 நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன். 16 நான் விரும்பாததையே செய்கிறேன் என்ற உணர்வு எனக்கு இருந்தால், திருச்சட்டம் நல்லது என்று நான் ஒத்துக்கொள்வதை அது காட்டுகிறது. 17 ஆனால், விரும்பாததைச் செய்வது நான் அல்ல, எனக்குள் குடியிருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.+ 18 எப்படியென்றால், என்னிடத்தில், அதாவது என் பாவ உடலில், நல்லது எதுவும் இல்லையென்று எனக்குத் தெரியும். நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருக்கிறது, ஆனால் நல்லது செய்யத்தான் என்னால் முடியவில்லை.+ 19 நான் விரும்புகிற நல்லதைச் செய்யாமல் விரும்பாத கெட்டதையே செய்துவருகிறேன். 20 நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை, எனக்குள் குடியிருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.

21 அதனால், இந்தச் சட்டத்தை என்னிடம் பார்க்கிறேன்: நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது.+ 22 கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.+ 23 ஆனால், என் மனதின் சட்டத்துக்கு விரோதமாகப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலில்* இருப்பதைப் பார்க்கிறேன்.+ என் உடலில்* இருக்கிற அந்தப் பாவச் சட்டம் என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.+ 24 எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்! மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்? 25 நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி! இப்படி, நான் என் மனதால் கடவுளின் சட்டத்துக்கும் உடலால் பாவத்தின் சட்டத்துக்கும் அடிமையாக இருக்கிறேன்.+

8 அதனால், கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடையாது. 2 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறவர்களுக்கு வாழ்வு தருகிற கடவுளுடைய சக்தியின் சட்டம் உங்களைப் பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் விடுதலை செய்திருக்கிறது.+ 3 மனிதர்களுடைய பாவ இயல்பால் திருச்சட்டம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட முடியாததாகவும் அவர்களைக் காப்பாற்ற முடியாததாகவும் இருந்தது.+ அந்தத் திருச்சட்டம் செய்ய முடியாததைக்+ கடவுளே செய்தார். அதாவது, பாவத்தைப் போக்குவதற்குத் தன்னுடைய மகனைப் பாவமுள்ள மனித சாயலில்+ அனுப்பி,+ மனிதர்களிடமுள்ள பாவத்தைக் கண்டனம் செய்தார். 4 பாவ வழியில் நடக்காமல் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிற நாம்,+ திருச்சட்டத்தின் நீதியான கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்தார். 5 பாவ வழியில் நடக்கிறவர்கள் பாவ காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள்.+ ஆனால், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள் கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள்.+ 6 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் மரணமடைவார்கள்,+ கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் வாழ்வையும் சமாதானத்தையும் அடைவார்கள்.+ 7 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பது கடவுளுக்கு விரோதமானது.+ அது கடவுளுடைய சட்டத்துக்குக் கட்டுப்பட்டதாக இல்லை, சொல்லப்போனால் கட்டுப்பட்டதாக இருக்கவும் முடியாது. 8 அதனால், பாவ வழியில் நடக்கிறவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது.

9 ஆனாலும், கடவுளுடைய சக்தி உண்மையிலேயே உங்களிடம் குடியிருந்தால் பாவ வழியில் நடக்காமல் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பீர்கள்.+ கிறிஸ்துவின் சிந்தை ஒருவனிடம் இல்லையென்றால், அவன் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் அல்ல. 10 ஆனால் கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருந்தால்,+ பாவத்தின் காரணமாக உங்கள் உடல் செத்திருந்தாலும் நீதியின் காரணமாகக் கடவுளுடைய சக்தி உங்களுக்கு உயிர் கொடுக்கும். 11 இயேசுவை உயிரோடு எழுப்பியவரின் சக்தி உங்களிடம் இப்போது குடியிருந்தால், கிறிஸ்து இயேசுவை உயிரோடு எழுப்பிய அவரே+ தன்னுடைய சக்தியால் சாவுக்குரிய உங்கள் உடல்களுக்கு உயிர் கொடுப்பார்.+

12 சகோதரர்களே, பாவ இயல்புக்கு அடிபணிந்து அதன் ஆசைகளின்படி வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு இல்லை.+ 13 நீங்கள் அப்படிப் பாவ ஆசைகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் சாவீர்கள்.+ உங்களுடைய கெட்ட செயல்களைக் கடவுளுடைய சக்தியின் உதவியோடு ஒழித்துவிட்டால் உயிர்வாழ்வீர்கள்.+ 14 கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற எல்லாரும் கடவுளுடைய மகன்களாக இருக்கிறார்கள்.+ 15 கடவுளுடைய சக்தி நம்மை அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி பயப்பட வைப்பதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு வழிநடத்தி, அவரை “அபா,* தகப்பனே!” என்று கூப்பிட வைக்கிறது.+ 16 நாம் கடவுளுடைய பிள்ளைகள்+ என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது.*+ 17 நாம் பிள்ளைகள் என்றால், வாரிசுகளாகவும் இருப்போம். உண்மையில், கடவுளுடைய வாரிசுகளாக, கிறிஸ்துவின் சக வாரிசுகளாக,+ இருப்போம். கிறிஸ்துவோடு சேர்ந்து நாம் பாடுகளை அனுபவித்தால்+ அவரோடு சேர்ந்து மகிமையையும் பெறுவோம்.+

18 அதனால், நம் மூலம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடும்போது இந்தக் காலத்தில் நாம் படும் பாடுகள் ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறேன்.+ 19 கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதற்காகப் படைப்பு* மிகவும் ஆவலோடு காத்திருக்கிறது.+ 20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது. 21 படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு+ கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அப்படித் தள்ளப்பட்டது. 22 நமக்குத் தெரிந்தபடி, இதுவரை எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. 23 அதுமட்டுமல்ல, நமக்குக் கிடைக்கப்போகிற ஆஸ்திக்கு உத்தரவாதமாகக் கடவுளுடைய சக்தியைப் பெற்ற நாமும்கூட,* ஆம் நாமும்கூட, உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறோம்.+ அதேசமயம், கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு,+ அதாவது மீட்புவிலையால் நம்முடைய உடலிலிருந்து விடுதலை செய்யப்படுவதற்கு, மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம். 24 இந்த நம்பிக்கையில்தான் நாம் காப்பாற்றப்பட்டோம். ஆனால், கண்களால் பார்ப்பதை நம்புவது உண்மையில் நம்பிக்கையே அல்ல. ஒருவன் ஒன்றை நேரடியாகப் பார்க்கும்போது அதற்காக அவன் நம்பிக்கையோடு காத்திருக்கிறான் என்று சொல்வோமா? 25 கண்களால் பார்க்காததை+ நாம் நம்பினால்தான்,+ சகிப்புத்தன்மையுடன்+ அதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்போம்.

26 அதோடு, நாம் பலவீனமாக இருக்கிற சமயங்களில் கடவுளுடைய சக்தியும் நமக்கு உதவி செய்கிறது.+ எப்படியென்றால், ஜெபம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் என்ன ஜெபிப்பதென்று நமக்குத் தெரியாதபோது, வார்த்தைகளால் சொல்ல முடியாத* நம் உள்ளக் குமுறல்களைப் பற்றி அந்தச் சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது. 27 இதயங்களை ஆராய்ந்து பார்க்கிற கடவுளுக்கு,+ அந்தச் சக்தி என்ன சொல்கிறது என்று தெரியும். ஏனென்றால், அது அவருடைய விருப்பத்தின்படி* பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து பேசுகிறது.

28 கடவுள் தன்னை நேசிக்கிறவர்களுடைய, அதாவது தன் நோக்கத்தின்படி+ அழைக்கப்பட்டவர்களுடைய, நன்மைக்காகத் தன்னுடைய எல்லா செயல்களையும் ஒன்றுக்கொன்று இசைந்துபோக வைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். 29 ஏனென்றால், தன்னுடைய விசேஷ கவனத்தைப் பெற்றவர்கள் தன்னுடைய மகனின் சாயலுக்கு ஒப்பாக இருக்க வேண்டும்+ என்று அவர் முன்தீர்மானித்தார். தன்னுடைய மகனே முதல் மகனாகவும்+ அவர்கள் அவருடைய சகோதரர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார். 30 அவரால் முன்தீர்மானிக்கப்பட்டவர்கள்+ அவரால் அழைக்கப்பட்டவர்களாக+ இருக்கிறார்கள். அவரால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் நீதிமான்களாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக+ இருக்கிறார்கள். அவரால் நீதிமான்களாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அவரால் மகிமைப்படுத்தப்பட்டவர்களாக+ இருக்கிறார்கள்.

31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+ 32 தன்னுடைய சொந்த மகனென்றும் பார்க்காமல் நம் எல்லாருக்காகவும் அவரைக் கொடுத்தவர்+ அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பாரா? 33 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மீது யாரால் குற்றம்சாட்ட முடியும்?+ கடவுள்தான் அவர்களை நீதிமான்களாக ஏற்றுக்கொள்கிறாரே.+ 34 அவர்களுக்கு யாரால் தண்டனைத் தீர்ப்பு கொடுக்க முடியும்? இறந்த பின்பு, சொல்லப்போனால், உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ நமக்காகப் பரிந்து பேசுகிறாரே.+

35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எது நம்மைப் பிரிக்க முடியும்?+ உபத்திரவமா, வேதனையா, துன்புறுத்தலா, பசியா, நிர்வாணமா, ஆபத்தா, வாளா?+ 36 “உங்களுக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்; வெட்டப்படுகிற ஆடுகள் போல ஆகிவிட்டோம்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நமக்கு நடக்கும். 37 இருந்தாலும், நம்மேல் அன்பு காட்டியவரின் உதவியோடு இவை எல்லாவற்றிலும் நாம் முழு வெற்றி+ பெற்றுவருகிறோம். 38 சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ,+ 39 உயர்வான காரியங்களோ, தாழ்வான காரியங்களோ, வேறெந்தப் படைப்போ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று உறுதியாக நம்புகிறேன்.

9 கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நான் உண்மையைத்தான் பேசுகிறேன், பொய் பேசவில்லை. ஏனென்றால், கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற என் மனசாட்சி என்னோடுகூட சாட்சி சொல்கிறது. 2 இதயத்தில் எனக்கு மிகுந்த துக்கமும் தீராத வேதனையும் இருக்கிறது. 3 என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்காக நானே கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து சாபத்துக்குள்ளாக முடியுமானால் அதற்கும் தயாராயிருக்கிறேன். 4 அவர்கள்தான் இஸ்ரவேலர்கள், அவர்கள்தான் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டவர்கள்,+ மகிமையையும் ஒப்பந்தங்களையும்+ திருச்சட்டத்தையும்+ பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தையும்+ வாக்குறுதிகளையும்+ பெற்றவர்கள். 5 அவர்கள்தான் முன்னோர்களின் வழியில் வந்தவர்கள்;+ அவர்களுடைய வம்சத்தில்தான் கிறிஸ்து வந்தார்.+ எல்லாவற்றுக்கும் மேலான கடவுள் என்றென்றும் போற்றப்படுவாராக. ஆமென்.*

6 ஆனாலும், கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென்று அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் வருகிற எல்லாரும் உண்மையில் “இஸ்ரவேலர்கள்” கிடையாது.+ 7 அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாரும் உண்மையில் அவருடைய பிள்ளைகளும் கிடையாது.+ ஆனால், “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்”+ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. 8 அதனால், இயல்பான முறையில் ஆபிரகாமுக்குப் பிறந்த பிள்ளைகள் கடவுளுடைய பிள்ளைகள் கிடையாது,+ வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்தான்+ ஆபிரகாமின் சந்ததியாகக் கடவுளால் கருதப்படுகிறார்கள். 9 “இதே சமயம் நான் வருவேன், அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது.+ 10 அதுமட்டுமல்ல, நம்முடைய மூதாதையான ஈசாக்கின் மூலம் ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தபோது,+ 11 அதாவது இன்னும் அந்தக் குழந்தைகள் பிறக்காமலும் நல்லதோ கெட்டதோ செய்யாமலும் இருந்தபோது, “பெரியவன் சின்னவனுக்கு அடிமையாக இருப்பான்” என்று அவளிடம் சொல்லப்பட்டது.+ 12 “யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டும் இருக்கிறது.+ 13 அதனால், கடவுளுடைய நோக்கத்தின்படி மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுடைய செயல்களைச் சார்ந்தில்லை, தேர்ந்தெடுக்கிற அவரையே எப்போதும் சார்ந்திருக்கிறது.

14 அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா? இல்லவே இல்லை!+ 15 ஏனென்றால் அவர் மோசேயிடம், “யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யாருக்குக் கரிசனை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்”+ என்று சொன்னார். 16 அதனால், தேர்ந்தெடுக்கப்படுவது இரக்கமுள்ள கடவுளைத்தான் சார்ந்திருக்கிறது,+ ஒருவருடைய விருப்பத்தையோ முயற்சியையோ* சார்ந்தில்லை. 17 பார்வோனிடம் கடவுள், “உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று சொன்னதாக வேதவசனம் குறிப்பிடுகிறது.+ 18 அதனால், அவர் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ அவருக்கு இரக்கம் காட்டுகிறார், யாரைப் பிடிவாதக்காரராக இருக்கும்படி விட்டுவிட விரும்புகிறாரோ அவரைப் பிடிவாதக்காரராக இருக்கும்படி விட்டுவிடுகிறார்.+

19 அப்படியானால், “மனிதர்கள்மீது கடவுள் குற்றம் கண்டுபிடிப்பது நியாயமா? அவர் தீர்மானித்திருப்பதை யாராலும் மாற்ற முடியாது, இல்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். 20 ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+ 21 ஒரே களிமண் உருண்டையை வைத்து கண்ணியமான காரியத்துக்காக ஒரு பாத்திரத்தையும் கண்ணியமற்ற காரியத்துக்காக இன்னொரு பாத்திரத்தையும் செய்ய அந்தக் களிமண்மீது குயவனுக்கு அதிகாரம் இல்லையா?+ 22 தன்னுடைய கடும் கோபத்தையும் வல்லமையையும் வெளிக்காட்ட கடவுளுக்கு விருப்பம் இருந்தாலும், கடும் கோபத்துக்கும் அழிவுக்கும் உரிய பாத்திரங்களைப் பொறுமையோடு சகித்துக்கொண்டார் என்றால், யார் என்ன சொல்ல முடியும்? 23 மகிமை பெறும்படி தான் உண்டாக்கியிருந்த இரக்கத்துக்குரிய பாத்திரங்கள்மீது+ தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக, 24 அதாவது யூதர்களிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற தேசத்து மக்களிலிருந்தும் அழைக்கப்பட்டவர்களாகிய+ நம்மீது தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக, அப்படிப் பொறுமையோடு இருந்தார் என்றால், யார் என்ன சொல்ல முடியும்? 25 அதுபோலவே, “என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களை+ ‘என் ஜனங்கள்’ என்றும், அன்புக்குரியவளாக இல்லாதவளை ‘அன்புக்குரியவள்’ என்றும் அழைப்பேன்” என்று ஓசியா புத்தகத்தில்கூட அவர் சொல்லியிருக்கிறாரே.+ 26 அதோடு, “‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’ என்று எந்த இடத்தில் சொன்னேனோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’ என்று அழைப்பேன்” என்றும் சொல்லியிருக்கிறாரே.+

27 அதோடு, இஸ்ரவேலர்களைப் பற்றி ஏசாயா, “இஸ்ரவேல் ஜனங்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப் போல் இருந்தாலும், மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள்.+ 28 ஏனென்றால், இந்தப் பூமியில் வாழும் மக்களிடம் யெகோவா* கணக்குக் கேட்பார், அதைச் சீக்கிரமாகச் செய்து முடிப்பார்”+ என்று சொன்னார். 29 அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவா* நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காமல் போயிருந்தால், நாம் சோதோமைப் போலவும், கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்”+ என்று அவர் முன்கூட்டியே சொன்னார்.

30 அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? மற்ற தேசத்து மக்கள் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாதபோதிலும்,+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் நீதிமான்களானார்கள்.+ 31 ஆனால் இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தபோதிலும், நீதிமான்களாகவில்லை. 32 ஏன்? ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாமல், செயல்களால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தார்கள். “தடைக்கல்” மீது அவர்கள் தடுக்கி விழுந்தார்கள்.+ 33 இதைப் பற்றித்தான், “இதோ! தடைக்கல்லை,+ அதாவது தடுக்கி விழ வைக்கும் கற்பாறையை, நான் சீயோனில் வைக்கிறேன். அதன்மீது விசுவாசம் வைக்கிறவன் ஏமாற்றம் அடைய மாட்டான்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.

10 சகோதரர்களே, இஸ்ரவேலர்கள் மீட்புப் பெற வேண்டும் என்பது என் இதயப்பூர்வமான ஆசை,+ அதற்காகவே நான் கடவுளிடம் மன்றாடுகிறேன். 2 அவர்களுக்குக் கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது என்று சாட்சி சொல்கிறேன்;+ ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற வைராக்கியம் கிடையாது. 3 கடவுளுடைய வழியில் நீதிமான்களாவது எப்படியென்று தெரியாமல்+ தங்களுடைய சொந்த வழியில் நீதிமான்களாவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.+ அதனால், கடவுளுடைய நீதியான வழிக்குக் கட்டுப்படாமல் இருக்கிறார்கள்.+ 4 கிறிஸ்து திருச்சட்டத்தின் முடிவாக இருக்கிறார்+ என்பதால் விசுவாசம் வைக்கிற எல்லாரும் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக முடியும்.+

5 திருச்சட்டத்தின்படி நீதிமானாக இருக்கிறவனைப் பற்றிச் சொல்லும்போது, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடக்கிற மனிதன் அவற்றால் வாழ்வு பெறுவான்”+ என்று மோசே எழுதியிருக்கிறார். 6 ஆனால், விசுவாசத்தின் மூலம் கடவுளுக்குமுன் நீதிமான்களாவதைப் பற்றி, “‘பரலோகத்துக்கு யாரால் ஏறிப்போக முடியும்?’+ அதாவது யாரால் பரலோகத்துக்கு ஏறிப்போய் கிறிஸ்துவைக் கீழே கொண்டுவர முடியும், என்றோ, 7 ‘அதலபாதாளத்துக்குள் யாரால் இறங்கிப்போக முடியும்?’+ அதாவது யாரால் அதலபாதாளத்துக்குள் இறங்கிப்போய் மரணத்திலிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவர முடியும், என்றோ உங்கள் மனதில் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்”+ என வேதவசனம் சொல்கிறது. 8 வேதவசனம் இன்னும் என்ன சொல்கிறது? “அந்த வார்த்தை,” அதாவது நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் செய்தி, “உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது, உங்கள் வாயிலும் இதயத்திலும் இருக்கிறது.”+ 9 இயேசுதான் எஜமான் என்று உங்களுடைய வாயினால் எல்லாருக்கும் சொல்லி,+ அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார் என உங்களுடைய இதயத்தில் விசுவாசித்தால் உங்களுக்கு மீட்பு கிடைக்கும். 10 ஒருவன் இதயத்தில் விசுவாசிக்கும்போது கடவுளுக்கு முன்னால் நீதிமானாகிறான். தன்னுடைய வாயினால் அறிவிக்கும்போது+ மீட்புப் பெறுகிறான்.

11 “அவர்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஏமாற்றம் அடைய மாட்டார்கள்” என்றும் வேதவசனம் சொல்கிறது.+ 12 யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ ஏனென்றால், எல்லாருக்கும் எஜமான் ஒருவரே; அவரிடம் வேண்டிக்கொள்கிற எல்லாருக்கும் அவர் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுக்கிறார். 13 அதனால், “யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”+ 14 ஆனாலும், அவர்மேல் விசுவாசம் வைக்காதவர்கள் எப்படி அவரிடம் வேண்டிக்கொள்வார்கள்? அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் எப்படி அவர்மேல் விசுவாசம் வைப்பார்கள்? யாருமே பிரசங்கிக்காவிட்டால் எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்? 15 அனுப்பப்படாமல் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?+ “நல்ல விஷயங்களை நல்ல செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!”+ என்று எழுதப்பட்டிருக்கிறதே.

16 ஆனாலும், அவர்கள் எல்லாருமே நல்ல செய்தியைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இதைப் பற்றி, “யெகோவாவே,* நாங்கள் சொன்ன விஷயத்தை* கேட்டு அதில் விசுவாசம் வைத்தது யார்?” என்று ஏசாயா கேட்கிறார்.+ 17 அதனால், சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்.+ கிறிஸ்துவைப் பற்றிய செய்தி சொல்லப்பட்டால்தான் அதைக் கேட்க முடியும். 18 ஆனாலும், அவர்கள் கேட்காமலா இருந்தார்கள்? சொல்லப்போனால், “அவர்களுடைய சத்தம் பூமியெங்கும் எட்டுகிறது; அவர்களுடைய செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.”+ 19 ஆனாலும், இஸ்ரவேலர்களுக்குத் தெரியாமலா இருந்தது?+ “ஒன்றுக்கும் உதவாத ஜனங்களைக் கொண்டு உங்களுடைய கோபத்தைக் கிளறுவேன். முட்டாள்தனமான தேசத்தைக் கொண்டு உங்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டாக்குவேன்” என்று முதலில் மோசே சொல்கிறார்.+ 20 ஏசாயா மிகவும் தைரியத்தோடு, “என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க வழிசெய்தேன்,+ என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னைத் தெரியப்படுத்தினேன்” என்று சொல்கிறார்.+ 21 ஆனால், “கீழ்ப்படியாமல் இருக்கிற, பிடிவாதம் பிடிக்கிற ஜனங்களைப் பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருந்தேன்”+ என்று இஸ்ரவேலர்களைப் பற்றிச் சொல்கிறார்.

11 அப்படியானால் நான் கேட்கிறேன், கடவுள் தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டாரா?+ இல்லவே இல்லை! நானும் ஓர் இஸ்ரவேலன், ஆபிரகாமின் சந்ததியில் வந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். 2 கடவுள் முதன்முதலில் தேர்ந்தெடுத்த தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளவில்லை.+ இஸ்ரவேலர்களுக்கு எதிராக அவரிடம் எலியா முறையிட்டதைப் பற்றி வேதவசனம் என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? 3 “யெகோவாவே,* அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுவிட்டார்கள், உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் மீதியாக இருக்கிறேன். இப்போது, என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.+ 4 இருந்தாலும், அவருக்குக் கடவுள் என்ன சொன்னார்? “பாகால்முன் மண்டிபோடாத 7,000 பேர் இன்னும் எனக்காக இருக்கிறார்கள்” என்று சொன்னார்.+ 5 அதேபோல், அளவற்ற கருணையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர் இந்தக் காலத்திலும் மீதியாக இருக்கிறார்கள்.+ 6 அதனால், மக்கள் அளவற்ற கருணையால்+ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், இனியும் செயல்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை+ என்பது தெளிவாகிறது. அப்படிச் செயல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், அளவற்ற கருணைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

7 அப்படியானால் என்ன சொல்வோம்? இஸ்ரவேலர்கள் எதைப் பெறுவதற்காக ஊக்கமாக முயற்சி செய்கிறார்களோ அதை அவர்கள் பெறவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதைப் பெற்றார்கள்.+ மற்றவர்களுடைய மனம் மழுங்கிப்போனது.+ 8 ஏனென்றால், “இன்றுவரை கடவுள் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்திருக்கிறார்,+ பார்க்க முடியாத கண்களைக் கொடுத்திருக்கிறார், கேட்க முடியாத காதுகளைக் கொடுத்திருக்கிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 9 அதோடு, “அவர்களுடைய விருந்தே* அவர்களுக்குக் கண்ணியாகவும் வலையாகவும் முட்டுக்கட்டையாகவும் தண்டனையாகவும் ஆகட்டும். 10 பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருண்டு போகட்டும், அவர்களுடைய முதுகு நிமிர முடியாதபடி எப்போதும் குனிந்திருக்கட்டும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறார்.+

11 அதனால் நான் கேட்கிறேன், கால் தடுக்கியதால் அவர்கள் ஒரேயடியாக விழுந்துவிட்டார்களா? இல்லவே இல்லை! அவர்கள் தவறு செய்ததால் மீட்புப் பெறும் வாய்ப்பு மற்ற தேசத்து மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதனால், அவர்களுக்குப் பொறாமை உண்டாகியிருக்கிறது.+ 12 அவர்கள் தவறு செய்து எண்ணிக்கையில் குறைந்துபோனது உலக மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறதென்றால்,+ அவர்கள் எண்ணிக்கையில் நிறைவுபெறுவது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்!

13 மற்ற தேசத்து மக்களாகிய உங்களிடம் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மற்ற தேசத்து மக்களுக்கு நான் ஓர் அப்போஸ்தலனாக+ இருப்பதால் என் ஊழியத்தை மகிமைப்படுத்துகிறேன்.+ 14 இதன் மூலம் என் சொந்த மக்களுடைய மனதில் பொறாமையை உண்டாக்கி அவர்களில் சிலரையாவது மீட்க முயற்சி செய்கிறேன். 15 அவர்கள் ஒதுக்கித்தள்ளப்பட்டது+ உலக மக்கள் கடவுளோடு சமரசமாவதற்கு வழிசெய்கிறது என்றால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது செத்த நிலையிலிருந்து அவர்கள் உயிர்பெறுவதற்கு நிச்சயம் வழிசெய்யும், இல்லையா? 16 பிசைந்த மாவில் முதலில் ஒரு பிடி மாவை எடுத்து கடவுளுக்கு அர்ப்பணித்து பரிசுத்தமாக்கினால், முழு மாவும் பரிசுத்தமாகிறது. அதேபோல், மரத்தின் வேர் பரிசுத்தமாக இருந்தால் அதன் கிளைகளும் பரிசுத்தமாகின்றன.

17 இருந்தாலும், ஒலிவ மரத்திலுள்ள சில கிளைகள் வெட்டப்பட்ட பின்பு, காட்டு ஒலிவ மரக் கிளைகளாகிய நீங்கள் அவற்றின் இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டு ஒலிவ மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறீர்கள் என்றால், 18 வெட்டப்பட்ட அந்தக் கிளைகளிடம் நீங்கள் ஆணவமாக நடந்துகொள்ளாதீர்கள்.* அப்படி ஆணவமாக நடந்துகொண்டால்,*+ நீங்கள் அந்த வேரைத் தாங்காமல் அந்த வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். 19 “நாங்கள் ஒட்ட வைக்கப்படுவதற்காகத்தான் அந்தக் கிளைகள் வெட்டப்பட்டன”+ என்று நீங்கள் சொல்லலாம். 20 உண்மைதான்! விசுவாசம் இல்லாததால்தான் அவை வெட்டப்பட்டன!+ நீங்களோ விசுவாசம் வைத்ததால் நிலைத்திருக்கிறீர்கள்.+ அதனால், தலைக்கனத்தை விட்டுவிட்டு பயத்தோடு நடந்துகொள்ளுங்கள். 21 இயற்கையாக வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டிவிட்டார் என்றால், உங்களையும் வெட்டிவிட மாட்டாரா? 22 அதனால், கடவுளுடைய கருணையையும்+ கண்டிப்பையும் பற்றி யோசித்துப் பாருங்கள். தவறு செய்தவர்களிடம் அவர் கண்டிப்பைக் காட்டுகிறார்,+ உங்களிடமோ கருணையைக் காட்டுகிறார். ஆனால், அவருடைய கருணையைப் பெறுவதற்கு எப்போதும் தகுதியுள்ளவர்களாக இருந்தால் மட்டும்தான் உங்களிடம் கருணை காட்டுவார். இல்லையென்றால் நீங்களும் வெட்டப்படுவீர்கள். 23 அவர்கள் விசுவாசமில்லாமல் நடப்பதை விட்டுவிட்டு விசுவாசம் வைக்க ஆரம்பித்தால் அவர்களும் ஒட்ட வைக்கப்படுவார்கள்;+ அவர்களைக் கடவுளால் மறுபடியும் ஒட்ட வைக்க முடியும். 24 காட்டு ஒலிவ மரத்திலிருந்த நீங்களே வெட்டப்பட்டு, தோட்டத்து ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக ஒட்ட வைக்கப்பட்டீர்கள் என்றால், இயற்கையாக வளர்ந்த கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய மரத்திலேயே ஒட்ட வைக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!

25 சகோதரர்களே, உங்களை நீங்களே ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தப் பரிசுத்த ரகசியத்தை+ உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மனம் மழுங்கிவிட்டதால் அவர்களுடைய எண்ணிக்கை மற்ற தேசத்து மக்களால் பூர்த்தி செய்யப்படும். 26 இப்படி இஸ்ரவேலர்கள் எல்லாரும்+ மீட்புப் பெறுவார்கள். “விடுவிக்கிறவர்* சீயோனிலிருந்து வந்து,+ கடவுள்பக்தியற்ற செயல்களை யாக்கோபைவிட்டு நீக்குவார். 27 நான் அவர்களுடைய பாவங்களைப் போக்கும்போது,+ அவர்களோடு இந்த ஒப்பந்தத்தைச் செய்வேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. 28 உண்மைதான், நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் உங்களுடைய நன்மைக்காகக் கடவுளுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை முன்னிட்டு அவர்களில் சிலரைக் கடவுள் தேர்ந்தெடுத்திருப்பதால் அவருக்கு அன்பானவர்களாக இருக்கிறார்கள்.+ 29 தான் கொடுக்கிற அன்பளிப்புகளையும் அழைப்புகளையும் நினைத்து கடவுள் வருத்தப்பட மாட்டார். 30 ஒருகாலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தாலும்,+ இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனதால்+ இப்போது உங்களுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது.+ 31 இப்போது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால் உங்களுக்கு இரக்கம் கிடைத்திருப்பதைப் போல் அவர்களுக்கும் இரக்கம் கிடைக்கும். 32 அவர்கள் எல்லாருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே+ அவர்கள் எல்லாரையும் கீழ்ப்படியாமை என்ற சிறையில் கடவுள் விட்டுவிட்டார்.+

33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை! 34 “யெகோவாவின்* சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு அறிவுரை கொடுப்பவன் யார்?”+ 35 அல்லது, “அவர் கைமாறு செய்யும்படி அவருக்கு முன்னதாகவே எதையாவது கொடுத்தவன் யார்?”+ 36 எல்லாம் அவரிடமிருந்துதான் வந்தன; அவரால்தான் இருக்கின்றன; அவருக்காகத்தான் இருக்கின்றன. அவருக்கே என்றென்றும் புகழ் உண்டாவதாக. ஆமென்.*

12 அதனால் சகோதரர்களே, கடவுள் கரிசனையுள்ளவராக இருப்பதால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுடைய உடலை+ உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும்+ கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப்+ பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள். 2 இந்த உலகத்தின்* பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்.+ அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம்* என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.*+

3 உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல்,+ அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற* விசுவாசத்தின்படியே+ எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன். 4 ஒரே உடலில் பல உறுப்புகள் இருந்தாலும்+ எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை; 5 அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.+ 6 நமக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையின்படி நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வரங்கள் இருக்கின்றன.+ இதனால், அவரவருக்குக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின்படியே, தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லட்டும். 7 ஊழியம் செய்கிறவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யட்டும். கற்றுக்கொடுக்கிறவர்கள் தொடர்ந்து கற்றுக்கொடுக்கட்டும்.+ 8 உற்சாகப்படுத்துகிறவர்கள்* தொடர்ந்து உற்சாகப்படுத்தட்டும்.*+ பகிர்ந்து கொடுக்கிறவர்கள் தாராளமாகப் பகிர்ந்து கொடுக்கட்டும்.*+ தலைமை தாங்குகிறவர்கள் ஊக்கம் தளராமல்* தலைமை தாங்கட்டும்.+ இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமாக இரக்கம் காட்டட்டும்.+

9 உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். 10 ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள். ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.*+ 11 சுறுசுறுப்பாக* இருங்கள், சோம்பேறியாக இருக்காதீர்கள்.*+ யெகோவாவின்* சக்தியால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு செயல்படுங்கள்.+ அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+ 12 நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்தில் சகித்திருங்கள்;+ விடாமல் ஜெபம் செய்யுங்கள்.+ 13 உங்களிடம் இருப்பதைப் பரிசுத்தவான்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.+ உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.+ 14 உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் தொடர்ந்து கேளுங்கள்.+ ஆம், ஆசீர்வதிக்கச் சொல்லிக் கேளுங்கள், அவர்களைச் சபிக்காதீர்கள்.+ 15 சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களோடு அழுங்கள். 16 உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+

17 யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்.+ எல்லாருடைய பார்வையிலும் எது நல்லதோ அதையே செய்யுங்கள். 18 கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.+ 19 அன்புக் கண்மணிகளே, “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.+ 20 “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள். அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள். இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்.”*+ 21 தீமை உங்களை வெல்ல விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.+

13 அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு* எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை.+ தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்.+ 2 அதனால், அதிகாரத்தை எதிர்க்கிறவன் கடவுளுடைய ஏற்பாட்டை எதிர்க்கிறான்; அதை எதிர்க்கிறவன் தண்டிக்கப்படுவான். 3 நல்ல செயல்களைச் செய்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை, கெட்ட செயல்களைச் செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும்.+ அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால், தொடர்ந்து நல்லதைச் செய்யுங்கள்,+ அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டு கிடைக்கும். 4 உங்களுடைய நன்மைக்காக அவர்கள் கடவுளுடைய வேலையாட்களாக இருக்கிறார்கள். நீங்கள் கெட்டது செய்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டும். ஏனென்றால், தண்டிக்கிற அதிகாரம்* அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது வீணாகக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கடவுளுடைய வேலையாட்கள், கெட்டது செய்துவருகிறவர்கள்மீது கடவுளுடைய தண்டனையை* நிறைவேற்றுகிறவர்கள்.

5 அதனால், தண்டனை கிடைக்கும்* என்பதற்காக மட்டுமல்ல, உங்களுடைய மனசாட்சியின் காரணமாகவும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாக இருக்கிறது.+ 6 அதனால்தான், நீங்கள் வரியும் கட்டுகிறீர்கள். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கடவுளுடைய தொண்டர்களாக எப்போதும் சேவை செய்துவருகிறார்கள். 7 அதனால், அவர்கள் எல்லாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுங்கள்: யாருக்கு வரி கொடுக்க வேண்டுமோ அவருக்கு வரி கொடுங்கள்,+ யாருக்குப் பணம்* கட்ட வேண்டுமோ அவருக்குப் பணம்* கட்டுங்கள்; யாருக்குப் பயப்பட வேண்டுமோ அவருக்குப் பயப்படுங்கள்;+ யாருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமோ அவருக்கு மதிப்புக் கொடுங்கள்.+

8 யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுதான்+ நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்க வேண்டும். மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறான்.+ 9 ஏனென்றால், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது,+ கொலை செய்யக் கூடாது,+ திருடக் கூடாது,+ பேராசைப்படக் கூடாது”+ என்ற கட்டளைகளும் மற்ற எல்லா கட்டளைகளும், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்ற ஒரே கட்டளையில் அடங்கியிருக்கின்றன.+ 10 அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.+ அதனால், அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.+

11 எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருப்பதால், அதாவது தூக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது+ என்பது உங்களுக்குத் தெரிந்திருப்பதால் இவற்றையெல்லாம் செய்யுங்கள். நாம் கிறிஸ்தவர்களான சமயத்தில் இருந்ததைவிட இப்போது மீட்பு மிகவும் பக்கத்தில் இருக்கிறது. 12 இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கிவிட்டது. அதனால், நாம் இருளுக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு,+ ஒளிக்குரிய ஆயுதங்களை அணிந்துகொள்ள வேண்டும்.+ 13 குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை,*+ சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து,+ பகலில் நடக்கிறவர்களைப் போல் கண்ணியமாக நடக்க வேண்டும்.+ 14 அதனால், பாவ ஆசைகளின்படி நடக்க+ முன்கூட்டியே திட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.*+

14 விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனை ஏற்றுக்கொள்ளுங்கள்.+ அவனுடைய தனிப்பட்ட கருத்துகளை* வைத்து அவனை நியாயந்தீர்க்காதீர்கள். 2 ஒருவன் எல்லா விதமான உணவையும் சாப்பிடலாமென நம்புகிறான், விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனோ காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறான். 3 எல்லா விதமான உணவையும் சாப்பிடுகிறவன் அதைச் சாப்பிடாதவனைத் தாழ்வாகக் கருத வேண்டாம், சாப்பிடாதவனும் சாப்பிடுகிறவனை நியாயந்தீர்க்க வேண்டாம்.+ ஏனென்றால், அவனையும் கடவுள் ஏற்றுக்கொண்டிருக்கிறார். 4 வேறொருவருடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?+ அவன் நிற்பானா விழுவானா என்பதைத் தீர்மானிப்பது அவன் எஜமானுடைய பொறுப்பு.+ உண்மையில், அவன் நிற்பான், யெகோவாவினால்* அவனை நிற்க வைக்க முடியும்.

5 ஒருவன் ஒரு நாளை மற்றொரு நாளைவிட விசேஷமாக நினைக்கிறான்.+ வேறொருவனோ எல்லா நாட்களையும் ஒரே மாதிரி நினைக்கிறான்.+ எதுவானாலும் சரி, அவனவன் தன் மனதில் நன்றாக உறுதிப்படுத்திக்கொள்ளட்டும். 6 ஒரு நாளை விசேஷமாக நினைக்கிறவன் அதை யெகோவாவுக்காக* விசேஷமாக நினைக்கிறான். அதுபோலவே, சாப்பிடுகிறவன் யெகோவாவுக்காக* சாப்பிட்டு, அவருக்கு நன்றி சொல்கிறான்.+ சாப்பிடாதவனும் யெகோவாவுக்காக* சாப்பிடாமலிருந்து, அவருக்கு நன்றி சொல்கிறான்.+ 7 சொல்லப்போனால், நம்மில் யாரும் நமக்காகவே வாழ்வதுமில்லை,+ நமக்காகவே இறப்பதுமில்லை. 8 நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக* வாழ்கிறோம்,+ இறந்தாலும் யெகோவாவுக்காக* இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு* சொந்தமானவர்களாக இருக்கிறோம்.+ 9 இதற்காகத்தான், இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் எஜமானாக இருப்பதற்கு கிறிஸ்து இறந்து உயிரோடு எழுந்தார்.+

10 அதனால், நீங்கள் ஏன் உங்களுடைய சகோதரனை நியாயந்தீர்க்கிறீர்கள்?+ ஏன் உங்களுடைய சகோதரனைத் தாழ்வாக நினைக்கிறீர்கள்? நாம் எல்லாரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்போம், இல்லையா?+ 11 ஏனென்றால், “‘எனக்கு முன்னால் எல்லாரும் மண்டிபோடுவார்கள், என்னைக் கடவுள் என்று எல்லாரும் வெளிப்படையாகச் சொல்வார்கள்+ என என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’*+ என்று யெகோவா* சொல்கிறார்” என எழுதப்பட்டிருக்கிறது. 12 அதனால், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.+

13 அதனால், நாம் இனி ஒருவரை ஒருவர் நியாயந்தீர்க்கக் கூடாது.+ ஒரு சகோதரனுடைய விசுவாசம் பலவீனமாவதற்கோ அவன் விசுவாசத்தைவிட்டு விலகுவதற்கோ நாம் காரணமாகிவிடக் கூடாது என்ற தீர்மானத்தோடும் இருக்க வேண்டும்.+ 14 இயற்கையாகவே எதுவும் தீட்டானது கிடையாது என்று நம் எஜமானாகிய இயேசுவைப் பின்பற்றுகிற நான் அறிந்திருக்கிறேன்,+ அதை நம்பவும் செய்கிறேன். ஆனால், ஒருவன் ஏதோவொன்றைத் தீட்டு என நினைக்கும்போதுதான் அது அவனுக்குத் தீட்டாக இருக்கும். 15 நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் சகோதரனுக்கு மனசங்கடத்தை உண்டாக்கினால், நீங்கள் அன்பாக நடந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.+ உங்கள் உணவின் காரணமாக அவனை அழித்துவிடாதீர்கள்; அவனுக்காகவும்தானே கிறிஸ்து இறந்தார்.+ 16 அதனால், நீங்கள் செய்கிற நன்மை உங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித்தராமல் பார்த்துக்கொள்ளுங்கள். 17 கடவுளுடைய அரசாங்கம் சாப்பிடுவதோடும் குடிப்பதோடும் சம்பந்தப்பட்டதாக இல்லை.+ கடவுளுடைய சக்தியால் உண்டாகிற நீதியோடும் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடுமே சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 18 இதை மனதில் வைத்து கிறிஸ்துவுக்கு அடிமையாக வேலை செய்கிறவன் கடவுளுக்கு ஏற்றவனாகவும் மனிதர்களுக்குப் பிரியமானவனாகவும் இருக்கிறான்.

19 அதனால், மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும்+ ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.+ 20 கடவுள் கட்டியிருப்பதை உணவின் காரணமாக இடித்துப்போடாதீர்கள்.+ எல்லாமே சுத்தமானதுதான். ஆனால், ஒருவன் சாப்பிடுகிற உணவு மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால் அது அவனுக்குத் தீங்கையே உண்டாக்கும்.*+ 21 இறைச்சி சாப்பிடுவதோ திராட்சமது குடிப்பதோ வேறெதாவது செய்வதோ உங்கள் சகோதரனுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.+ 22 உங்களுடைய நம்பிக்கையை உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். தான் சரி என்று நம்புவதை ஒருவன் செய்யும்போது தன்னையே அவன் குற்றவாளியாகத் தீர்க்காதிருந்தால், அவன் சந்தோஷமானவன். 23 ஆனால், ஏதோவொரு உணவை அவன் சந்தேகத்தோடு சாப்பிடுகிறான் என்றால், ஏற்கெனவே குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டுவிட்டான். ஏனென்றால், தான் செய்வது சரி என்ற நம்பிக்கையோடு அவன் சாப்பிடவில்லை. சொல்லப்போனால், நம்பிக்கை இல்லாமல் செய்யப்படுகிற எதுவும் பாவம்தான்.

15 ஆனாலும், விசுவாசத்தில் பலமாக இருக்கிற நாம் பலவீனமாக இருக்கிறவர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ நமக்குப் பிரியமாக நாம் நடந்துகொள்ளக் கூடாது.+ 2 நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.+ 3 கிறிஸ்துவும் தனக்குப் பிரியமாக நடந்துகொள்ளாமல்,+ “உங்களைப் பழித்துப் பேசியவர்களின் பழிப்பேச்சுகளை நான் தாங்கிக்கொண்டேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நடந்துகொண்டார். 4 அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன;+ அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன.+ ஏனென்றால், அவை நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.+ 5 சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் தருகிற கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை உங்களுக்கும் கொடுக்கட்டும். 6 அப்போதுதான், நீங்கள் ஒன்றுசேர்ந்து+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளை, அவருடைய தகப்பனை, ஒரே குரலில்* புகழ்வீர்கள்.

7 அதனால், கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல்*+ நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க* வேண்டும்.+ அப்போது, கடவுளுக்குப் புகழ் சேர்ப்பீர்கள். 8 கடவுள் உண்மையுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் முன்னோர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்துவதற்காகவும்,+ விருத்தசேதனம் செய்தவர்களுக்குக் கிறிஸ்து ஊழியரானார்.+ 9 அதோடு, மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய இரக்கத்தைப் பெற்று அவரைப் புகழ்வதற்காகவும்+ கிறிஸ்து ஊழியரானார் என்று நான் சொல்கிறேன். “அதனால் எல்லா மக்கள் மத்தியிலும் நான் உங்களைப் புகழ்வேன், உங்களுடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நடந்தது. 10 அதோடு, “தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 11 “தேசங்களே, எல்லாரும் யெகோவாவை* புகழுங்கள்; எல்லா மக்களும் அவரைப் புகழ்வார்களாக” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 12 ஏசாயாவும் இப்படிச் சொல்கிறார்: “ஈசாயின் வேராக இருப்பவர் தோன்றுவார்,+ பல தேசத்து மக்களை ஆட்சி செய்வதற்கு அவர் எழும்புவார்.+ அந்த மக்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.”+ 13 நீங்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்திருப்பதால், நம்பிக்கை தருகிற கடவுள் உங்களை எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பட்டும். அப்போது, கடவுளுடைய சக்தியின் வல்லமையால் உங்களுடைய நம்பிக்கை அதிகமதிகமாகப் பலப்படும்.+

14 என் சகோதரர்களே, நீங்கள் எல்லா அறிவும் நிறைந்தவர்களாக இருப்பது போலவே, நல்ல செயல்கள் செய்வதற்குத் தயாரானவர்களாகவும் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல* தகுதியுள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். 15 இருந்தாலும் சகோதரர்களே, கடவுளுடைய அளவற்ற கருணை எனக்குக் கிடைத்திருப்பதால் இப்போது உங்களுக்குச் சில குறிப்புகளை மறுபடியும் ஞாபகப்படுத்துவதற்காக ஒளிவுமறைவில்லாமல் எழுதியிருக்கிறேன். 16 கிறிஸ்து இயேசுவின் தொண்டனாக நான் கடவுளுடைய நல்ல செய்தியை மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிப்பதற்காக அந்த அளவற்ற கருணையைப் பெற்றேன்.+ மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய சக்தியால் புனிதமாக்கப்பட்டு அவருக்குப் பிரியமான காணிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நல்ல செய்தியை அறிவிக்கும் பரிசுத்த வேலையைச் செய்து வருகிறேன்.+

17 அதனால், கிறிஸ்து இயேசுவின் சீஷனாகிய நான் கடவுளுக்குச் செய்யும் சேவைகளை நினைத்து சந்தோஷப்பட காரணம் இருக்கிறது. 18 மற்ற தேசத்து மக்கள் கீழ்ப்படிவதற்காகக் கிறிஸ்து என் மூலம் செய்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேசுவதற்கு நான் துணிய மாட்டேன். என்னுடைய சொல்லாலும் செயலாலும், 19 அற்புதங்களாலும் அடையாளங்களாலும்,+ கடவுளுடைய சக்தியின் வல்லமையாலும் எல்லாவற்றையும் அவர் செய்தார். அதனால், நான் எருசலேமிலிருந்து இல்லிரிக்கம்வரை சுற்றிலும் போய், கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை முழுமையாகப் பிரசங்கித்திருக்கிறேன்.+ 20 கிறிஸ்துவைப் பற்றி இதுவரை அறிவிக்கப்படாத இடங்களில் மட்டும்தான் அந்த நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை என்னுடைய குறிக்கோளாக வைத்தேன். ஏனென்றால், வேறொருவன் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் கட்ட எனக்கு விருப்பமில்லை. 21 அதனால், “அவரைப் பற்றி யாருக்குச் சொல்லப்படவில்லையோ அவர்கள் பார்ப்பார்கள், அவரைப் பற்றி யார் கேள்விப்படவில்லையோ அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே+ செய்யத் தீர்மானமாயிருந்தேன்.

22 அதனால்தான், உங்களிடம் வருவதற்குப் பல தடவை எனக்குத் தடங்கல் ஏற்பட்டது. 23 ஆனால், இந்த இடங்களில் நான் பிரசங்கிக்காத பகுதிகள் இனி எதுவும் இல்லை. அதோடு, உங்களிடம் வருவதற்குப் பல* வருஷங்களாக நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். 24 அதனால், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்தித்து சில காலமாவது உங்களோடு சந்தோஷமாக நேரம் செலவு செய்வேன் என்று எதிர்பார்க்கிறேன். பின்பு, அங்கிருந்து சற்றுத் தூரம் என் கூடவே வந்து என்னை வழியனுப்புவீர்கள் என்றும் நம்புகிறேன். 25 இப்போது, எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு உதவி செய்ய* புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.+ 26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற சகோதரர்கள் எருசலேமில் உள்ள ஏழை எளிய பரிசுத்தவான்களுக்குச் சந்தோஷமாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.+ 27 உண்மையில், அப்படிக் கொடுப்பதற்கு அவர்கள் கடன்பட்டிருந்தார்கள். கடவுளிடமிருந்து அந்தப் பரிசுத்தவான்கள் பெற்றுக்கொண்டதை மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள் தங்களுடைய பொருள்களைக் கொடுத்து அந்தப் பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள்.+ 28 இந்த நன்கொடையைப் பரிசுத்தவான்களின் கையில் பத்திரமாக ஒப்படைத்து என் வேலையை முடித்த பின்பு, ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்க வருவேன். 29 அப்போது, கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட நிறைவான ஆசீர்வாதங்களோடு வருவேன்.

30 சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் காரணமாகவும், கடவுளுடைய சக்தி பொழிகிற அன்பின் காரணமாகவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது இதுதான்: என்னோடு சேர்ந்து எனக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்.+ 31 யூதேயாவில் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாத ஆட்களிடமிருந்து நான் பாதுகாக்கப்பட வேண்டும்+ என்றும், எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு நான் செய்யப்போகிற உதவியை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்+ என்றும் ஜெபம் செய்யுங்கள். 32 அப்போதுதான், கடவுளுடைய விருப்பத்தின்படி* நான் சந்தோஷமாக வந்து உங்களோடு சேர்ந்து புத்துணர்ச்சி அடைவேன். 33 சமாதானத்தைத் தருகிற கடவுள் உங்கள் எல்லாரோடும் இருக்கட்டும்.+ ஆமென்.*

16 கெங்கிரேயா+ சபையில் ஊழியம் செய்கிற நம் சகோதரி பெபேயாளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.* 2 நீங்கள் பரிசுத்தவான்களை வரவேற்பதுபோல் நம் எஜமானைப் பின்பற்றுகிற அவளையும் வரவேற்று அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.+ ஏனென்றால், அவள் நிறைய பேருக்கு ஆதரவாக இருந்தாள், எனக்கும்கூட ஆதரவாக இருந்தாள்.

3 கிறிஸ்து இயேசுவின் சேவையில் என் சக வேலையாட்களாக இருக்கிற பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும்+ என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். 4 எனக்காக அவர்கள் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள்.+ அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், மற்ற தேசத்தாரின் எல்லா சபைகளும்கூட நன்றி சொல்கின்றன. 5 அந்தத் தம்பதியின் வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.+ ஆசியாவில் முதன்முதலாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவரான என் அன்புக்குரிய எப்பனெத்துவுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 6 உங்களுக்காகக் கடினமாக உழைத்த மரியாளுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 7 என்னோடு கைதிகளாயிருந்த என்னுடைய சொந்தக்காரர்கள்+ அன்றோனீக்குவுக்கும் யூனியாவுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். இவர்கள் அப்போஸ்தலர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்கள், எனக்கு முன்பே கிறிஸ்துவின் சீஷர்களானவர்கள்.

8 நம் எஜமானைப் பின்பற்றுகிற என் அன்புக்குரிய அம்பிலியாத்துக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 9 கிறிஸ்துவின் சேவையில் நம்முடைய சக வேலையாளாகிய உர்பானுவுக்கும், என்னுடைய அன்பான ஸ்தாக்கிக்குவுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். 10 கிறிஸ்துவின் சீஷனாக நல்ல பெயர் எடுத்த அப்பெல்லேவுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அரிஸ்தொபுலுவின் வீட்டில் இருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 11 என்னுடைய சொந்தக்காரர் ஏரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நம்முடைய எஜமானைப் பின்பற்றுகிற நர்கீசுவின் வீட்டில் இருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 12 நம் எஜமானுக்காகக் கடினமாய் உழைத்து வருகிற பெண்களான திரிபேனாளுக்கும் திரிபோசாளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் எஜமானுக்காக கடினமாய் உழைத்த அன்புக்குரிய பெர்சியாளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். 13 நம் எஜமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுவுக்கும் அவனுடைய அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்; அவர் எனக்கும் அம்மாதான். 14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். 15 பிலொலோகுவுக்கும், யூலியாளுக்கும், நேரேயைக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். 16 சுத்தமான இதயத்தோடு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து வாழ்த்துச் சொல்லுங்கள். கிறிஸ்துவின் எல்லா சபைகளும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கின்றன.

17 சகோதரர்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நீங்கள் கற்றுக்கொண்ட போதனைக்கு முரணாகப் பிரிவினைகளையும் தடைகளையும் ஏற்படுத்துகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்களிடமிருந்து விலகியிருங்கள்.+ 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமைகளாக இல்லை, தங்களுடைய ஆசைகளுக்கே* அடிமைகளாக இருக்கிறார்கள். கள்ளம்கபடம் இல்லாதவர்களுடைய உள்ளத்தைத் தங்கள் நயமான பேச்சினாலும் புகழ்ச்சியினாலும் ஏமாற்றுகிறார்கள். 19 நீங்கள் கீழ்ப்படிந்து நடப்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்; அதனால், உங்களை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஆனால், நீங்கள் நன்மை செய்வதில் ஞானமுள்ளவர்களாகவும், தீமையைப் பற்றித் தெரியாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.+ 20 சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்.+ நம் எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை உங்களோடு இருக்கட்டும்.

21 என்னுடைய சக வேலையாளாகிய தீமோத்தேயுவும், என்னுடைய சொந்தக்காரர்கள்+ லூகியுவும் யாசோனும் சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.

22 பவுல் சொல்லச்சொல்ல இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நான் கிறிஸ்தவ வாழ்த்துக்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

23 என்னையும் சபையார் எல்லாரையும் உபசரித்து வருகிற காயு+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார். நகர பொருளாளர்* ஏரஸ்துவும் அவருடைய சகோதரன் குவர்த்துவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 24 *——

25 கடவுளால் உங்களைப் பலப்படுத்த முடியும் என்பதை நான் அறிவிக்கிற நல்ல செய்தியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கப்படுகிற செய்தியும் காட்டுகின்றன. அந்த நல்ல செய்தி, நீண்ட காலம் மறைபொருளாக வைக்கப்பட்டு இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிற பரிசுத்த ரகசியத்தோடு+ ஒத்திருக்கிறது. 26 தீர்க்கதரிசனப் புத்தகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரகசியம், எல்லா தேசத்து மக்களுக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. என்றென்றும் இருக்கிற கடவுளின் கட்டளைப்படி அவர்கள் விசுவாசித்துக் கீழ்ப்படிவதற்காக அவர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. 27 அந்தக் கடவுள் ஒருவர்தான் ஞானமுள்ளவர்.+ இயேசு கிறிஸ்துவின் மூலம் அவருக்கே என்றென்றும் புகழ் உண்டாவதாக. ஆமென்.*

நே.மொ., “பிரித்தெடுக்கப்பட்டவன்.”

வே.வா., “ஆன்மீக.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

வே.வா., “வீண்பேச்சு பேசுகிறவர்களாகவும்.”

வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதால்.”

வே.வா., “சித்தம்.”

வே.வா., “பாவப் பரிகார பலியாக.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “அளவற்ற கருணையாக.”

வே.வா., “மன்னிக்கப்பட்டதோ.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “உத்தரவாதமாக.”

அல்லது, “இல்லாததை இருப்பதுபோல்.”

வே.வா., “கருத்தரிக்க முடியாமல்.”

அல்லது, “சமாதானமாக இருக்கிறோம்.”

அல்லது, “சந்தோஷப்படுகிறோம்.”

அல்லது, “சந்தோஷப்படுகிறோம்.”

அதாவது, “பாவிகளாக.”

வே.வா., “பொங்கிவழிந்தது.”

நே.மொ., “மகிமையால்.”

வே.வா., “மன்னிப்புப் பெற்றிருக்கிறான்.”

நே.மொ., “உடலுறுப்புகளை.”

நே.மொ., “போதனையின் மாதிரியிடம்.”

நே.மொ., “உடல் பலவீனத்தின்.”

நே.மொ., “உடலின்.”

நே.மொ., “உடலுறுப்புகளில்.”

நே.மொ., “உடலுறுப்புகளில்.”

நே.மொ., “உடலுறுப்புகளில்.”

பிள்ளைகள் தங்கள் அப்பாவைச் செல்லமாகவும், அதேசமயத்தில் மரியாதையாகவும் கூப்பிடுவதற்குப் பயன்படுத்திய எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தை இது.

நே.மொ., “நம் மனதோடு சேர்ந்து சாட்சி கொடுக்கிறது.”

இது முக்கியமாக மனிதர்களைக் குறிக்கிறது.

நே.மொ., “அதுமட்டுமல்ல, கடவுளுடைய சக்தியாகிய முதல் விளைச்சலைப் பெற்ற நாமும்கூட.”

வே.வா., “சொல்லப்படாத.”

வே.வா., “சித்தத்தின்படி.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

நே.மொ., “விரும்புகிறவனையோ ஓடுகிறவனையோ.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “செய்தியை.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

நே.மொ., “மேஜையே.”

வே.வா., “கிளைகளுக்கு எதிராகப் பெருமையடிக்காதீர்கள்.”

வே.வா., “கிளைகளுக்கு எதிராகப் பெருமையடித்தால்.”

வே.வா., “மீட்பர்.”

நே.மொ., “செல்வங்கள்.” இவை ஆன்மீகச் செல்வங்களைக் குறிக்கின்றன.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “சித்தம்.”

வே.வா., “நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்.”

வே.வா., “பகிர்ந்து கொடுத்திருக்கிற.”

வே.வா., “அறிவுரை சொல்கிறவர்கள்.”

வே.வா., “அறிவுரை சொல்லட்டும்.”

வே.வா., “நன்கொடை கொடுக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும்.”

வே.வா., “ஆர்வமாக.”

வே.வா., “முதல் படியை எடுங்கள்.”

வே.வா., “பக்திவைராக்கியத்தோடு.”

வே.வா., “உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள்.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “மேட்டிமையான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

அதாவது, ஒருவரைச் சாந்தப்படுத்தி, அவருடைய கல்நெஞ்சத்தைக் கரைய வைப்பதைக் குறிக்கிறது.

வே.வா., “உயர் அதிகாரத்துக்கு.”

நே.மொ., “வாள்.”

நே.மொ., “கடும் கோபத்தை.”

நே.மொ., “கடும் கோபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.”

வே.வா., “கப்பம்.”

வே.வா., “கப்பம்.”

வே.வா., “சக மனிதர்மேலும்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “இயேசு கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுங்கள்.”

அல்லது, “மனதுக்குள் வருகிற கேள்விகளை.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “அது தவறு.”

நே.மொ., “வாயினால்.”

வே.வா., “ஏற்றுக்கொண்டதுபோல்.”

வே.வா., “ஏற்றுக்கொள்ள.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “ஆலோசனை சொல்ல.”

அல்லது, “சில.”

நே.மொ., “சேவை செய்ய.”

வே.வா., “சித்தத்தின்படி.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

வே.வா., “சிபாரிசு செய்கிறேன்.”

வே.வா., “வயிற்றுக்கே.”

வே.வா., “நிர்வாகி.”

இணைப்பு A3-ஐப் பாருங்கள்.

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்