உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt நெகேமியா 1:1-13:31
  • நெகேமியா

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நெகேமியா
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நெகேமியா

நெகேமியா

1 அகலியாவின் மகனான நெகேமியாவின்*+ வார்த்தைகள்: 20-ஆம் வருஷம் கிஸ்லே* மாதத்தில் நான் சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். 2 அப்போது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும்+ வேறு சிலரும் யூதாவிலிருந்து வந்தார்கள். பாபிலோனிலிருந்து விடுதலையாகிப்+ போன யூதர்களைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் விசாரித்தேன். 3 அதற்கு அவர்கள், “கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்படாமல் யூதா மாகாணத்தில் விடப்பட்ட ஜனங்கள் மோசமான நிலைமையில் இருக்கிறார்கள், ரொம்பவே அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+ எருசலேமின் மதில்கள் இடிந்து கிடக்கின்றன.+ அதன் நுழைவாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கின்றன”+ என்று சொன்னார்கள்.

4 இதைக் கேட்டதும் நான் அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். அதன்பின் நாள்கணக்காக துக்கம் அனுசரித்துக்கொண்டும், விரதம் இருந்துகொண்டும்,+ பரலோகத்தின் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டும் இருந்தேன். 5 “பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவே, அதிசயமும் அற்புதமுமானவரே, உங்கள்மேல் அன்புவைத்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம்+ மாறாத அன்பைக் காட்டுபவரே, ஒப்பந்தத்தைக் காப்பவரே, 6 தயவுசெய்து அடியேனைப் பாருங்கள், இன்று நான் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். உங்களுடைய ஊழியர்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களை உங்கள்முன் ஒத்துக்கொண்டு ராத்திரி பகலாய் அவர்களுக்காகக் கெஞ்சுகிறேன்.+ நானும் என் ஜனங்களும்* பாவம் செய்துவிட்டோம்.+ 7 உங்களுக்குப் பிடிக்காத வழியில் போய்விட்டோம்.+ உங்களுடைய ஊழியரான மோசே மூலம் நீங்கள் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும்+ பின்பற்றாமல் இருந்துவிட்டோம்.

8 மோசே மூலம் நீங்கள் சொன்னதை* தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். நீங்கள் அவரிடம், ‘என் பேச்சைக் கேட்காமல் போனால், உங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்திவிடுவேன்.+ 9 ஆனால் என் வழிக்குத் திரும்பி வந்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், நீங்கள் பூமியின் எந்த மூலைக்குத் துரத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ என் பெயரின் மகிமைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிற இடத்தில்+ உங்களைக் குடிவைப்பேன்’ என்று சொன்னீர்களே. 10 இஸ்ரவேலர்கள் உங்களுடைய ஊழியர்கள், உங்களுடைய ஜனங்கள். அவர்களை உங்களுடைய மகா வல்லமையாலும் கைபலத்தாலும் விடுவித்தீர்கள்.+ 11 யெகோவாவே, அடியேனின் ஜெபத்தையும் உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்க விரும்புகிறவர்களின் ஜெபத்தையும் தயவுசெய்து கேளுங்கள். அடியேன் நினைப்பது இன்று கைகூடி வருவதற்குத் தயவுசெய்து உதவுங்கள். ராஜா எனக்குக் கரிசனை காட்டும்படி செய்யுங்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.

நான் ராஜாவுக்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.+

2 அது அர்தசஷ்டா ராஜா+ ஆட்சி செய்த 20-ஆம் வருஷம்,+ நிசான்* மாதம். ராஜாவுக்கு முன்னால் திராட்சமது வைக்கப்பட்டிருந்தது. எப்போதும்போல் நான் திராட்சமதுவை எடுத்து ராஜாவுக்குக் கொடுத்தேன்.+ அன்று நான் துக்கமாக இருந்தேன். ராஜாவுக்கு முன்னால் ஒருநாளும் நான் அப்படி இருந்ததே இல்லை. 2 அதனால் ராஜா என்னிடம், “உன் உடம்புக்குத்தான் ஒன்றுமில்லையே, அப்புறம் ஏன் உன் முகம் இப்படி வாடியிருக்கிறது? உன் மனதுதான்* சரியில்லை என்று நினைக்கிறேன்” என்றார். அதைக் கேட்டதும் நான் ரொம்பவே பயந்துபோனேன்.

3 உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன். 4 அதற்கு ராஜா, “நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். உடனடியாக, பரலோகத்தின் கடவுளிடம் ஜெபம் செய்தேன்.+ 5 பின்பு ராஜாவிடம், “உங்களுக்கு நல்லதாகப் பட்டால், என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், யூதாவுக்குப் போய் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரத்தைத் திரும்பக் கட்டுவதற்கு+ என்னை அனுப்புங்கள்” என்று சொன்னேன். 6 அப்போது, பட்டத்து ராணியும் ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னிடம், “அங்கே போவதற்கு எத்தனை நாளாகும், எப்போது திரும்பி வருவாய்?” என்று கேட்டார். என்னை அனுப்ப ராஜா விரும்புகிறார் என்று தெரிந்ததும்,+ திரும்பி வர இவ்வளவு காலம்+ ஆகும் என்று சொன்னேன்.

7 பின்பு ராஜாவிடம், “நான் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ வழியாகத்தான் யூதாவுக்குப் போக வேண்டும். அதனால் உங்களுக்கு நல்லதாகப் பட்டால், அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போக என்னை அனுமதிக்கும்படி அங்கே இருக்கிற ஆளுநர்களுக்குக் கடிதங்களை எழுதிக் கொடுங்கள். 8 ஆலயத்தைச் சேர்ந்த கோட்டையின் கதவுகளுக்கும்,+ நகரத்தின் மதில்களுக்கும்,+ நான் தங்கப்போகிற வீட்டுக்கும் வேண்டிய மரச்சட்டங்களைத் தரும்படி ராஜாவுடைய வன* அதிகாரியான ஆசாபுக்கும் கடிதம் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். என் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்ததால்+ ராஜா அவற்றை எழுதிக் கொடுத்தார்.+

9 அதுமட்டுமல்ல, என்னோடு படைத் தலைவர்களையும் குதிரைவீரர்களையும் அனுப்பினார். நான் அங்கிருந்து புறப்பட்டு ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர்களிடம் வந்து ராஜாவின் கடிதங்களைக் கொடுத்தேன். 10 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நல்லது செய்ய ஒருவர் வந்திருப்பதை ஓரோனியனான சன்பல்லாத்தும்+ அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்+ கேள்விப்பட்டபோது மிகவும் எரிச்சல் அடைந்தார்கள்.

11 கடைசியில், நான் எருசலேமுக்கு வந்து சேர்ந்தேன். அங்கே மூன்று நாட்கள் தங்கினேன். 12 ராத்திரியில் எழுந்து, சில ஆட்களைக் கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினேன். ஆனால் எருசலேமுக்காக நான் என்னென்ன செய்ய வேண்டுமென்று என் கடவுள் என் உள்ளத்தில் உணர்த்தினாரோ, அதையெல்லாம் நான் யாரிடமும் சொல்லவில்லை. நான் ஏறிப் போன கழுதையைத் தவிர வேறெந்த மிருகமும் என்னிடம் இல்லை. 13 அன்றைக்கு ராத்திரி ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்’+ வழியாக ‘பெரிய பாம்பின் நீரூற்றை’ கடந்து ‘குப்பைமேட்டு நுழைவாசலுக்கு’+ வந்து சேர்ந்தேன். இடிந்து கிடக்கும் எருசலேம் மதில்களையும் நெருப்பில் எரிக்கப்பட்டிருந்த அதன் நுழைவாசல்களையும்+ பார்வையிட்டேன். 14 அங்கிருந்து ‘நீரூற்று நுழைவாசலுக்கும்’+ ‘ராஜாவின் குளத்துக்கும்’ போனேன். ஆனால், என்னுடைய கழுதை போவதற்கு அங்கு இடமே இருக்கவில்லை. 15 ஆனாலும், அன்றைக்கு ராத்திரி பள்ளத்தாக்கின்*+ வழியாகவே போய் மதில்களைப் பார்வையிட்டேன். பின்பு, ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்’ வழியாகத் திரும்பி வந்துவிட்டேன்.

16 நான் எங்கே போனேன், என்ன செய்தேன் என்றெல்லாம் துணை அதிகாரிகளுக்குத்+ தெரியாது. ஏனென்றால், அவர்களிடமும் யூதர்களிடமும் குருமார்களிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் மற்ற வேலையாட்களிடமும் அதுவரை நான் எதையுமே சொல்லவில்லை. 17 கடைசியில் அவர்களிடம், “நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். எருசலேம் பாழாய்க் கிடப்பதையும், அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகியிருப்பதையும் நீங்களே பார்க்கிறீர்கள். இனியும் இந்தக் கேவலமான நிலைமை நமக்கு வேண்டாம். வாருங்கள், எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவோம்” என்று சொன்னேன். 18 பின்பு, என் கடவுள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்தார்*+ என்பதையும், ராஜா என்னிடம் என்ன சொன்னார்+ என்பதையும் அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “நாம் உடனடியாகப் போய் மதில்களைக் கட்ட ஆரம்பிக்கலாம்” என்று சொல்லி, அந்த நல்ல வேலையைச் செய்ய ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தினார்கள்.+

19 இந்த விஷயத்தை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்+ கேள்விப்பட்டபோது எங்களைக் கேலி செய்தார்கள்.+ எங்களைக் கேவலமாகப் பேசி, “என்ன செய்கிறீர்கள்? ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்களோ?” என்று கேட்டார்கள்.+ 20 அதற்கு நான், “வேலையை நல்லபடியாக முடிக்க பரலோகத்தின் கடவுள் எங்களுக்கு உதவுவார்.+ அவருடைய ஊழியர்களான நாங்கள் மதில்களைக் கட்டத்தான் போகிறோம். எருசலேமில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, உரிமையும் இல்லை; எருசலேமின் வரலாற்றில் உங்களுக்கு இடமும் இல்லை”*+ என்று சொன்னேன்.

3 தலைமைக் குருவான எலியாசிபும்+ அவருடைய சகோதரர்களான குருமார்களும் ‘ஆட்டு நுழைவாசலை’+ கட்டினார்கள். அதை அர்ப்பணம் செய்து*+ அதற்குக் கதவுகளை வைத்தார்கள். அவர்கள் மேயா கோபுரம்வரையிலும்+ அதைத் தொடர்ந்து அனானெயேல் கோபுரம்வரையிலும்+ மதிலைக் கட்டி அர்ப்பணம் செய்தார்கள். 2 அடுத்த பகுதியை, எரிகோ ஊர் ஆண்கள்+ கட்டினார்கள். அடுத்த பகுதியை, இம்ரியின் மகன் சக்கூர் கட்டினார்.

3 அசெனாவின் வம்சத்தார் ‘மீன் நுழைவாசலை’+ கட்டினார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும்+ பொருத்தினார்கள். 4 அடுத்த பகுதியை, அக்கோசுக்குப் பிறந்த ஊரியாவின் மகன் மெரெமோத்+ பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, மெஷெசாபெயேலுக்குப் பிறந்த பெரகியாவின் மகன் மெசுல்லாம்+ பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பானாவின் மகன் சாதோக் பழுதுபார்த்தார். 5 அடுத்த பகுதியை, தெக்கோவா ஊர் மக்கள்+ பழுதுபார்த்தார்கள். ஆனால், அவர்களுடைய முக்கியப் பிரமுகர்கள் வேலை செய்ய மறுத்தார்கள். ஏனென்றால், மேற்பார்வை செய்கிறவர்களின் கீழ் வேலை செய்வதைக் கௌரவக் குறைச்சலாக நினைத்தார்கள்.

6 பசெயாவின் மகன் யொயதாவும் பேசோதியாவின் மகன் மெசுல்லாமும் ‘பழைய நகரின் நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள். 7 அடுத்த பகுதியை, கிபியோனியனான+ மெலதீயாவும் மிஸ்பாவைச்+ சேர்ந்த மெரோனோத்தியனான யாதோனும் பழுதுபார்த்தார்கள். இவர்கள் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநருடைய ஆட்சியின் கீழ் இருந்தார்கள். 8 அடுத்த பகுதியை, தங்க ஆசாரிகளில் ஒருவரான அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, வாசனைத் தைலம் செய்கிறவர்களில் ஒருவரான அனனியா பழுதுபார்த்தார். இவர்கள் இரண்டு பேரும் ‘அகன்ற மதில்’+ வரையாக கல்தளம் அமைத்தார்கள். 9 அடுத்த பகுதியை, ஹூரின் மகனும் எருசலேமின் பாதி மாகாணத்துக்குத் தலைவருமான ரெபாயா பழுதுபார்த்தார். 10 அடுத்ததாக, அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்தார்.

11 மற்றொரு பகுதியையும் ‘அடுப்புகளின் கோபுரத்தையும்,’+ ஆரீமின் மகன்+ மல்கீயாவும் பாகாத்-மோவாபின் மகன்+ அசூபும் பழுதுபார்த்தார்கள். 12 அடுத்த பகுதியை, அல்லோகேசின் மகனும் எருசலேமின் பாதி மாகாணத்துக்குத் தலைவருமான சல்லூம் தன்னுடைய மகள்களோடு சேர்ந்து பழுதுபார்த்தார்.

13 ஆனூனும் சனோவா ஊர்+ ஜனங்களும் ‘பள்ளத்தாக்கு நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள். அவர்கள் ‘குப்பைமேட்டு நுழைவாசல்’+ வரையாக சுமார் 1,460 அடி* நீளத்துக்கு மதிலைப் பழுதுபார்த்தார்கள். 14 ரேகாபின் மகனும் பெத்-கேரேம் மாகாணத்துக்குத்+ தலைவருமான மல்கீயா, ‘குப்பைமேட்டு நுழைவாசலை’ பழுதுபார்த்தார். அதற்குக் கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்.

15 கொல்லோசேயின் மகனும் மிஸ்பா மாகாணத்துக்குத்+ தலைவருமான சல்லுன், ‘நீரூற்று நுழைவாசலை’+ பழுதுபார்த்தார். அதற்குக் கூரை அமைத்து கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார். அதோடு, ‘ராஜாவின் தோட்டத்துக்கு’+ பக்கத்திலுள்ள ‘சேலா* குளத்தின்’ மதிலை,+ ‘தாவீதின் நகரத்திலிருந்து’+ கீழே இறங்குகிற ‘படிக்கட்டு’+ வரையாகவும் பழுதுபார்த்தார்.

16 அடுத்ததாக, அஸ்பூகின் மகனும் பெத்-சூரின்+ பாதி மாகாணத்துக்குத் தலைவருமான நெகேமியா, ‘தாவீதின் கல்லறைத் தோட்டத்துக்கு’+ முன்னால் ஆரம்பித்து, வெட்டப்பட்ட குளம் வரையாகவும்+ ‘படைவீரர்களின் பாசறை’ வரையாகவும் பழுதுபார்த்தார்.

17 அடுத்த பகுதிகளை லேவியர்கள் பழுதுபார்த்தார்கள். முதலாவதாக, பானியின் மகன் ரெகூம் பழுதுபார்த்தார். அடுத்ததாக, கேகிலாவின்+ பாதி மாகாணத்துக்குத் தலைவரான அஷபியா தன் மாகாணத்தின் சார்பில் பழுதுபார்த்தார். 18 அடுத்த பகுதியை, அவர்களுடைய சகோதரர்கள் பழுதுபார்த்தார்கள். முக்கியமாக, எனாதாத்தின் மகனும் கேகிலாவின் பாதி மாகாணத்துக்குத் தலைவருமான பாபாய் பழுதுபார்த்தார்.

19 அடுத்ததாக, மேட்டுப் பகுதிக்கு முன்னால் ஆரம்பித்து முட்டுச்சுவருக்குப்+ பக்கத்திலுள்ள ஆயுதக்கிடங்கு வரையான பகுதியை, யெசுவாவின் மகனும்+ மிஸ்பாவின் தலைவருமான ஏத்சேர் பழுதுபார்த்தார்.

20 அடுத்ததாக, முட்டுச்சுவரில் ஆரம்பித்து தலைமைக் குருவான எலியாசிபின்+ வீட்டுவாசல் வரையுள்ள பகுதியை, சாபாயின் மகன்+ பாருக் மிக மும்முரமாகப் பழுதுபார்த்தார்.

21 அடுத்ததாக, எலியாசிபுடைய வீட்டின் வாசலிலிருந்து அதன் முனை வரையுள்ள பகுதியை, அக்கோசுக்குப் பிறந்த ஊரியாவின் மகன் மெரெமோத்+ பழுதுபார்த்தார்.

22 அடுத்ததாக, யோர்தான்* பிரதேசத்தைச்+ சேர்ந்த குருமார்கள் பழுதுபார்த்தார்கள். 23 அடுத்ததாக, பென்யமீனும் அசூபும் தங்களுடைய வீட்டுக்கு எதிரே உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்கள். அடுத்ததாக, அனனெயாவுக்குப் பிறந்த மாசெயாவின் மகன் அசரியா தன் வீட்டுக்குப் பக்கத்தில் பழுதுபார்த்தார். 24 அடுத்ததாக, அசரியாவின் வீட்டிலிருந்து முட்டுச்சுவர்+ வரைக்கும், அதைத் தொடர்ந்து மூலைவரைக்கும் உள்ள பகுதியை, எனாதாத்தின் மகன் பின்னூய் பழுதுபார்த்தார்.

25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார்.

26 ஓபேலில்+ வாழ்ந்த ஆலயப் பணியாளர்கள்,*+ கிழக்கே இருக்கிற ‘தண்ணீர் நுழைவாசலுக்கும்’+ மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் கோபுரத்துக்கும் முன்னாலுள்ள பகுதிவரை பழுதுபார்த்தார்கள்.

27 அடுத்ததாக, மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய கோபுரத்தின் முன்னால் ஆரம்பித்து ஓபேலின் மதில் வரையுள்ள மற்றொரு பகுதியை, தெக்கோவா ஊர் மக்கள்+ பழுதுபார்த்தார்கள்.

28 ‘குதிரை நுழைவாசல்’+ தொடங்கி, குருமார்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு எதிரே உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்கள்.

29 அடுத்ததாக, இம்மேரின் மகன் சாதோக்+ தன்னுடைய வீட்டுக்கு எதிரே உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.

அடுத்த பகுதியை, ‘கிழக்கு நுழைவாசலின்’ காவலரும்+ செக்கனியாவின் மகனுமான செமாயா பழுதுபார்த்தார்.

30 அடுத்த பகுதியை, செலேமியாவின் மகனான அனனியாவும் சாலாபின் ஆறாவது மகனான ஆனூனும் பழுதுபார்த்தார்கள்.

அடுத்ததாக, பெரகியாவின் மகனான மெசுல்லாம்+ தன்னுடைய வீட்டுக்கு* முன்னால் உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.

31 அடுத்ததாக, தங்க ஆசாரிகளின் சங்கத்தைச் சேர்ந்த மல்கீயா, ‘சோதனை நுழைவாசலின்’ எதிரில் ஆலயப் பணியாளர்களும்* வியாபாரிகளும் தங்கியிருக்கிற வீடுவரைக்கும்,+ மூலையில் உள்ள மேல்மாடிவரைக்கும் பழுதுபார்த்தார்.

32 மூலையில் உள்ள மேல்மாடிக்கும் ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ இடையிலிருந்த பகுதியை, தங்க ஆசாரிகளும் மற்ற வியாபாரிகளும் பழுதுபார்த்தார்கள்.

4 நாங்கள் மதிலைத் திரும்பக் கட்டுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், சன்பல்லாத்+ கோபத்தில் கொதித்துப்போனான். அதனால், யூதர்களை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான். 2 “கையாலாகாத இந்த யூதர்கள் என்ன செய்வதாக நினைக்கிறார்கள்? அவர்களாகவே மதிலைக் கட்டிவிடுவார்களோ? எரிந்து பாழாகக் கிடக்கிற கற்களை+ வைத்தே அதைக் கட்டி எழுப்புவார்களோ? ஒரே நாளில் வேலையை முடித்துவிட்டு பலி செலுத்துவார்களோ?” என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியப் படைவீரர்களுக்கும் முன்னால் ஏளனமாகப் பேசினான்.

3 அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான+ தொபியா,+ “ஏதோ மதில் கட்டுகிறார்களாம், ஒரு குள்ளநரி ஏறினால்கூட அது பொலபொலவென்று இடிந்து விழுந்துவிடும்” என்று சொன்னான்.

4 அப்போது நான், “எங்கள் கடவுளே, கேளுங்கள். அந்த ஆட்கள் எங்களைக் கேவலப்படுத்துகிறார்கள்.+ அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் அவர்களுக்கே பலிக்கும்படி செய்யுங்கள்.+ சூறையாடப்பட்ட பொருளைப் போல அவர்களை எதிரிகளின் கையில் கொடுங்கள். அவர்களை வேறு தேசத்துக்குத் துரத்துங்கள். 5 மதில் கட்டுகிறவர்களை அவர்கள் மட்டமாகப் பேசுகிறார்கள். அவர்களுடைய குற்றத்தைக் கண்டும்காணாமல் விட்டுவிடாதீர்கள், அவர்களுடைய பாவத்தை மன்னிக்காதீர்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.

6 பின்பு, நாங்கள் தொடர்ந்து மதிலைக் கட்டினோம். அதிலிருந்த எல்லா இடைவெளிகளையும் இணைத்து, பாதி உயரம்வரை கட்டி முடித்தோம். ஜனங்கள் முழு மூச்சோடு* வேலை செய்துகொண்டே இருந்தார்கள்.

7 எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை மும்முரமாக நடப்பதையும், அதன் இடைவெளிகள் அடைக்கப்பட்டு வருவதையும் சன்பல்லாத்தும் தொபியாவும்+ அரேபியர்களும்+ அம்மோனியர்களும் அஸ்தோத்தியர்களும்+ கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்தார்கள். 8 கும்பலாகப் போய் எருசலேமைத் தாக்கி அங்கே கலவரம் உண்டாக்க சதித்திட்டம் தீட்டினார்கள். 9 ஆனால், நாங்கள் எங்களுடைய கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, பாதுகாப்புக்காக ராத்திரி பகலாகக் காவலர்களை நிறுத்தினோம்.

10 இருந்தாலும் யூதா ஜனங்கள், “வேலை செய்கிறவர்கள்* ரொம்பவே ஓய்ந்துவிட்டார்கள், அள்ள அள்ள கல்லும் மண்ணும் வந்துகொண்டே இருக்கிறது. மதிலை நம்மால் கட்டி முடிக்கவே முடியாது” என்று சொன்னார்கள்.

11 எங்கள் எதிரிகள்கூட, “நாம் திடுதிப்பென்று போய் அவர்களைத் தீர்த்துக்கட்டிவிடலாம், அவர்களுடைய வேலையை முடக்குவதற்கு அதுதான் வழி” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

12 எதிரிகளைச் சுற்றி வாழ்ந்த யூதர்கள் எங்களிடம் வந்தபோதெல்லாம், “அந்த ஆட்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து தாக்கப்போகிறார்கள்!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

13 மதிலுக்குப் பின்புறம் எதிரிகளுக்குச் சாதகமாக இருக்கிற மிகத் தாழ்வான இடங்களில் நான் காவலுக்கு ஆட்களை நிறுத்தினேன். வாள், ஈட்டி, வில் ஆகியவற்றோடு குடும்பம் குடும்பமாக அவர்களை நிற்க வைத்தேன். 14 அவர்கள் பயப்படுவதை நான் பார்த்தவுடனே, முக்கியப் பிரமுகர்களிடமும்+ துணை அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும், “எதிரிகளை நினைத்துப் பயப்படாதீர்கள்.+ அதிசயமானவரும் அற்புதமானவருமான யெகோவாவை+ நினைத்துப் பாருங்கள். உங்கள் சகோதரர்களுக்காகவும் மனைவி மக்களுக்காகவும் வீடுகளுக்காகவும் துணிந்து போராடுங்கள்” என்று சொன்னேன்.

15 எதிரிகள் தங்களுடைய சதி அம்பலமானதையும் தங்களுடைய திட்டத்தை உண்மைக் கடவுள் குலைத்துவிட்டதையும் புரிந்துகொண்டார்கள். அதன்பின், நாங்கள் எல்லாரும் மதிலைக் கட்டும் வேலையில் மறுபடியுமாக இறங்கினோம். 16 அந்த நாளிலிருந்து, என்னுடைய ஆட்களில் பாதிப் பேர் வேலை செய்தார்கள்,+ மீதிப் பேர் ஈட்டியோடும் கேடயத்தோடும் வில்லோடும் உடல்கவசத்தோடும் நின்றார்கள். மதிலைக் கட்டிக்கொண்டிருந்த யூதா ஜனங்களுக்கு அவர்களுடைய தலைவர்கள்+ ஆதரவு தந்தார்கள்.* 17 சுமை சுமப்பவர்கள் ஒரு கையில் வேலை செய்தார்கள், இன்னொரு கையில் ஆயுதத்தைப் பிடித்திருந்தார்கள். 18 கட்டுமான வேலை செய்த ஒவ்வொருவரும் தங்களுடைய இடுப்பில் வாளைக் கட்டிக்கொண்டார்கள். ஊதுகொம்பை ஊத வேண்டியவன்+ எனக்குப் பக்கத்தில் நின்றான்.

19 பின்பு, நான் முக்கியப் பிரமுகர்களிடமும் துணை அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும், “இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. நாம் மதிலைச் சுற்றிலும் தூரதூரமாக நிற்கிறோம். 20 அதனால், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்கும்போது எல்லாரும் இங்கே கூடிவர வேண்டும். நம்முடைய கடவுள் நமக்காகப் போர் செய்வார்”+ என்றேன்.

21 அதனால், விடியற்காலையில் ஆரம்பித்து நட்சத்திரங்கள் தோன்றும்வரை எங்களில் பாதிப் பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள், மீதிப் பேர் ஈட்டிகளோடு நின்றுகொண்டிருந்தார்கள். 22 அப்போது நான் ஜனங்களைப் பார்த்து, “ராத்திரியில் ஆண்கள் தங்கள் உதவியாளருடன் எருசலேமுக்குள் தங்க வேண்டும். அவர்கள் ராத்திரியில் மாறிமாறி நம்மைக் காவல் காப்பார்கள், பகலில் வேலை செய்வார்கள்” என்று சொன்னேன். 23 நானும், என் சகோதரர்களும், என் உதவியாளர்களும்,+ என் பின்னால் வந்த காவலர்களும் எங்கள் உடைகளைக் கழற்றவே இல்லை; வலது கையில் ஆயுதத்தைப் பிடித்துக்கொண்டே இருந்தோம்.

5 பின்பு, ஆண்களும் பெண்களும்* தங்களுடைய யூத சகோதரர்கள் செய்த அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் புலம்பித் தள்ளினார்கள்.+ 2 சிலர், “நாங்கள் குழந்தைகுட்டிகளோடு நிறைய பேர் இருக்கிறோம். தானியத்தைக் கடன் வாங்கித்தான் எல்லாரும் உயிர்வாழ வேண்டியிருக்கிறது” என்று சொன்னார்கள். 3 இன்னும் சிலர், “வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடமானம் வைத்துதான் இந்தப் பஞ்சகாலத்தில் தானியம் வாங்குகிறோம்” என்று சொன்னார்கள். 4 வேறு சிலர், “ராஜாவுக்கு வரி செலுத்துவதற்காக* எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அடமானம் வைத்துவிட்டோம்.+ 5 நாங்களும் எங்கள் சகோதரர்களும் ஒரே இரத்தம்தானே, எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகள் மாதிரிதானே! ஆனால், நாங்கள் மட்டும் எங்கள் பிள்ளைகளை அடிமைகளாக விற்க வேண்டியிருக்கிறது, எங்களுடைய பெண் பிள்ளைகள் சிலரை ஏற்கெனவே விற்றுவிட்டோம்.+ எங்கள் வயல்களும் திராட்சைத் தோட்டங்களும் மற்றவர்கள் கைக்குப் போய்விட்டதால், இப்போது எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை” என்று புலம்பினார்கள்.

6 அவர்கள் புலம்பியதைக் கேட்டபோது எனக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 7 இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். பின்பு, முக்கியப் பிரமுகர்களையும் துணை அதிகாரிகளையும் பார்த்து, “உங்களுடைய சகோதரர்களிடமிருந்தே ஏன் வட்டி வாங்குகிறீர்கள்?”+ என்று சொல்லி, அவர்களுடைய தப்பைத் தட்டிக்கேட்டேன்.

அதோடு, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜனங்கள் எல்லாரையும் கூடிவரச் சொன்னேன். 8 நான் அவர்களிடம், “நம்முடைய யூத சகோதரர்கள் மற்ற தேசத்தாரிடம் விற்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் முடிந்தளவுக்கு அவர்களை மீட்டுக்கொண்டு வந்தோம். இப்போது அவர்களை நீங்களே விற்கலாமா?+ அவர்களை மறுபடியும் நாங்கள் மீட்க வேண்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டார்கள். 9 பின்பு நான் அவர்களிடம், “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கள் நம்முடைய கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டாமா?+ எதிரிகள் நம்மைக் கேவலமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கலாமா? 10 நானும் என் சகோதரர்களும் உதவியாளர்களும் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்துவருகிறோம். இனி வட்டிக்குக் கடன் கொடுப்பதைத் தயவுசெய்து நாம் நிறுத்திவிடலாம்.+ 11 ஜனங்களுடைய வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும், நீங்கள் வட்டியாக வாங்குகிற நூற்றிலொரு பங்கு* பணத்தையும், தானியத்தையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும் இன்றைக்கே தயவுசெய்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள்”+ என்று சொன்னேன்.

12 அதற்கு அந்த ஜனங்கள், “நாங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம், இனிமேல் எதையும் கேட்க மாட்டோம். நீங்கள் சொல்கிறபடியே செய்கிறோம்” என்றார்கள். அப்போது நான் குருமார்களை வரவழைத்து, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதாக அந்த ஜனங்களைச் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னேன். 13 அதோடு, என் மேலங்கியின் மடிப்புகளை உதறி, “சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத எவனையும் உண்மைக் கடவுள் இதேபோல் உதறித்தள்ளட்டும். அவனுடைய வீட்டிலிருந்து இதேபோல் அவனை உதறித்தள்ளி, உடைமைகள் எதுவும் இல்லாமல் செய்துவிடட்டும்” என்று சொன்னேன். அதற்கு சபையார் எல்லாரும், “ஆமென்!”* என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள். கொடுத்த வாக்கை அவர்கள் காப்பாற்றினார்கள்.

14 அர்தசஷ்டா ராஜா+ என்னை யூதாவின் ஆளுநராக+ நியமித்த நாளிலிருந்து, அதாவது அவருடைய ஆட்சியின் 20-ஆம் வருஷத்திலிருந்து+ 32-ஆம் வருஷம் வரைக்கும்,+ இந்த 12 வருஷங்களாக நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்குக் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிச் சாப்பிடவில்லை.+ 15 ஆனால், எனக்கு முன்பு ஆளுநர்களாக இருந்தவர்கள் உணவுக்காகவும் திராட்சமதுவுக்காகவும் தினசரி 40 வெள்ளி சேக்கலை* வசூலித்து, ஜனங்களைக் கஷ்டப்படுத்திவந்தார்கள். அந்த ஆளுநர்களின் உதவியாளர்களும் ஜனங்களை அடக்கி ஒடுக்கினார்கள். ஆனால் நான், கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை.+

16 மதிலைக் கட்டுகிறவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்தேன். என்னுடைய உதவியாளர்கள் எல்லாரும்கூட வேலை செய்ய அங்கே கூடிவந்தார்கள். நாங்கள் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.+ 17 யூதர்களிலும் துணை அதிகாரிகளிலும் 150 பேருக்கு நான் உணவு கொடுத்தேன். மற்ற தேசங்களிலிருந்து வந்தவர்களுக்கும் உணவு கொடுத்தேன். 18 என்னுடைய செலவில் தினமும் ஒரு காளையும், கொழுமையான ஆறு செம்மறியாடுகளும், பறவைகளும் சமைக்கப்பட்டன. அதோடு, பத்து நாட்களுக்கு ஒரு தடவை விதவிதமான திராட்சமது ஏராளமாகப் பரிமாறப்பட்டது. அப்படியிருந்தும், ஆளுநருக்குக் கொடுக்கப்படும் உணவை நான் கேட்டு வாங்கவில்லை. ஏனென்றால் ஜனங்கள் ஏற்கெனவே கஷ்டப்பட்டு சேவை* செய்துகொண்டிருந்தார்கள். 19 என் கடவுளே, இந்த ஜனங்களுக்கு நான் செய்த உதவிகளை மறந்துவிடாமல், என்னைப் பிரியத்தோடு நினைத்துப் பாருங்கள்.+

6 நான் மதிலைத் திரும்பக் கட்டி+ அதன் எல்லா இடைவெளிகளையும் அடைத்துவிட்ட விஷயத்தை சன்பல்லாத்தும், தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்,+ மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டார்கள். (ஆனாலும், நுழைவாசல்களில் அதுவரை நான் கதவுகளைப் பொருத்தவில்லை.)+ 2 சன்பல்லாத்தும் கேஷேமும் உடனடியாக என்னிடம் ஆட்களை அனுப்பி, “ஓனோ சமவெளியில் உள்ள+ கிராமப்புறத்தில் நாம் சந்தித்துப் பேசலாம், வா” என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள். 3 அதனால் நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அதை விட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தால் வேலை நின்றுபோகும். என்னால் வர முடியாது” என்று சொன்னேன். 4 நான்கு தடவை அவர்கள் அதே விஷயத்தைச் சொல்லி அனுப்பினார்கள், ஒவ்வொரு தடவையும் நான் அதே பதிலைச் சொல்லி அனுப்பினேன்.

5 அதன்பின், ஐந்தாவது தடவையாக சன்பல்லாத் அதே விஷயத்தை ஒரு கடிதத்தில் எழுதி, அதற்கு முத்திரை போடாமல் தன் உதவியாளனிடம் கொடுத்து அனுப்பினான். 6 அதில், “நீ மற்ற யூதர்களோடு சேர்ந்து கலகம் செய்யத் திட்டம் போட்டிருப்பதாகவும்,+ அதற்காகத்தான் மதிலைக் கட்டுவதாகவும் சுற்றியுள்ள எல்லா தேசத்தாரும் பேசிக்கொள்கிறார்கள். கேஷேம்கூட+ அப்படித்தான் சொல்கிறான். கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நீ எந்த நேரத்திலும் அவர்களுடைய ராஜாவாகிவிடுவாய். 7 அதனால்தான், ‘யூதாவை ஆள ராஜா வந்துவிட்டார்!’ என்று எருசலேம் முழுக்க உன்னைப் பற்றி அறிவிப்பதற்கு தீர்க்கதரிசிகளை நியமித்திருக்கிறாய். இதெல்லாம் ராஜாவின் காதுக்கு எட்டப்போகிறது. அதனால், நீ வந்து எங்களைச் சந்தித்துப் பேசு” என்று எழுதியிருந்தான்.

8 அதற்கு நான், “நீ சொல்வது எதுவுமே உண்மையில்லை. சும்மா கதை அளக்காதே” என்று பதில் அனுப்பினேன். 9 அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப் பார்த்தார்கள். “யூதர்கள் சோர்ந்துபோய் வேலையை விட்டுவிடுவார்கள், அவர்களால் மதிலைக் கட்டி முடிக்கவே முடியாது”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான், “கடவுளே, எனக்குப் பலம் கொடுங்கள்”*+ என்று ஜெபம் செய்தேன்.

10 பின்பு, மெகேதபேலின் பேரனும் தெலாயாவின் மகனுமான செமாயாவைப் பார்க்கப் போனேன். அவன் அவனுடைய வீட்டில் அடைபட்டுக் கிடந்தான். என்னைப் பார்த்ததும், “எதிரிகள் உங்களைக் கொலை செய்ய வருகிறார்கள், அதுவும் இன்றைக்கு ராத்திரியே வரப்போகிறார்கள். அதனால், நாம் உண்மைக் கடவுளுடைய ஆலயத்துக்குள் போய்க் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக இருக்கலாம்” என்று சொன்னான். 11 ஆனால் நான், “என்னை மாதிரி ஒரு ஆள் இப்படி ஓடி ஒளிந்துகொள்ளலாமா? என்னைப் போல ஒருவன் ஆலயத்துக்குள் போனால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?+ நான் வர மாட்டேன்!” என்று சொன்னேன். 12 கடவுள் அவனை அனுப்பியிருக்க முடியாது என்றும், எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல தொபியாவும் சன்பல்லாத்தும்தான்+ அவனுக்குக் கூலி கொடுத்திருக்க வேண்டும் என்றும் நான் புரிந்துகொண்டேன். 13 என்னைப் பயமுறுத்தி பாவம் செய்ய வைக்கத்தான் அவர்கள் அவனுக்குக் கூலி கொடுத்திருந்தார்கள். என் பெயரைக் கெடுத்து, என்னைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

14 “என் கடவுளே, தொபியாவும்+ சன்பல்லாத்தும் செய்கிற அநியாயங்களைப் பாருங்கள். நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும்கூட என்னை எப்போதும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சும்மா விடாதீர்கள்” என்று நான் ஜெபம் செய்தேன்.

15 மொத்தம் 52 நாட்களில், அதாவது எலூல்* மாதம் 25-ஆம் நாளில், மதில் கட்டி முடிக்கப்பட்டது.

16 அதைக் கேள்விப்பட்ட எதிரிகளும், அதைப் பார்த்த சுற்றுவட்டார ஜனங்களும் ரொம்பவே அவமானப்பட்டுப்போனார்கள்.+ எங்கள் கடவுளுடைய உதவியால்தான் இந்த வேலையை முடித்தோம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். 17 அந்த நாட்களில், யூதாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்+ தொபியாவுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தார்கள், தொபியாவும் அவர்களுக்குப் பதில் அனுப்பி வைத்தான். 18 யூதாவில் நிறைய பேர் அவனை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், அவன் ஆராகின் மகனாகிய+ செக்கனியாவுக்கு மருமகனாக இருந்தான். அதோடு, அவனுடைய மகன் யெகோனான், பெரகியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்தான். 19 அந்த முக்கியப் பிரமுகர்கள் தொபியாவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பின்பு, நான் சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்துவார்கள். உடனே, தொபியா என்னை மிரட்டி கடிதங்கள் அனுப்புவான்.+

7 மதில் கட்டி முடிக்கப்பட்டதும்+ நான் அதற்குக் கதவுகளை வைத்தேன்.+ பின்பு, வாயிற்காவலர்களையும்+ பாடகர்களையும்+ லேவியர்களையும்+ நியமித்தேன். 2 எருசலேமை நிர்வகிக்கும் பொறுப்பை, என் சகோதரன் அனானிக்கும்+ கோட்டைத்+ தலைவர் அனனியாவுக்கும் கொடுத்தேன். அனனியா மிகவும் நம்பகமானவர், மற்றவர்களைவிட அதிக பயபக்தியுள்ளவர்.+ 3 நான் அவர்கள் இரண்டு பேரிடமும், “வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல்கள் திறக்கப்படக் கூடாது. இருட்டுவதற்கு முன்பே வாயிற்காவலர்கள் அவற்றின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போட வேண்டும். எருசலேமில் குடியிருக்கிற ஜனங்களிலிருந்து நீங்கள் காவலர்களைத் தேர்ந்தெடுத்து, சிலரைக் காவல் இடங்களிலும் மற்றவர்களை அவரவர் வீட்டுக்கு முன்னாலும் நிறுத்துங்கள்” என்று சொன்னேன். 4 நகரம் பெரிதாகவும் விசாலமாகவும் இருந்தது. ஆனால், அங்கு கொஞ்சம் பேர்தான் குடியிருந்தார்கள்,+ ஒருசில வீடுகள்தான் கட்டப்பட்டிருந்தன.

5 அந்தச் சமயத்தில், முக்கியப் பிரமுகர்களையும் துணை அதிகாரிகளையும் ஜனங்களையும் ஒன்றுகூட்டி அவர்களுடைய பெயர்களை வம்சாவளிப் பட்டியலில் பதிவு செய்வதற்கு+ என் கடவுள் என் உள்ளத்தைத் தூண்டினார். அப்போது, முதலில் வந்தவர்களுடைய வம்சாவளிப் பட்டியலின் புத்தகத்தை நான் பார்த்தேன். அதில் இப்படி எழுதியிருந்தது:

6 மாகாணத்தைச் சேர்ந்த இந்த ஜனங்களை நேபுகாத்நேச்சார் ராஜா+ பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போயிருந்தான்.+ அவர்கள் அங்கிருந்து எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பி வந்து அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+ 7 அவர்கள் எல்லாரும் செருபாபேல்,+ யெசுவா,+ நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பாணா ஆகியவர்களுடன் திரும்பி வந்திருந்தார்கள்.

திரும்பி வந்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை இதுதான்:+ 8 பாரோஷின் வம்சத்தார் 2,172; 9 செப்பத்தியாவின் வம்சத்தார் 372; 10 ஆராகின் வம்சத்தார்+ 652; 11 பாகாத்-மோவாபின் பரம்பரையில்+ வந்த யெசுவா மற்றும் யோவாபின் வம்சத்தார்+ 2,818; 12 ஏலாமின் வம்சத்தார்+ 1,254; 13 சத்தூவின் வம்சத்தார் 845; 14 சக்காயின் வம்சத்தார் 760; 15 பின்னூயின் வம்சத்தார் 648; 16 பெபாயின் வம்சத்தார் 628; 17 அஸ்காத்தின் வம்சத்தார் 2,322; 18 அதோனிகாமின் வம்சத்தார் 667; 19 பிக்வாயின் வம்சத்தார் 2,067; 20 ஆதினின் வம்சத்தார் 655; 21 அதேரின் வழிவந்த எசேக்கியாவின் வம்சத்தார் 98; 22 ஆசூமின் வம்சத்தார் 328; 23 பேசாயின் வம்சத்தார் 324; 24 ஆரீப்பின் வம்சத்தார் 112; 25 கிபியோனின் வம்சத்தார்+ 95; 26 பெத்லகேம் மற்றும் நெத்தோபா ஊர் ஆண்கள் 188; 27 ஆனதோத் ஊர்+ ஆண்கள் 128; 28 பெத்-அஸ்மாவேத் ஊர் ஆண்கள் 42; 29 கீரியாத்-யெயாரீம்,+ கெப்பிரா, மற்றும் பேரோத் ஊர்+ ஆண்கள் 743; 30 ராமா மற்றும் கெபா ஊர்+ ஆண்கள் 621; 31 மிக்மாஸ் ஊர்+ ஆண்கள் 122; 32 பெத்தேல்+ மற்றும் ஆயி ஊர்+ ஆண்கள் 123; 33 மற்றொரு நேபோ ஊரின் ஆண்கள் 52; 34 மற்றொரு ஏலாமின் வம்சத்தார் 1,254; 35 ஆரீமின் வம்சத்தார் 320; 36 எரிகோ ஊர் ஆண்கள் 345; 37 லோது, ஆதீத், மற்றும் ஓனோ ஊர்+ ஆண்கள் 721; 38 சேனாகா ஊர் ஆண்கள் 3,930.

39 குருமார்கள்:+ யெதாயாவின் வம்சத்தாராகிய யெசுவாவின் குடும்பத்தார் 973; 40 இம்மேரின் வம்சத்தார் 1,052; 41 பஸ்கூரின் வம்சத்தார்+ 1,247; 42 ஆரீமின் வம்சத்தார்+ 1,017.

43 லேவியர்கள்:+ ஒதாவியாவின் வழிவந்த கத்மியேலின் வம்சத்தாரான+ யெசுவாவின் வம்சத்தார் 74. 44 பாடகர்கள்:+ ஆசாபின்+ வம்சத்தார் 148. 45 வாயிற்காவலர்கள்:+ சல்லூமின் வம்சத்தார், அதேரின் வம்சத்தார், தல்மோனின் வம்சத்தார், அக்கூபின்+ வம்சத்தார், அதிதாவின் வம்சத்தார், மற்றும் ஷோபாயின் வம்சத்தார் மொத்தம் 138 பேர்.

46 ஆலயப் பணியாளர்கள்:*+ சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார், 47 கேரோசின் வம்சத்தார், சீயாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார், 48 லெபானாவின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், 49 ஆனானின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், 50 ராயாவின் வம்சத்தார், ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், 51 காசாமின் வம்சத்தார், ஊத்சாவின் வம்சத்தார், பசெயாவின் வம்சத்தார், 52 பெசாயின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபிஷசீமின் வம்சத்தார், 53 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார், 54 பஸ்லீத்தின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார், 55 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார், 56 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தார்.

57 சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தார்:+ சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெரிதாவின் வம்சத்தார், 58 யாலாவின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், 59 செப்பத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், பொகெரேத்-செபாயிமின் வம்சத்தார், ஆமோனின் வம்சத்தார். 60 ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும் மொத்தம் 392 பேர்.

61 தெல்-மெலா, தெல்-அர்சா, கேருப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து சிலர் வந்தார்கள். ஆனால், தந்தைவழிக் குடும்பத்தையும் பூர்வீகத்தையும் பற்றிய அத்தாட்சிகள் அவர்களிடம் இல்லை. அதனால், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.+ அவர்களுடைய விவரம்: 62 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், மற்றும் நெகோதாவின் வம்சத்தார் 642 பேர். 63 குருமார்களின் வம்சத்தார்: அபாயாவின் வம்சத்தார், அக்கோசின் வம்சத்தார்,+ பர்சிலாவின்+ வம்சத்தார்; இந்த பர்சிலா, கீலேயாத்தியனான பர்சிலாவின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்ததால் அவளுடைய குடும்பப் பெயரால் அழைக்கப்பட்டார். 64 இவர்கள் எல்லாரும் தங்களுடைய வம்சாவளியை உறுதிசெய்ய பதிவேடுகளைத் தேடினார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் குருமார்களாகச் சேவை செய்யும் தகுதியை இழந்தார்கள்.+ 65 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும்+ வைத்து கடவுளை விசாரிக்கும்வரை மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள் எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று+ ஆளுநர்*+ சொல்லிவிட்டார்.

66 சபையார் மொத்தம் 42,360 பேர்.+ 67 அவர்களைத் தவிர வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும்+ 7,337 பேர்; பாடகர் பாடகிகள்+ 245 பேர். 68 குதிரைகள் 736, கோவேறு கழுதைகள்* 245, 69 ஒட்டகங்கள் 435, கழுதைகள் 6,720.

70 தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் கட்டுமான வேலைக்காக நன்கொடைகளைக் கொடுத்தார்கள்.+ ஆளுநர்* 1,000 தங்கக் காசுகளையும்* 50 கிண்ணங்களையும் குருமார்களுக்கான 530 அங்கிகளையும்+ நன்கொடையாகத் தந்தார். 71 தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் 20,000 தங்கக் காசுகளையும் 2,200 வெள்ளிக் காசுகளையும்* நன்கொடையாகத் தந்தார்கள். 72 மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும் 2,000 வெள்ளிக் காசுகளையும் குருமார்களுக்கான 67 அங்கிகளையும் கொடுத்தார்கள்.

73 குருமார்களும் லேவியர்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும்+ ஆலயப் பணியாளர்களும்* பொது ஜனங்களில் சிலரும் மற்றவர்களும் அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+ ஏழாம் மாதம் ஆரம்பிப்பதற்குள்,+ இஸ்ரவேலர்கள் எல்லாருமே அவரவர் நகரங்களில் குடியேறியிருந்தார்கள்.+

8 ‘தண்ணீர் நுழைவாசலின்’+ எதிரில் இருந்த பொது சதுக்கத்தில் ஜனங்கள் எல்லாரும் ஒருமனதாகக் கூடிவந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலம் யெகோவா கொடுத்திருந்த திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து வரும்படி நகலெடுப்பவராகிய* எஸ்றாவை+ அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 2 அது ஏழாம் மாதம் முதல் நாள்.+ குருவாகிய எஸ்றா சபையாகக்+ கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், கேட்டு புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாகத் திருச்சட்டத்தை எடுத்துவந்தார். 3 ‘தண்ணீர் நுழைவாசலின்’ எதிரில் பொது சதுக்கத்தில் கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாக விடியற்காலை தொடங்கி மத்தியானம்வரை அவர் அதைச் சத்தமாக வாசித்தார்.+ எல்லாரும் திருச்சட்ட புத்தகத்தின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள்.+ 4 நகலெடுப்பவராகிய* எஸ்றா, அந்த நாளுக்காகவே செய்யப்பட்ட மரத்தாலான ஒரு மேடைமேல் நின்றுகொண்டிருந்தார். அவருடைய வலது பக்கத்தில் மத்தித்தியா, சேமா, ஆனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா ஆகியவர்களும், அவருடைய இடது பக்கத்தில் பெதாயா, மீஷாவேல், மல்கீயா,+ ஆசூம், அஸ்-பதானா, சகரியா, மெசுல்லாம் ஆகியவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.

5 உயரமான மேடையில் நின்றுகொண்டிருந்த எஸ்றா, ஜனங்கள் எல்லாரும் பார்க்கும்படி அந்தப் புத்தகத்தைத் திறந்தார். உடனே, எல்லாரும் எழுந்து நின்றார்கள். 6 அப்போது எஸ்றா, மகத்துவமுள்ள உண்மைக் கடவுளாகிய யெகோவாவைப் புகழ்ந்தார். உடனே ஜனங்கள் எல்லாரும், “ஆமென்! ஆமென்!”*+ என்று சொல்லி, தங்கள் கைகளை வானத்துக்கு நேராக விரித்தார்கள். பின்பு, யெகோவாவுக்கு முன்பாக மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள். 7 அதன்பின் யெசுவா, பானி, செரெபியா,+ யாமின், அக்கூப், சபெதாய், ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபத்,+ ஆனான், பெலாயா ஆகிய லேவியர்கள் திருச்சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள்.+ ஜனங்களும் நின்றுகொண்டே அதைக் கேட்டார்கள். 8 இப்படி, எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.*+

9 திருச்சட்டத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள். அதனால் ஆளுநராக* இருந்த நெகேமியாவும், நகலெடுப்பவரும்* குருவுமான எஸ்றாவும்,+ ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்த லேவியர்களும் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்.+ அதனால் வருத்தப்படாதீர்கள், அழாதீர்கள்” என்று சொன்னார்கள். 10 பின்பு நெகேமியா அவர்களிடம், “நீங்கள் போய் நல்ல நல்ல உணவு வகைகளைச் சாப்பிடுங்கள், இனிப்பான பானங்களைக் குடியுங்கள், ஒன்றுமே இல்லாதவர்களுக்குப் பலகாரங்களை அனுப்பி வையுங்கள்.+ இந்த நாள் நம் எஜமானுக்குப் பரிசுத்தமான நாள். அதனால் சோகமாக இருக்காதீர்கள். யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”* என்று சொன்னார். 11 லேவியர்களும், “அழாதீர்கள்! இது பரிசுத்தமான நாள், வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி ஜனங்களை அமைதிப்படுத்தினார்கள். 12 உடனே ஜனங்கள் எல்லாரும், சாப்பிடவும் குடிக்கவும் பலகாரங்களைக் கொடுக்கவும் கொண்டாடி மகிழவும்+ அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் தங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டார்கள்.+

13 இரண்டாம் நாளில், திருச்சட்ட வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்காக, தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் குருமார்களும் லேவியர்களும் நகலெடுப்பவராகிய* எஸ்றாவைச் சூழ்ந்துகொண்டார்கள். 14 ஏழாம் மாதப் பண்டிகையின்போது+ இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் தங்க வேண்டுமென்று மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்ததை அப்போது அவர்கள் தெரிந்துகொண்டார்கள். 15 அதோடு, எல்லா நகரங்களிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம், “திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே மலைப்பகுதிக்குப் போய் ஒலிவ மரக் கிளைகளையும், எண்ணெய் மர* கிளைகளையும், குழிநாவல் மரக் கிளைகளையும், பேரீச்ச ஓலைகளையும், மற்ற அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டுவந்து கூடாரங்களை அமையுங்கள்” என்று அறிவிப்பு செய்ய வேண்டுமென்ற+ விஷயத்தையும் தெரிந்துகொண்டார்கள்.

16 அதன்படியே, ஜனங்கள் போய் அடர்ந்த மரக் கிளைகளைக் கொண்டுவந்து தங்கள் மொட்டைமாடிகளிலும், முற்றங்களிலும், உண்மைக் கடவுளுடைய ஆலயப் பிரகாரங்களிலும்,+ ‘தண்ணீர் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும், ‘எப்பிராயீம் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும் கூடாரங்களை அமைத்தார்கள். 17 இப்படி, எருசலேமுக்குத் திரும்பி வந்த சபையார் எல்லாரும் கூடாரங்களை அமைத்து அதில் தங்கினார்கள். நூனின் மகனான யோசுவாவின்+ நாளிலிருந்து அந்த நாள்வரை இஸ்ரவேலர்கள் அவ்வளவு சிறப்பாக அந்தப் பண்டிகையைக் கொண்டாடியதே இல்லை. சந்தோஷத்தில் தேசமே களைகட்டியது.+ 18 முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை, உண்மைக் கடவுளின் திருச்சட்ட புத்தகம் தினமும் வாசிக்கப்பட்டது.+ ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. எட்டாம் நாளில், திருச்சட்டத்தின்படியே ஒரு விசேஷ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.+

9 அந்த மாதம் 24-ஆம் நாளில் இஸ்ரவேலர்கள் கூடிவந்தார்கள். துக்கத் துணி* உடுத்திக்கொண்டு, தங்கள்மேல் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு, விரதம் இருந்தார்கள்.+ 2 இஸ்ரவேலர்கள் மற்ற தேசத்தாரைவிட்டுப் பிரிந்து நின்று,+ தாங்களும் தங்கள் முன்னோர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டார்கள்.+ 3 பின்பு அவர்கள் அங்கேயே நின்று, அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை மூன்று மணிநேரத்துக்கு சத்தமாக வாசித்தார்கள்.+ அடுத்த மூன்று மணிநேரத்துக்குத் தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டும், தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை வணங்கிக்கொண்டும் இருந்தார்கள்.

4 யெசுவா, பானி, கத்மியேல், ஷெபனியா, புன்னி, செரெபியா,+ பானி, கெனானி ஆகியவர்கள் லேவியர்களின் மேடையில் நின்றுகொண்டு,+ சத்தமாக தங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டினார்கள். 5 யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, ஷெபனியா, பெத்தகியா ஆகிய லேவியர்கள் இப்படிச் சொன்னார்கள்: “எழுந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை என்றென்றும் புகழுங்கள்.+ எங்கள் கடவுளே, உங்களுடைய மகிமையான பெயரை இவர்கள் புகழட்டும். உங்கள் பெயரை நாங்கள் எவ்வளவு புகழ்ந்தாலும் போற்றினாலும் போதாது.

6 யெகோவாவே, நீங்கள் ஒருவர்தான் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும், ஏன் வானாதி வானத்தையும், அதன் படைகளையும்,* பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்கள். நீங்கள்தான் எல்லா உயிர்களையும் வாழ வைக்கிறீர்கள். வானத்திலுள்ள படைகள்* உங்களுக்கு முன்னால் தலைவணங்குகின்றன. 7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான். 8 ஆபிரகாம் நெஞ்சார விசுவாசம் வைத்திருந்ததை நீங்கள் பார்த்து,+ கானானியர்களுக்கும் ஏத்தியர்களுக்கும் எமோரியர்களுக்கும் பெரிசியர்களுக்கும் எபூசியர்களுக்கும் கிர்காசியர்களுக்கும் சொந்தமான தேசத்தை அவருடைய சந்ததிக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தீர்கள்.+ நீங்கள் நீதியுள்ளவர் என்பதால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினீர்கள்.

9 எகிப்தில் எங்கள் முன்னோர்கள் பட்ட பாடுகளைப் பார்த்தீர்கள்,+ செங்கடலுக்கு முன்னால் அவர்கள் கதறிய கதறலைக் கேட்டீர்கள். 10 பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் அவனுடைய ஜனங்களும் எங்கள் முன்னோர்களிடம் அகங்காரத்தோடு* நடந்துகொண்டதால்,+ அவர்களுக்கு எதிராக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தீர்கள்.+ இப்படி, உங்கள் பெயருக்கு இன்றுவரை புகழ் சேர்த்திருக்கிறீர்கள்.+ 11 எங்கள் முன்னோர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்தீர்கள், அவர்கள் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.+ ஆனால் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தவர்களை, கொந்தளிக்கும் கடலுக்குள் கல்லைத் தூக்கி எறிவதுபோல் தூக்கி எறிந்தீர்கள்.+ 12 பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டினீர்கள், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டினீர்கள்.+ 13 பரலோகத்திலிருந்து சீனாய் மலைக்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசினீர்கள்.+ நீதியான தீர்ப்புகளையும் நம்பகமான* சட்டங்களையும் அருமையான விதிமுறைகளையும் கட்டளைகளையும் கொடுத்தீர்கள்.+ 14 உங்களுடைய பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தி,+ உங்கள் ஊழியராகிய மோசே மூலம் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்கள். 15 அவர்களுக்குப் பசியெடுத்தபோது வானத்திலிருந்து உணவைக் கொடுத்தீர்கள்,+ தாகமெடுத்தபோது கற்பாறையிலிருந்து தண்ணீரைத் தந்தீர்கள்.+ நீங்கள் கொடுப்பதாக உறுதிமொழி தந்த தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னீர்கள்.

16 ஆனால், எங்கள் முன்னோர்கள் அகங்காரமாக நடந்தார்கள்,+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்,+ உங்கள் கட்டளைகளை அலட்சியம் செய்தார்கள். 17 உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+ 18 அவர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, ‘நம்மை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்’+ என்று சொன்னபோதிலும், உங்களைத் துளியும் மதிக்காமல் பல அக்கிரமங்கள் செய்தபோதிலும், 19 அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினீர்கள். நீங்கள் அவர்களை வனாந்தரத்திலேயே விட்டுவிடவில்லை.+ பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டுவதையும், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டுவதையும் நிறுத்திவிடவில்லை.+ 20 அவர்கள் விவேகத்தோடு* நடந்துகொள்வதற்காக உங்களுடைய அருமையான சக்தியைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு மன்னாவைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்கள்.+ 21 வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை.

22 அவர்களுக்கு ராஜ்யங்களையும் தேசங்களையும் பகுதி பகுதியாகப் பங்குபோட்டுக் கொடுத்தீர்கள்.+ அதனால் எஸ்போனின்+ ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும்+ பாசானின் ராஜாவாகிய ஓகின்+ தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். 23 அவர்களுடைய வம்சத்தாரை வானத்து நட்சத்திரங்களைப் போலப் பெருக வைத்தீர்கள்.+ பின்பு, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக உறுதிமொழி கொடுத்திருந்த தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+ 24 அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ அங்கு வாழ்ந்துவந்த கானானியர்களை நீங்கள் அவர்கள்முன் தோற்கடித்தீர்கள்.+ அந்த கானானியர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும் இஷ்டம்போல் நடத்தும்படி அவர்கள் கையில் விட்டுவிட்டீர்கள். 25 மதில் சூழ்ந்த நகரங்களையும்+ செழிப்பான தேசத்தையும்+ அவர்கள் கைப்பற்றினார்கள். நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும்,+ காய்த்துக் குலுங்கும் மரங்களையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள். திருப்தியாகச் சாப்பிட்டு கொழுகொழுவென்று ஆனார்கள். நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

26 நீங்கள் இவ்வளவு செய்தும், உங்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினார்கள்.*+ உங்களிடம் திருந்தி வரும்படி எச்சரித்த உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். உங்களைத் துளியும் மதிக்காமல் அக்கிரமம் செய்தார்கள்.+ 27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+

28 ஆனால், பிரச்சினை தீர்ந்தவுடனேயே அவர்கள் மறுபடியும் கெட்ட வழியில் போனார்கள்,+ நீங்கள் மறுபடியும் அவர்களை எதிரிகளின் பிடியில் விட்டுவிட்டீர்கள்.+ அந்த எதிரிகள் அவர்களை ஆட்டிப்படைத்தபோது* திரும்ப உங்களிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள்.+ நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டு மிகுந்த இரக்கத்தோடு மறுபடியும் மறுபடியும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+ 29 திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி நீங்கள் எச்சரித்தபோதும், அவர்கள் அகங்காரத்தோடு உங்கள் கட்டளைகளை மீறினார்கள்;+ வாழ்வளிக்கும் விதிமுறைகளைப்+ பின்பற்றாமல் பாவம் செய்தார்கள். உங்கள் வழிக்குத் திரும்பிவர விடாப்பிடியாக மறுத்தார்கள், உங்கள் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தார்கள். 30 நீங்கள் எத்தனையோ வருஷங்களாகப் பொறுமையோடு+ தீர்க்கதரிசிகளை அனுப்பி எச்சரித்துக்கொண்டே இருந்தீர்கள். ஆனால், அவர்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. கடைசியில், மற்ற தேசத்தாரின் கையில் அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ 31 அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள்.

32 மகத்துவமுள்ள எங்கள் கடவுளே, மாவல்லவரே, அற்புதமானவரே, ஒப்பந்தத்தைக் காப்பவரே, மாறாத அன்பைக் காட்டுபவரே,+ அசீரிய ராஜாக்களின் நாளிலிருந்து+ இந்த நாள்வரை நாங்களும் எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும்+ குருமார்களும்+ தீர்க்கதரிசிகளும்+ முன்னோர்களும் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அற்பமாக நினைக்காதீர்கள். 33 எங்களுக்கு வந்த துன்பங்களுக்காக உங்களை நாங்கள் குற்றப்படுத்த முடியாது. நீங்கள் நீதியுள்ளவர். நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள். நாங்கள்தான் கெட்ட வழியில் நடந்தோம்.+ 34 எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும் குருமார்களும் முன்னோர்களும் உங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, உங்களுடைய கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* காதுகொடுத்துக் கேட்கவில்லை. 35 அவர்கள் தங்களுடைய ராஜ்யத்தில் வாழ்ந்து, நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்த காலத்திலும் சரி, நீங்கள் தந்த வளமான, விசாலமான தேசத்தில் குடியிருந்த காலத்திலும் சரி, உங்களுக்குச் சேவை செய்யவோ+ கெட்ட பழக்கங்களைவிட்டு விலகவோ இல்லை. 36 அதனால், இன்று நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.+ எந்தத் தேசத்தின் விளைச்சலையும் வளங்களையும் அனுபவிக்கும்படி எங்கள் முன்னோர்களைக் குடிவைத்தீர்களோ அந்தத் தேசத்தில் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். 37 நாங்கள் பாவங்கள் செய்ததால் வேறு ராஜாக்களுக்கு எங்களை அடிமைகளாக்கிவிட்டீர்கள். எங்கள் தேசத்தின் அமோக விளைச்சலை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.+ எங்களையும் எங்கள் ஆடுமாடுகளையும் இஷ்டம்போல் அடக்கி ஆளுகிறார்கள். நாங்கள் தவியாய்த் தவிக்கிறோம்.

38 அதனால், நாங்கள் உறுதியான தீர்மானத்தோடு ஓர் ஒப்பந்தத்தை+ எழுதி வைத்திருக்கிறோம். எங்கள் அதிகாரிகளும் லேவியர்களும் குருமார்களும் தங்கள் முத்திரையைப் போட்டு அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.”+

10 முத்திரை போட்டு+ அதை உறுதிப்படுத்தியவர்கள் இவர்கள்தான்:

அகலியாவின் மகனும் ஆளுநருமான* நெகேமியா,

சிதேக்கியா, 2 செராயா, அசரியா, எரேமியா, 3 பஸ்கூர், அமரியா, மல்கீயா, 4 அத்தூஸ், ஷெபனியா, மல்லூக், 5 ஆரீம்,+ மெரெமோத், ஒபதியா, 6 தானியேல்,+ கிநேதோன், பாருக், 7 மெசுல்லாம், அபியா, மியாமின், 8 மாசியா, பில்காய், செமாயா; இவர்கள் எல்லாரும் குருமார்கள்.

9 அதை உறுதிப்படுத்திய லேவியர்கள் இவர்கள்தான்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாத் வம்சத்தில் வந்த பின்னூய், கத்மியேல்,+ 10 ஷெபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், 11 மிக்கா, ரேகோப், அஷபியா, 12 சக்கூர், செரெபியா,+ ஷெபனியா, 13 ஒதியா, பானி, பெனினு.

14 அதை உறுதிப்படுத்திய ஜனங்களின் தலைவர்கள் இவர்கள்தான்: பாரோஷ், பாகாத்-மோவாப்,+ ஏலாம், சத்தூ, பானி, 15 புன்னி, அஸ்காத், பெபாய், 16 அதோனியா, பிக்வாய், ஆதின், 17 அதேர், எசேக்கியா, ஆசூர், 18 ஒதியா, ஆசூம், பேசாய், 19 ஆரீப், ஆனதோத், நெபாய், 20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், 21 மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, 22 பெலத்தியா, ஆனான், ஆனாயா, 23 ஓசெயா, அனனியா, அசூப், 24 அல்லோகேஸ், பில்கா, சோபேக், 25 ரெகூம், அஷபனா, மாசெயா, 26 அகியா, ஆனான், ஆனன், 27 மல்லூக், ஆரீம், பாணா.

28 குருமார்கள், லேவியர்கள், வாயிற்காவலர்கள், பாடகர்கள், ஆலயப் பணியாளர்கள்,* திருச்சட்டத்தைப் பின்பற்றுவதற்காக மற்ற தேசத்தாரைவிட்டு வந்தவர்கள்,+ அவர்களுடைய மனைவிகள், பிள்ளைகள், விவரம் தெரிந்தவர்கள்* ஆகிய எல்லாரும் 29 தங்களுடைய சகோதரர்களோடும் முக்கியப் பிரமுகர்களோடும் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசே மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தையும் எஜமானாகிய யெகோவாவின் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விதிமுறைகளையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதாக வாக்குறுதி கொடுத்து,* 30 “நாங்கள் மற்ற தேசத்தாருக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம், அவர்களிடமிருந்து பெண் எடுக்கவும் மாட்டோம்.+

31 விற்பனை செய்வதற்காக அவர்கள் தங்களுடைய சரக்குகளையும் தானியங்களையும் ஓய்வுநாளிலோ+ வேறெந்தப் பரிசுத்த நாளிலோ+ கொண்டுவந்தால் நாங்கள் அவற்றை வாங்க மாட்டோம். ஏழாம் வருஷத்தில் விவசாயம் செய்ய மாட்டோம்,+ நாங்கள் கொடுத்த கடன்களையெல்லாம் ரத்து செய்துவிடுவோம்.+

32 நாங்கள் ஒவ்வொருவரும் வருஷா வருஷம் எங்கள் கடவுளின் ஆலயச் சேவைக்காக ஒரு சேக்கலில்* மூன்றிலொரு பாகத்தைக் கொடுப்பதாக உறுதிமொழி தருகிறோம்.+ 33 படையல் ரொட்டிகள்,+ தினமும் செலுத்துகிற* உணவுக் காணிக்கைகள்,+ ஓய்வுநாட்களிலும்+ மாதப் பிறப்புகளிலும்*+ செலுத்த வேண்டிய தகன பலிகள், பண்டிகைக்கால விருந்துகள்,+ பரிசுத்தமான பொருள்கள், இஸ்ரவேலர்களின் பாவப் பரிகார பலிகள்+ ஆகியவற்றுக்காகவும், எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் மற்ற எல்லா வேலைகளுக்காகவும் அந்தத் தொகையைக் காணிக்கையாகக் கொடுப்போம்.

34 திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே,+ வருஷா வருஷம் எங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்கான விறகுகளைக் கொண்டுவருவோம். தந்தைவழிக் குடும்பங்களின் வரிசைப்படியே குருமார்களிலும் லேவியர்களிலும் ஜனங்களிலும் யார்யார் எந்தெந்த காலத்தில் அவற்றைக் கொண்டுவர வேண்டுமென்று குலுக்கல் போட்டு தீர்மானிப்போம். 35 வருஷா வருஷம் எங்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலையும் எல்லா வகையான மரங்களின் முதல் கனிகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவோம்.+ 36 திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடி எங்களுடைய மூத்த மகன்களையும் எங்களுடைய கால்நடைகளின்+ முதல் குட்டிகளையும் கன்றுகளையும் எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்கிற குருமார்களிடம் கொண்டுவருவோம்.+ 37 எங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவு,*+ காணிக்கைகள், எல்லா வகையான மரங்களின் பழங்கள்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவற்றை எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளுக்கு+ எடுத்து வருவோம். அதுமட்டுமல்லாமல், எங்களுடைய எல்லா வேளாண்மை நகரங்களிலிருந்தும் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கிற லேவியர்களுக்காக+ எங்களுடைய நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்திலொரு பாகத்தைக் கொண்டுவருவோம்.

38 லேவியர்கள் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கும்போது ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் அவர்களோடு இருப்பார்கள். லேவியர்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து கடவுளுடைய ஆலயத்தின்+ சேமிப்பு* அறைகளில் வைப்பார்கள். 39 தானியம், புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகிய காணிக்கைகளை+ இஸ்ரவேலர்களும் லேவியர்களும் அங்கு கொண்டுவருவார்கள். அந்த அறைகளில்தான் ஆலயப் பாத்திரங்கள் வைக்கப்படும். சேவை செய்கிற குருமார்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும் அங்குதான் தங்குவார்கள். நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்”+ என்று சொன்னார்கள்.

11 ஜனங்களின் தலைவர்கள் எருசலேமில்+ குடியிருந்தார்கள். ஆனால் ஜனங்களைப் பொறுத்தவரை, பத்துப் பேரில் ஒருவர் அந்தப் பரிசுத்த நகரத்தில் குடியிருப்பதற்காக குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதி ஒன்பது பேர் அவரவர் நகரங்களிலேயே குடியிருந்தார்கள். 2 எருசலேமில் குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த ஆட்கள் எல்லாரையும் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.

3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+

4 அதோடு யூதா, பென்யமீன் ஜனங்களில் சிலர் எருசலேமில் குடியிருந்தார்கள்.) யூதா ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: பாரேசின் வம்சத்தில்+ வந்த மகலாலெயேலுக்குப் பிறந்த செப்பத்தியாவின் எள்ளுப்பேரனும் அமரியாவின் கொள்ளுப்பேரனும் சகரியாவின் பேரனும் உசியாவின் மகனுமான அத்தாயா, 5 சேலாவியனான சகரியாவுக்குப் பிறந்த யோயாரிபின் மகனான அதாயாவின் எள்ளுப்பேரனும் ஹசாயாயின் கொள்ளுப்பேரனும் கொல்லோசேயின் பேரனும் பாருக்கின் மகனுமான மாசெயா. 6 எருசலேமில் குடியிருந்த பாரேசின் வம்சத்தைச் சேர்ந்த திறமையான ஆண்கள் மொத்தம் 468 பேர்.

7 பென்யமீன் ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: யெசாயாவுக்குப் பிறந்த இத்தியேலின் மகனான மாசெயாவின் எள்ளுப்பேரனும் கொலாயாவின் கொள்ளுப்பேரனும் பெதாயாவின் பேரனும் யோவேத்தின் மகனுமான மெசுல்லாமின் மகன் சல்லு,+ 8 கப்பாய், சல்லாய் என மொத்தம் 928 பேர். 9 சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுடைய கண்காணியாக இருந்தார், நகரத்தின் அடுத்த கண்காணியாக அசெனூவாவின் மகன் யூதா இருந்தார்.

10 குருமார்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: யோயாரிபின் மகன் யெதாயா, யாகீன்,+ 11 உண்மைக் கடவுளுடைய ஆலய அதிகாரிகளில் ஒருவரான அகிதூப்புக்குப்+ பிறந்த மெராயோத்தின் எள்ளுப்பேரனும் சாதோக்கின் கொள்ளுப்பேரனும் மெசுல்லாமின் பேரனும் இல்க்கியாவின் மகனுமான செராயா, 12 ஆலய வேலை செய்த அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 822 பேர். மல்கீயாவுக்குப் பிறந்த பஸ்கூரின்+ மகனான சகரியாவின் எள்ளுப்பேரனும் அம்சியின் கொள்ளுப்பேரனும் பெல்லியாவின் பேரனும் எரோகாமின் மகனுமான அதாயா, 13 தந்தைவழிக் குடும்பத் தலைவர்களான அவருடைய சகோதரர்கள் என மொத்தம் 242 பேர். இம்மேரின் எள்ளுப்பேரனும் மெசில்லேமோத்தின் கொள்ளுப்பேரனும் அகசாயின் பேரனும் அசரெயேலின் மகனுமான அமாசசாய், 14 பலசாலிகளாகவும் தைரியசாலிகளாகவும் இருந்த அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 128 பேர். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த சப்தியேல் அவர்களுக்குக் கண்காணியாக இருந்தார்.

15 லேவியர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: புன்னியின் எள்ளுப்பேரனும் அஷபியாவின் கொள்ளுப்பேரனும் அசரீக்காமின் பேரனும் அசூப்பின் மகனுமான செமாயா,+ 16 உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் வெளிவேலைகளைக் கவனித்துவந்த லேவியர்களின் தலைவர்களான சபெதாய்+ மற்றும் யோசபத்;+ 17 ஆசாபின்+ கொள்ளுப்பேரனும் சப்தியின் பேரனும் மீகாவின் மகனும் ஜெப நேரத்தில் கடவுளைத் துதித்துப் பாடும் பாடகர் குழுவின்+ இயக்குநருமான மத்தனியா,+ இவருடைய இரண்டாவது சகோதரனான பக்புக்கியா, எதித்தூனின்+ கொள்ளுப்பேரனும் காலாலின் பேரனும் சம்முவாவின் மகனுமான அப்தா. 18 பரிசுத்த நகரத்திலிருந்த லேவியர்கள் எல்லாரும் 284 பேர்.

19 வாயிற்காவலர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: அக்கூப், தல்மோன்,+ அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 172 பேர்.

20 மீதியிருந்த இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் யூதாவின் மற்ற நகரங்களில் அவரவருடைய சொந்த நிலங்களில் குடியிருந்தார்கள். 21 ஆலயப் பணியாளர்கள்*+ ஓபேலில் குடியிருந்தார்கள்.+ சீகாவும் கிஸ்பாவும் ஆலயப் பணியாளர்களுக்கு* அதிகாரிகளாக இருந்தார்கள்.

22 பாடகர்களான ஆசாபின் வம்சத்தில் வந்த மிக்காவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின்+ கொள்ளுப்பேரனும் அஷபியாவின் பேரனும் பானியின் மகனுமான உசீ, எருசலேமில் லேவியர்களின் கண்காணியாக இருந்தார். இவர் உண்மைக் கடவுளுடைய ஆலய வேலைகளைக் கவனித்துவந்தார். 23 பாடகர்களுக்கு அந்தந்த நாள் தேவைப்படுவதை* கொடுக்க வேண்டும் என்று ராஜா கட்டளை கொடுத்திருந்தார்.+ 24 யூதாவின் மகனான சேராகுவின் வம்சத்தில் வந்த மெஷெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களுடைய விவகாரங்கள் எல்லாவற்றிலும் ராஜாவுக்கு ஆலோசனை சொல்பவராக இருந்தார்.

25 யூதா ஜனங்களில் சிலர் கீரியாத்-அர்பாவிலும்+ அதன் சிற்றூர்களிலும்,* தீபோனிலும் அதன் சிற்றூர்களிலும், எகாப்செயேலிலும்+ அதன் கிராமங்களிலும், 26 யெசுவாவிலும், மொலாதாவிலும்,+ பெத்-பாலேத்திலும்,+ 27 ஆத்சார்-சுவாலிலும்,+ பெயெர்-செபாவிலும் அதன் சிற்றூர்களிலும், 28 சிக்லாகுவிலும்,+ மேகோனாவிலும் அதன் சிற்றூர்களிலும், 29 என்-ரிம்மோனிலும்,+ சோராவிலும்,+ யர்மூத்திலும், 30 சனோவாவிலும்,+ அதுல்லாமிலும் அதன் கிராமங்களிலும், லாகீசிலும்+ அதன் நிலங்களிலும், அசெக்காவிலும்+ அதன் சிற்றூர்களிலும் வாழ்ந்துவந்தார்கள். பெயெர்-செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்குவரை+ அவர்கள் குடியிருந்தார்கள்.

31 பென்யமீன் ஜனங்கள் கெபாவிலும்,+ மிக்மாஷிலும், ஆயாவிலும், பெத்தேலிலும்+ அதன் சிற்றூர்களிலும், 32 ஆனதோத்திலும்,+ நோபுவிலும்,+ அனனெயாவிலும், 33 ஆத்சோரிலும், ராமாவிலும்,+ கித்தாயீமிலும், 34 ஆதீத்திலும், செபோயிமிலும், நெபலாத்திலும், 35 லோதுவிலும், கைத்தொழிலாளிகளின் பள்ளத்தாக்காகிய ஓனோவிலும்+ குடியிருந்தார்கள். 36 யூதாவில் வாழ்ந்துவந்த லேவியர்களில் சில பிரிவினர் பென்யமீன் பகுதியில் குடியேறினார்கள்.

12 சலாத்தியேலின்+ மகன் செருபாபேலுடனும்+ யெசுவாவுடனும்+ எருசலேமுக்குத் திரும்பி வந்த குருமார்களும் லேவியர்களும் இவர்கள்தான்: செராயா, எரேமியா, எஸ்றா, 2 அமரியா, மல்லூக், அத்தூஸ், 3 செக்கனியா, ரெகூம், மெரெமோத், 4 இத்தோ, கிநேதோ, அபியா, 5 மியாமின், மாதியா, பில்கா, 6 செமாயா, யோயாரிப், யெதாயா, 7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா. இவர்கள் யெசுவாவின் காலத்தில் தங்களுடைய சகோதரர்களுக்கும் குருமார்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.

8 திரும்பி வந்த லேவியர்கள் இவர்கள்தான்: யெசுவா, பின்னூய், கத்மியேல்,+ செரெபியா, யூதா, நன்றிப் பாடல்களைப் பாடுவதில் தன் சகோதரர்களுக்குத் தலைமைதாங்கிய மத்தனியா.+ 9 இவர்களுடைய சகோதரர்களான பக்புக்கியாவும் உன்னியும் இவர்களுக்கு எதிரில் நின்றுகொண்டு காவல்காத்தார்கள்.* 10 யெசுவாவுக்குப் பிறந்தவர் யொயகீம், யொயகீமுக்குப் பிறந்தவர் எலியாசிப்,+ எலியாசிபுக்குப் பிறந்தவர் யொயதா.+ 11 யொயதாவுக்குப் பிறந்தவர் யோனத்தான், யோனத்தானுக்குப் பிறந்தவர் யதுவா.

12 யொயகீமின் காலத்திலிருந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களான குருமார்கள் இவர்கள்தான்: செராயா+ குடும்பத்துக்கு மெராயா, எரேமியா குடும்பத்துக்கு அனனியா, 13 எஸ்றா+ குடும்பத்துக்கு மெசுல்லாம், அமரியா குடும்பத்துக்கு யெகோனான், 14 மெலிகு குடும்பத்துக்கு யோனத்தான், ஷெபனியா குடும்பத்துக்கு யோசேப்பு, 15 ஆரீம்+ குடும்பத்துக்கு அத்னா, மெராயோத் குடும்பத்துக்கு எல்காய், 16 இத்தோ குடும்பத்துக்கு சகரியா, கிநேதோன் குடும்பத்துக்கு மெசுல்லாம், 17 அபியா+ குடும்பத்துக்கு சிக்ரி, மினியாமீன் குடும்பத்துக்கு . . . ,* மொவதியா குடும்பத்துக்கு பில்தாய், 18 பில்கா+ குடும்பத்துக்கு சம்முவா, செமாயா குடும்பத்துக்கு யெகோனத்தான், 19 யோயாரிப் குடும்பத்துக்கு மத்னாய், யெதாயா+ குடும்பத்துக்கு உசீ, 20 சல்லாய் குடும்பத்துக்கு கல்லாய், ஆமோக் குடும்பத்துக்கு ஏபேர், 21 இல்க்கியா குடும்பத்துக்கு அஷபியா, யெதாயா குடும்பத்துக்கு நெதனெயேல்.

22 குருமார்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது போலவே எலியாசிப், யொயதா, யோகனான், யதுவா+ ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன. பெர்சிய ராஜாவான தரியுவின் ஆட்சிக் காலம் வரையாக அப்படிப் பதிவு செய்யப்பட்டன.

23 எலியாசிப்பின் மகன் யோகனானின் காலம்வரையாக வாழ்ந்த லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அந்தக் காலத்தின் சரித்திரப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. 24 லேவியர்களின் தலைவர்களான அஷபியா, செரெபியா, கத்மியேலின்+ மகன் யெசுவா+ ஆகியவர்களுக்கு எதிரில் அவர்களுடைய சகோதரர்களான காவலர்கள் உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீது கொடுத்த அறிவுரைகளின்படி+ கடவுளுக்குப் புகழும் நன்றியும் செலுத்த தொகுதி தொகுதியாக நின்றார்கள். 25 மத்தனியா,+ பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப்+ ஆகியவர்கள் நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் சேமிப்பு அறைகளைக் காவல்காத்தபடி நின்றார்கள்.+ 26 இவர்கள் யோத்சதாக்குக்குப் பிறந்த யெசுவாவின்+ மகனான யொயகீமின் காலத்திலும், ஆளுநரான நெகேமியாவும் நகலெடுப்பவரான எஸ்றா+ என்ற குருவும் வாழ்ந்த காலத்திலும் சேவை செய்தார்கள்.

27 ஜனங்கள் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாட நினைத்தார்கள். அதனால், ஜால்ராக்களோடும் யாழ்களோடும் மற்ற நரம்பிசைக் கருவிகளோடும் நன்றிப் பாடல்கள்+ பாடுவதற்காக லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 28 பாடகர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்* மாகாணத்திலிருந்தும்,* எருசலேமின் சுற்றுவட்டாரத்திலிருந்தும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலிருந்தும்,+ 29 பெத்-கில்காலிலிருந்தும்,+ கெபா+ மற்றும் அஸ்மாவேத்தின்+ நாட்டுப்புறங்களிலிருந்தும் வந்து கூடினார்கள். ஏனென்றால், பாடகர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்காகக் கிராமங்களை அமைத்திருந்தார்கள். 30 குருமார்களும் லேவியர்களும் தங்களைத் தூய்மைப்படுத்தியதோடு, ஜனங்களையும்+ நுழைவாசல்களையும்+ மதிலையும்+ தூய்மைப்படுத்தினார்கள்.

31 அதன்பின், நான் யூதாவின் தலைவர்களைக் கூப்பிட்டு மதில்மேல் ஏறும்படி சொன்னேன். அதோடு, நன்றிப் பாடல்கள் பாடுகிறவர்களையும் அவர்களோடு ஊர்வலம் போகிறவர்களையும் இரண்டு பெரிய குழுக்களாகப் பிரித்தேன். முதலாவது குழுவினர் ‘குப்பைமேட்டு நுழைவாசலுக்கு’+ நேராக வலது பக்கமாக மதில்மேல் நடந்து போனார்கள். 32 ஒசாயாவும் யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களுக்குப் பின்னால் நடந்து போனார்கள். 33 அவர்களோடு அசரியா, எஸ்றா, மெசுல்லாம், 34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியவர்கள் போனார்கள். 35 எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு அவர்களோடு போன குருமார்களின் வம்சத்தார் இவர்கள்தான்: ஆசாபுக்குப்+ பிறந்த சக்கூரின் மகனான மிகாயாவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின் கொள்ளுப்பேரனும் செமாயாவின் பேரனும் யோனத்தானின் மகனுமான சகரியா, 36 அவருடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி. இவர்கள் உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீதின் இசைக் கருவிகளைப்+ பிடித்துக்கொண்டு போனார்கள். நகலெடுப்பவரான எஸ்றா+ இவர்களுக்கு முன்பாக நடந்து போனார். 37 அவர்கள் எல்லாரும் ‘நீரூற்று நுழைவாசலிலிருந்து’+ ‘தாவீதின் நகரத்துப் படிக்கட்டு’+ வழியாகப் போய், தாவீதின் அரண்மனைக்கு மேலே போகும் மதிலைக் கடந்து, கிழக்கிலுள்ள ‘தண்ணீர் நுழைவாசலை’+ அடைந்தார்கள்.

38 நன்றிப் பாடல்கள் பாடும் இரண்டாவது குழுவினர் எதிர்த் திசையில் மதில்மேல் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் ஜனங்களில் பாதிப் பேரும் நடந்து போனோம். நாங்கள் ‘அடுப்புகளின் கோபுரத்தை’+ கடந்து, ‘அகன்ற மதில்’+ வரைக்கும் போய், 39 அங்கிருந்து ‘எப்பிராயீம் நுழைவாசலை’+ கடந்து ‘பழைய நுழைவாசலுக்கும்,’+ அதன்பின் ‘மீன் நுழைவாசலுக்கும்,’+ ‘அனானெயேல் கோபுரத்துக்கும்,’+ ‘மேயா கோபுரத்துக்கும்,’ ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ போனோம். அதன்பின், ‘காவல் நுழைவாசலில்’ வந்து நின்றோம்.

40 கடைசியில், நன்றிப் பாடல்கள் பாடும் இரண்டு பாடகர் குழுவினரும் உண்மைக் கடவுளின் ஆலயத்துக்கு முன்னால் வந்து நின்றார்கள். அவர்களோடு நானும் துணை அதிகாரிகளில் பாதிப் பேரும், 41 எக்காளங்களை வைத்திருந்த எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகிய குருமார்களும், 42 மாசெயா, செமாயா, எலெயாசார், உசீ, யெகோனான், மல்கீயா, ஏலாம், ஏத்சேர் ஆகியவர்களும் நின்றோம். பாடகர்கள் இஸ்ரகியாவின் தலைமையில் சத்தமாகப் பாடினார்கள்.

43 அன்று அவர்கள் பிரமாண்டமான அளவில் பலிகளைச் செலுத்தி மகிழ்ந்தார்கள்.+ உண்மைக் கடவுள் அவர்களைச் சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டுபோனார். பெண்களும் பிள்ளைகளும்கூட மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.+ எருசலேம் ஜனங்களின் சந்தோஷக் குரல் ரொம்பத் தூரம்வரை கேட்டது.+

44 காணிக்கைகளும்,+ முதல் விளைச்சலும்,+ பத்திலொரு பாகமும்+ வைக்கப்படுகிற சேமிப்பு அறைகளைக்+ கவனிக்க அன்று ஆண்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள், திருச்சட்டத்தின்படி குருமார்களுக்கும் லேவியர்களுக்கும்+ நகரங்களின் வயல்களிலிருந்து வந்து சேர வேண்டிய பங்குகளைச்+ சேகரித்து, அங்கே வைக்க வேண்டியிருந்தது. குருமார்களும் லேவியர்களும் சேவை செய்வதைப் பார்த்து யூதா ஜனங்கள் எல்லாரும் சந்தோஷத்தோடு அவற்றைக் கொடுத்தார்கள். 45 குருமார்களும் லேவியர்களும் தங்கள் கடவுளுடைய வேலைகளையும் தூய்மைச் சடங்குகளையும் செய்தார்கள். பாடகர்களும் வாயிற்காவலர்களும்கூட, தாவீதும் அவருடைய மகன் சாலொமோனும் கொடுத்திருந்த அறிவுரைகளின்படி தங்களுடைய வேலைகளைச் செய்தார்கள். 46 தாவீதும் ஆசாபும் வாழ்ந்த பூர்வ காலத்தில், கடவுளைப் புகழ்ந்தும் அவருக்கு நன்றி சொல்லியும் பாடிய பாடகர் குழுக்களுக்குத் தலைவர்கள் இருந்தார்கள்.+ 47 செருபாபேலின்+ காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் வாழ்ந்த இஸ்ரவேலர்கள், பாடகர்களுக்கும்+ வாயிற்காவலர்களுக்கும்+ தினசரித் தேவையின்படி பங்குகள் கொடுத்தார்கள். லேவியர்களுக்குத் தர வேண்டிய பங்கையும் கொடுத்தார்கள்.+ லேவியர்கள் ஆரோனின் வம்சத்தாருக்குத் தர வேண்டிய பங்கைக் கொடுத்தார்கள்.

13 அன்று ஜனங்களுக்கு முன்னால் மோசேயின் புத்தகம் வாசிக்கப்பட்டது.+ அதில், உண்மைக் கடவுளுடைய சபையின் பாகமாக ஆவதற்கு அம்மோனியர்களையும் மோவாபியர்களையும்+ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது.+ 2 ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு உணவும் தண்ணீரும் தரவில்லை. அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களைச் சபிக்கச் சொல்லி பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+ ஆனால், எங்கள் கடவுள் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+ 3 திருச்சட்டம் வாசிக்கப்பட்டதைக் கேட்டதும், மற்ற தேசத்தார்* எல்லாரும் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டார்கள்.+

4 இதற்குமுன் எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளைக் குருவாகிய எலியாசிப் கவனித்துவந்தார்.+ அவர் தொபியாவின்+ சொந்தக்காரர். 5 அவர் தொபியாவுக்கு ஒரு பெரிய சேமிப்பு* அறையைக் கொடுத்திருந்தார். அதற்குமுன் அங்குதான் உணவுக் காணிக்கையும் சாம்பிராணியும் பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. அதோடு, லேவியர்களுக்கும் பாடகர்களுக்கும் வாயிற்காவலர்களுக்கும் சேர வேண்டிய பத்திலொரு பாகமான* தானியம்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவையும் குருமார்களுக்குக் கொடுக்கப்படுகிற காணிக்கையும் வைக்கப்பட்டிருந்தன.+

6 இதெல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. அர்தசஷ்டா ராஜா+ பாபிலோனை ஆட்சி செய்த 32-ஆம் வருஷத்தில்+ நான் அவரிடம் திரும்பிப் போயிருந்தேன். சில காலத்துக்குப் பிறகு நான் அவரிடம் விடுப்பு கேட்டு வாங்கிக்கொண்டு, 7 மறுபடியும் எருசலேமுக்கு வந்தேன். அப்போது எலியாசிப்+ செய்திருந்த ஒரு பெரிய அநியாயத்தைப் பார்த்தேன். உண்மைக் கடவுளின் ஆலயப் பிரகாரத்திலுள்ள சேமிப்பு* அறை ஒன்றை அவர் தொபியாவுக்குக்+ கொடுத்திருந்தார். 8 அதைப் பார்த்ததும் எனக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால், தொபியாவின் வீட்டுச் சாமான்களையெல்லாம் அந்தச் சேமிப்பு* அறையிலிருந்து வெளியே தூக்கியெறிந்தேன். 9 அதன்பின், சேமிப்பு* அறைகளைச்+ சுத்தம் செய்யும்படி கட்டளை கொடுத்தேன். உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பாத்திரங்களையும் உணவுக் காணிக்கையையும் சாம்பிராணியையும்+ திரும்பவும் அங்கே கொண்டுவந்து வைத்தேன்.

10 லேவியர்களுக்குச் சேர வேண்டிய பங்குகள்+ கொடுக்கப்படாததால்,+ அவர்களும் பாடகர்களும் ஆலய வேலைகளை விட்டுவிட்டு அவரவர் வயல் நிலங்களுக்குப்+ போய்விட்டதையும் தெரிந்துகொண்டேன். 11 அதனால் நான், “உண்மைக் கடவுளுடைய ஆலயத்தை ஏன் இப்படி அலட்சியமாக விட்டிருக்கிறீர்கள்?”+ என்று துணை அதிகாரிகளைக் கடுமையாகத் திட்டினேன்.+ பின்பு, ஆலய வேலைகளை விட்டுவிட்டுப் போனவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து திரும்பவும் அவரவர் பொறுப்பில் வைத்தேன். 12 யூதா ஜனங்கள் எல்லாரும், பத்திலொரு பாகம்+ தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் சேமிப்பு அறைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.+ 13 பின்பு, சேமிப்பு அறைகளைக் கவனிப்பதற்காக குருவான செலேமியாவையும் நகலெடுப்பவரான சாதோக்கையும் லேவியர்களில் ஒருவரான பெதாயாவையும் நியமித்தேன். மத்தனியாவின் பேரனும் சக்கூரின் மகனுமான ஆனானை அவர்களுக்கு உதவியாளராகத் தேர்ந்தெடுத்தேன். இவர்கள் எல்லாரும் நம்பகமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். தங்கள் சகோதரர்களுக்குப் பங்குகளைக் கொடுக்கும் பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்தேன்.

14 என் கடவுளே, நான் செய்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.+ உங்களுடைய ஆலயத்துக்காகவும் அங்கு வேலை செய்கிற ஆட்களுக்காகவும் நான் உண்மையோடு செய்த எதையும் மறந்துவிடாதீர்கள்.+

15 அந்தக் காலத்தில், யூதா ஜனங்கள் ஓய்வுநாளிலே திராட்சரச ஆலைகளில் வேலை செய்வதையும்,+ தானிய மூட்டைகளைக் கொண்டுவந்து கழுதைகள்மேல் ஏற்றுவதையும் பார்த்தேன்.+ அதோடு, திராட்சமதுவையும் திராட்சைப் பழங்களையும் அத்திப் பழங்களையும் மற்ற சரக்குகளையும் அவர்கள் எருசலேமுக்குக் கொண்டுவருவதைப் பார்த்தேன். அதனால், ஓய்வுநாளில் பொருள்களை விற்பனை செய்யக் கூடாதென்று அவர்களை எச்சரித்தேன்.* 16 எருசலேம் நகரத்திலிருந்த தீரு ஜனங்கள், அங்கிருந்த யூதா ஜனங்களிடம் மீன்களையும் எல்லாவித சரக்குகளையும் ஓய்வுநாளில் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.+ 17 அதனால் நான் யூதாவின் முக்கியப் பிரமுகர்களிடம், “நீங்கள் ஓய்வுநாளைக்கூட மதிக்காமல் ஏன் இப்படி அட்டூழியம் செய்கிறீர்கள்? 18 உங்களுடைய முன்னோர்கள் இப்படிச் செய்ததால்தானே நம் கடவுள் நமக்கும் இந்த நகரத்துக்கும் இந்தக் கதியை வர வைத்திருக்கிறார்? இப்போது நீங்கள் ஓய்வுநாளை அவமதித்து,+ இஸ்ரவேலர்கள்மேல் அவருக்கு இருக்கிற கோபத்தை இன்னும் கிளறிவிடுகிறீர்கள்” என்று சொல்லி அவர்களைக் கடுமையாகத் திட்டினேன்.

19 அதனால், ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பே சாயங்காலத்தில் எருசலேமின் கதவுகளை மூடுவதற்கு உத்தரவு போட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை கதவுகளைத் திறக்கக் கூடாது என்றும் கட்டளை கொடுத்தேன். ஓய்வுநாளில் யாரும் சரக்குகளை உள்ளே கொண்டுவராமல் பார்த்துக்கொள்ள என்னுடைய உதவியாளர்கள் சிலரைக் கதவுகளுக்குப் பக்கத்தில் நிறுத்தினேன். 20 அதனால், வியாபாரிகளும் பலவித சரக்குகளை விற்பவர்களும் ஒன்றிரண்டு தடவை ராத்திரியில் எருசலேமுக்கு வெளியே காத்துக் கிடந்தார்கள். 21 நான் அவர்களிடம், “எதற்காக ராத்திரி நேரத்தில் இப்படி மதிலுக்கு வெளியே காத்துக் கிடக்கிறீர்கள்? இன்னொரு தடவை உங்களை இங்கே பார்த்தால், ஆட்களை வைத்துத் துரத்தியடிப்பேன்” என்று எச்சரித்தேன். அதன் பிறகு, ஓய்வுநாளில் அவர்கள் அந்தப் பக்கம் வரவே இல்லை.

22 லேவியர்கள் தங்களைத் தவறாமல் தூய்மைப்படுத்திக்கொண்டு, நகர நுழைவாசல்களைக் காவல்காத்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமான நாளாக அனுசரிக்க வேண்டும்+ என்று சொன்னேன். என் கடவுளே, இந்த விஷயத்துக்காகவும் என்னை நினைத்துப் பாருங்கள். எப்போதும் போல இப்போதும் அளவுகடந்த அன்போடு* எனக்கு இரக்கம் காட்டுங்கள்.+

23 அந்த நாட்களில் யூதர்கள் அஸ்தோத்தியர்களிலும்+ அம்மோனியர்களிலும் மோவாபியர்களிலும்+ பெண் எடுத்திருந்ததைத்+ தெரிந்துகொண்டேன். 24 அவர்களுடைய பிள்ளைகளில் பாதிப் பேர் அஸ்தோத் மொழியிலும் மீதிப் பேர் மற்ற மொழிகளிலும் பேசினார்கள். ஆனால், அவர்களில் யாருக்குமே யூதர்களின் மொழி தெரியவில்லை. 25 அதனால் நான் அவர்களைக் கடுமையாகத் திட்டினேன், சபித்தேன்; சிலரை அடித்து,+ அவர்களுடைய முடியைப் பிடுங்கினேன். அதோடு, மற்ற தேசத்தாருக்குப் பெண் கொடுக்கப்போவதில்லை என்றும், அவர்கள் நடுவிலிருந்து தங்களுக்கோ தங்களுடைய மகன்களுக்கோ பெண் எடுக்கப்போவதில்லை என்றும் கடவுள்மேல் சத்தியம் செய்து கொடுக்கும்படி சொன்னேன்.+ 26 பின்பு, “மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்ததால்தானே இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் பாவம் செய்தார்? அவரைப் போல ஒரு ராஜா வேறு எங்குமே இருந்ததில்லை.+ அவரைக் கடவுள் நேசித்ததால்தான்+ இஸ்ரவேல் தேசம் முழுவதற்கும் ராஜாவாக்கினார். அப்படிப்பட்டவரையே மற்ற தேசத்துப் பெண்கள் பாவம் செய்ய வைத்துவிட்டார்கள்.+ 27 நீங்களும்கூட மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டு நம்முடைய கடவுளுக்குத் துரோகம் செய்திருக்கிறீர்களே.+ நீங்கள் இவ்வளவு கேவலமாக நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை” என்றேன்.

28 தலைமைக் குரு எலியாசிப்பின்+ மகனான யொயதாவின்+ மகன்களில் ஒருவன், ஓரோனியனான சன்பல்லாத்தின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்ததால் அவனை என்னிடமிருந்து துரத்தியடித்தேன்.

29 என் கடவுளே, குருத்துவச் சேவையையும் குருமார்களோடும் லேவியர்களோடும் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும்+ அவர்கள் எப்படி அவமதித்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

30 மற்ற தேசத்தாருடைய சகவாசத்தை அடியோடு விட்டுவிட்டு சுத்தமாக வாழ்வதற்கு நான் எல்லாருக்கும் உதவினேன். குருமார்களையும் லேவியர்களையும் மறுபடியும் அவரவர் வேலையில் நியமித்தேன்.+ 31 முதல் விளைச்சலைக் கொண்டுவரவும், அந்தந்த காலங்களில் விறகுகளைக் கொண்டுவரவும் ஏற்பாடு செய்தேன்.+

என் கடவுளே, என்னைப் பிரியத்தோடு நினைத்துப் பாருங்கள்.+

அர்த்தம், “‘யா’ ஆறுதலளிக்கிறார்.” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

வே.வா., “சூசா.”

வே.வா., “அரண்மனையில்.”

நே.மொ., “என் தகப்பன் வீட்டாரும்.”

வே.வா., “எச்சரித்ததை.”

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

நே.மொ., “இதயம்தான்.”

அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”

வே.வா., “ராஜ பூங்காவின்.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”

நே.மொ., “நன்மை செய்யும் என் கடவுளுடைய கை எப்படி என்மேல் இருந்தது.”

வே.வா., “எருசலேமில் உங்கள் நினைவாக ஒன்றும் இருக்காது.”

வே.வா., “புனிதப்படுத்தி.”

அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”

நே.மொ., “1,000 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

அர்த்தம், “கால்வாய்.”

அல்லது, “பக்கத்திலுள்ள.”

வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”

வே.வா., “அறைக்கு.”

வே.வா., “நிதனீமியர்களும்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்; அர்ப்பணிக்கப்பட்டவர்களும்.”

வே.வா., “இதயப்பூர்வமாக.”

வே.வா., “சுமை சுமக்கிறவர்கள்.”

நே.மொ., “யூதா ஜனங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.”

நே.மொ., “அவர்களுடைய மனைவிகளும்.”

வே.வா., “கப்பம் கட்டுவதற்காக.”

அதாவது, “மாதந்தோறும் வாங்குகிற 1 சதவீத பங்கு.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

வே.வா., “ராஜாவுக்காக வேலை.”

நே.மொ., “என் கைகளைப் பலப்படுத்துங்கள்.”

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”

வே.வா., “நிதனீமியர்களும்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்; அர்ப்பணிக்கப்பட்டவர்களும்.”

வே.வா., “திர்ஷாதா.” இது ஒரு மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.

இவை பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்தவை.

வே.வா., “திர்ஷாதா.” இது ஒரு மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.

நே.மொ., “தங்க திராக்மாவையும்.” இவை கிரேக்க வேதாகமத்தில் வரும் திராக்மா அல்ல. 8.4 கிராம் எடையுள்ள, பெர்சிய நாட்டு தங்க தாரிக் காசுகள் என்று கருதப்படுகிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

மூலமொழியில், “மினாவையும்.” எபிரெய வேதாகமத்தில், ஒரு மினா என்பது 570 கிராம் எடையுள்ளது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

வே.வா., “நிதனீமியர்களும்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்; அர்ப்பணிக்கப்பட்டவர்களும்.”

வே.வா., “எழுத்தராகிய.”

வே.வா., “எழுத்தராகிய.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்! அப்படியே ஆகட்டும்!”

வே.வா., “ஜனங்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் வாசித்தார்கள்.”

வே.வா., “திர்ஷாதாவாக.” திர்ஷாதா என்பது மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.

வே.வா., “எழுத்தரும்.”

வே.வா., “உங்களுக்குப் பலம்.”

வே.வா., “எழுத்தராகிய.”

நே.மொ., “பைன் மர.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

நட்சத்திரங்களையும் குறிக்கலாம், தேவதூதர்களையும் குறிக்கலாம்.

நட்சத்திரங்களையும் குறிக்கலாம், தேவதூதர்களையும் குறிக்கலாம்.

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

வே.வா., “சத்தியத்தின்.”

வே.வா., “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”

வே.வா., “கனிவும்.”

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”

நே.மொ., “தங்களுக்குப் பின்னால் தூக்கியெறிந்தார்கள்.”

வே.வா., “நொறுக்கியபோது.”

வே.வா., “கனிவும்.”

வே.வா., “நினைப்பூட்டுதல்களையும்.”

வே.வா., “திர்ஷாதாவுமான.” திர்ஷாதா என்பது ஒரு மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.

வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”

அல்லது, “புரிந்துகொள்ளும் வயதிலுள்ளவர்கள்.”

நே.மொ., “ஒரு உறுதிமொழிக்கும் சாபத்துக்கும் தங்களை உட்படுத்திக்கொண்டு.” அதாவது, “உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால் தங்களுக்குச் சாபம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டு.”

ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

வே.வா., “வழக்கமான.”

வே.வா., “முதலாம் பிறையிலும்.”

நே.மொ., “கொரகொரப்பான மாவு.”

வே.வா., “சாப்பாட்டு.”

வே.வா., “சாப்பாட்டு.”

வே.வா., “நிதனீமியர்களும்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்; அர்ப்பணிக்கப்பட்டவர்களும்.”

வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”

வே.வா., “நிதனீமியர்களுக்கு.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களுக்கு; அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு.”

வே.வா., “அன்றாடப் படியை.”

வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்.”

அல்லது, “சேவை செய்தார்கள்.”

அநேகமாக, எபிரெய மூலப்பிரதியில் இங்கு ஒரு பெயர் இல்லை.

வே.வா., “பயிற்சி பெற்ற பாடகர்கள்.”

அதாவது, “யோர்தானைச் சுற்றியிருந்த மாகாணத்திலிருந்தும்.”

வே.வா., “கலப்புத் திருமணத்தில் பிறந்தவர்கள்.”

வே.வா., “சாப்பாட்டு.”

வே.வா., “சாப்பாட்டு.”

வே.வா., “தசமபாகமான.”

வே.வா., “சாப்பாட்டு.”

வே.வா., “சாப்பாட்டு.”

வே.வா., “சாப்பாட்டு.”

அல்லது, “பொருள்களை விற்பனை செய்யக் கூடாதென ஓய்வுநாளில் அவர்களை எச்சரித்தேன்.”

வே.வா., “மாறாத அன்போடு.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்